பாவண்ணன்
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ச்சியாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்கள் தம்மளவில் கருத்துநிலைத் தெளிவுடன் கூடிய படைப்புச் செழுமையுடன் தான் இயங்கி வருகின்றார்கள். இவர்கள் தமக்கான வளமும் தளமும் எத்தகையது என்பதை நுட்பமாக வாசிப்பனுபவம் ஆக்குகின்றனர். இது வாழ்வனுபவமாகவும் நீட்சி பெறுகிறது. இத்தகைய படைப்பாளி களில் ஒருவரே பாவண்ணன்.

இவர் எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ் இலக்கியச் சூழலில் உள்நுழைந்து இன்றுவரை தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் இயங்கி வருகிறார். தமக்கான படைப்புக் கருத்துநிலைத் தெளிவு இலக்கிய வளத்தின் ஊடுபாவாக மேற்கிளம்பி வாசகப் பரப்பில் புதுப்புது அனுபவமாகத் தொற்ற வைப்பதில் இவருக்குத் தனித்தன்மை உண்டு.

'ஒரு படைப்பு என்பதை ஒரு பக்கமாகவும் சமூகம் எனும் மக்கள் கூட்டத்தை மறு பக்கமாகவும் பார்க்க வேண்டாம். என்னதான் முக்கியமான எழுத்தாக இருந்தாலும், அதை ஒரு வாசகன் தனிமையில்தான் படிக்கின்றான். அவனைப் பொருத்தமட்டில் அது ஒரு அந்தரங்கமான அனுபவம். ஒரு எழுத்து ஒரு வாசகன் என்கிற நிலையில் தான் உறவு நீடிக்கிறது. ஒரு எழுத்தை வாசிக்கும் போது அதன் சாரத்தை அறியும் வாசகன் அதன் வலிமையைத் தன் வலிமையாக்கிக் கொள்கிறான். அப்புள்ளியை நோக்கி விவாதிக்க விழையும் தருணங்களில் அவன் பார்வை விரிவும் கூர்மையும் பெறுகிறது. பார்வையிலே ஏற்படும் மாற்றம் அணுகு முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு வாசகன் கோடிக்கணக்கான மானுட சமூகத்தில் ஓர் அங்கம் என்கிற நிலையில், அவன் அணுகும் முறையில் ஏற்படக் காரணமாகிறது எழுத்து. சமூக மாற்றத்தில் இது முக்கியமான பகுதி என்கிற வகையில் எழுத்துக்கும் சமூகத்துக்குமான உறவு இன்னும் கூடுதலான வலிமையடைகிறது. சமூகத்துக்கும் எழுத்துக்குமான உறவை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.' இவ்வாறு பாவண்ணன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் எழுத்துக்கும் சமூகத்துக்கும் உறவு எத்தகையது என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். இவ்வாறு பாவண்ணன் கூறிய இந்தக் கருத்துகளில் இருந்தே இவரது படைப்புலகம் பற்றிய தேடுதலில் நாம் விளக்கத்தை நுண்மையாக நோக்க முடியும். இந்தத் தெளிவுக்கேற்பவே இவரது படைப்பாக்க முறைமை உள்ளது. வாசகப் பரப்பில் ஏற்படுத்தும் உணர்கை சமூகம் சார்ந்த பார்வையில் அந்தந்த வாசகரது அறிவு, அனுபவம் சார்ந்தே புலப்படுகின்றது. இது அகத்தூண்டுதல் விசாரணைக்கான தருணங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. இதனையே இவரது படைப்புலகம் தாங்கியுள்ளது.

பொதுவாக பாவண்ணன் அகத்தூண்டுதல் இருந்தால் தான் படைப்பாகச் செயற்பாட்டில் இயங்குவார். 'என் கண் பார்க்கிற ஏதோ ஒரு காட்சி அல்லது காதால் கேட்கும் ஒரு சொல் எங்கோ உறங்கிக் கிடக்கிற ஒன்றை உசுப்பி விடுகிறது. இந்தப் புரட்டிப் போடுதலில் எப்போதாவது ஒரு படிமம் கிடைத்து விடுகிறது. இது கிடைக்கிற தருணம்தான் என் வாழ்வில் இன்பமான தருணம். அந்தப் படிப்பில் பித்துப்பிடித்ததைப் போல மனம் வார்த்தைகளைக் கோர்த்துக் கோர்த்து அலைபாயும். எழுதுவதற்கான பித்து வரவேண்டும் என்பது தான் முக்கியம்."

ஆக அகத்தூண்டுதலின் பாய்ச்சல் பித்து மனம் சார்ந்து இயங்குவதற்கான தருணங்களை வாழ்வியல் தரிசனமாக முன் வைக்கிறது. பாவண்ணனின் படைப்புலகம் இதைத்தான் எமக்கு மெய்ப்பிக்கிறது. மனித உறவுகள் பற்றிய விரிந்த அவதானம் மிகக் கூர்மையாகவே இவரிடம் வெளிப்படுகிறது. இங்கே படைப்பாளியின் நோக்கு நிலையும் தெளிவாகிறது. இவரது படைப்புலகத்துடன் நாம் மேற்கொள்ளும் பயணம் எமக்கான பார்வையைத் தரும். அத்துடன் வாழ்வுடன் இணைத்துப் பார்க்கும் பக்குவத்தை நமக்குத் தரும்.

இதைவிட இவரது 'ஆழத்தை அறியும் பயணம்', 'எனக்குப் பிடித்த கதைகள்' போன்ற நூல்கள் தேர்ந்த வாசகரை மட்டுமல்ல, பாவண்ணன் எனும் படைப்பாளியின் பன்முக வாசிப்புத் திறனையும் எமக்குக் காணத் தருகின்றன. மேலும் இவற்றின் மூலம் பாவண்ணனின் வாசகத்தரச் சிறப்பு மட்டுமல்லாது சக படைப்பாளிகளது படைப்பாக்க நுண்மையைத் தரிசிக்கும் அழகியலை அனுபவிக்கும் பாவண்ணனின் பாங்கும் இங்கே சிறப்பாக வெளிப்படுகிறது. எம்மைப் புதிய புதிய இலக்கியப் படைப்பாளிகளை நோக்கிப் பயணிக்கத் தூண்டுகின்றன.

பாவண்ணன் தமிழ் படைப்புலகில் மட்டுமல்ல, கன்னட இலக்கியப் பரப்பிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த ஆற்றலைக் கொண்டவர். இவை எமக்கு வித்தியாசமான படைப்புக் களங்களை அறிமுகம் செய்கின்றன. இந்த ரீதியில் பாவண்ணனின் பங்களிப்பு மதிக்கப்பட வேண்டும்.

இன்று சமகால எழுத்தாளர்களுள் பாவண்ணன் சற்று வித்தியாசமானவர். இவரது நாவல், சிறுகதைகள் வெவ்வேறுபட்ட படைப்புக் களங்களில் வாசகர்களைப் பயணம் செய்யத் தூண்டுகின்றன. இதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதைவிட வாசகப் பரப்பில் ஆர்வம் கொண்டியங்கும் இவரது மனம் அதற்குரிய வெளிப்பாட்டுத் தன்மைகளுக்கு இசைவாகச் செயல்படுகின்றன. இதனை இவரது படைப்புகளுடன் நாம் பரிச்சயம் கொள்ளும் பொழுது நாம் நிச்சயம் உணர்ந்து கொள்ள முடியும்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com