தென்றல் பேசுகிறது
இருபது20 உலகக் கிரிக்கெட் தொடக்கப் போட்டியின் முதல் கோப்பையை மஹேந்திர சிங் தோனியின் தலைமையில் இளமையான இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. அவரது தலைமைப் பண்புகள் சிறப்பானவை. யாருக்கு எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும், அவர்களுக்கு அதற்கேற்ற சுதந்திரம் கொடுத்து ஊக்குவிப்பதும், சற்றே பிசகினால் உடனடியாக வந்து அவர்களுக்கு வழியைத் திருத்தித் தருவதும் தோனியின் பண்புகளாக உள்ளன. ஒவ்வோர் ஆட்டத்திலும் ஓரிரு வீரர்களாவது மிகச் சிறப்பாக ஆடியது மொத்தத்தில் பெரிய வெற்றியாக உருவெடுத்துள்ளது. யுவராஜின் ஆறு சிக்ஸர்கள், ஜோகிந்தர் சிங் ஷர்மாவின் இறுதி ஓவர், ஸ்ரீசாந்தின் இறுதி கேட்ச் என்று பலவற்றைக் குறிப்பிட்டுப் பாராட்டினாலும், இது நிச்சயமாக ஒன்றுபட்டு ஆடிய அணியின் வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை. டெல்லி, மும்பை போன்ற மாநகரங்களிலிருந்து வரும் வீரர்களே ஆதிக்கம் செலுத்தியதும் இந்த முறை மாறியுள்ளது. கேப்டன் தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியைச் சேர்ந்தவர். ஜோகிந்தர் ஷர்மா (ரோதக், ஹரியானா), ருத்ர பிரதாப் சிங் (உ.பி) என்று பல சிறிய ஊர்களிலிருந்து புயலாகப் புறப்பட்டிருக்கிறார்கள் வீரர்கள். இதுவும் வரவேற்கத் தக்கதே. இந்த வெற்றியைப் பற்றிய விவரமான கட்டுரை இந்த இதழில் வெளியாகியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இரானியப் பிரதமர் மஹ்மூத் அஹ்மடினெஜாட் 'எங்களது அணுசக்தித் திட்டம் பற்றிய விவாதத்தை முடிந்து போன ஒன்றாகக் கருதுகிறேன். அதுகுறித்த ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை நிராகரிக்கிறேன். பாதுகாப்பு சபை திமிர்பிடித்த சக்திகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது' என்று கூறியுள்ளார். புஷ் நிர்வாகத்தின் தொடர்பாளர் ஒருவர் 'முடிந்துபோனதாகக் கருதும் ஒரே நபர் மஹ்மூத் மட்டுமே' என்கிறார். சில நாட்களுக்கு முன் பேசிய ·பிரெஞ்சு அதிபர் 'இரான் அணுகுண்டு தயாரிப்பது அந்தப் பகுதிக்கும் உலகத்துக்கும் ஏற்க முடியாத ஆபத்தாகும்' என்று கூறியிருப்பதையும் கவனிக்க வேண்டும். அணுசக்தி பற்றிய இந்திய-அமெரிக்க ஒப்பந்தமும் தொங்கலில் இருக்கிறது. அணுசக்தி, அமைதிக்கோ போருக்கோ, எதுவாக இருந்தாலுமே உலகம் கூர்ந்து கவனிக்கிறது. புதிய நாடுகளின் கையில் அது போய்விடக் கூடாது என்பதில் முன்னரே பெற்றுவிட்ட நாடுகள் கவனம் செலுத்துகின்றன. மதரீதியான பிளவுகளில் உலகம் போர்க்கொடி உயர்த்தும் இந்த நாளில் யார் கையில் எது இருந்தால் ஆபத்து என்று யாராலும் தீர்மானமாகச் சொல்ல இயலவில்லை.

அரை நூற்றாண்டுக் காலமாக ராணுவ ஆட்சியில் இருந்த மியான்மாரில் (பர்மா) ஜனநாயகம் கோரி புத்த பிட்சுக்கள் அமைதிப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள். பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, மியான்மாராக இருந்தாலும் சரி, ராணுவத் தலைமை என்பது இந்த நூற்றாண்டில் ஏற்க முடியாதது. எவ்வளவு குறைபாடுகள் கொண்டதானாலும், தற்போது இருக்கும் அரசியல் அமைப்புகளில் அதிக நன்மையைத் தருவது ஜனநாயகம் தான் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவுக்கு வெகு அருகில் மாவோயிஸ்டுகளின் கையில் சிக்கித் தவிக்கும் நேபாளத்துக்கும் இது பொருந்தும். அங்கு ஏற்பட்டுள்ள தெளிவற்ற நிலைமை மாறியாக வேண்டும். இல்லையென்றால் விரைவில் நேபாளமும் சீனாவின் துணைக்கோள் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. பிறகு இந்தியா எதிரிகளால் மட்டுமே சூழப்பட்டிருக்கும். அமெரிக்காவும் இந்தியாவும் உலகெங்கிலுமுள்ள ஜனநாயக நாடுகளோடு கைகோர்த்து சுதந்திரம் விரும்பும் மக்களின் சுய நிர்ணயத்துக்கு உதவ வேண்டும்.

சகிப்பின்மையும் வன்முறையும் பெருகி வரும் இந்தக் காலத்தில் மஹாத்மா காந்தியை, அவரது பிறந்த நாள் வரும் இந்த மாதத்தில் மட்டுமல்ல, எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

தென்றல் வாசகர்களுக்கு நவராத்திரி, ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகள்!


அக்டோபர் 2007

© TamilOnline.com