இந்திய மண்ணின், சமய, பக்தி உணர்வுக்குச் சமமாக ஒப்பிட்டுச் சொல்ல வேறு ஒன்றுமே இல்லையென்று சொல்லலாம். உணர்ச்சி வெள்ளம் மிகுந்த, அதே சமயத்தில், மிகவும் சாந்தமும், புனிதமும், நிறைந்த, பக்தர்களின் கூட்டமும் இந்தியாவைப் போல் எங்குமே பார்க்கமுடியாது எனலாம்.
மலைகள் மீது ஏறி வரவேண்டுமா....? கல்லையும் முள்ளையும் பொருட்படுத்தாமல் நடந்து வரவேண்டுமா..? கல்லையும் முள்ளையும் பொருட்படுத்தாமல் நடந்து வரவேண்டுமா..? மூச்சை முட்டும் பக்தகோடிகள் நடுவே, நசுக்கப்பட்டு, உடல் முழுவதும், வியர்வை வழிய, வெகுநேரம் காத்திருந்து, அரைநிமிட ஆண்டவன் தரிசனத்துக்காக, கால் நடுக்க, அரை நாள் காத்திருக்க வேண்டுமா...? எதற்கும் அஞ்சுவதில்லை.
தனியாக, கூட்டமாக, இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் பக்திப் பெருக்குடன் வரும் அன்பர்கள், தங்களுக்குத் தெரிந்த வழிபாட்டு முறைகளில், தெரிந்த பக்தித் தோத்திரங்களை மனதிற்குள்ளாகவோ, வாய் விட்டோ சொல்லிக் கொண்டு, நாடு முழுவதும் நிறைந்துள்ள, தங்களுக்குப் பிடித்த தெய்வ வழிபாட்டுத் தலங்களுக்கு தினந்தோறும், இலட்சக்கணக்கில், சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.
''நான் தான் கண்ணன்'' .... கார்மேக வண்ணன்... பார்த்தசாரதி... இன்னும் பல பெயர்களால், உலகின் பல மூலைகளில் உள்ள பக்தர்களால் பிரியமுடன் அழைக்கப்படுபவன். இன்று, வட அமெரிக்க மண்ணிலே, ஒரு பிரகாசமான மேடையில், அழகும் திறமையும் ஒருங்கே பெற்ற நடனமணிகளும், இசைக்குழுவும், பாரதநாடு முழுவதும் உள்ள பல புகழ் இணைந்த புண்ணிய வரலாறுகளை இசை-நடன கோலமாக வரைந்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக, இது போன்ற தனித்தன்மையோடு வழங்கப்படும் பல நிகழ்ச்சிகளை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.... இன்று, 'ஸேன் ஹோஸே' நகரின், 'ரெபர்ட்டுவா' அரங்கத்தில், இந்நிகழ்ச்சியை, கண் இமைக்காமல் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும், இரசிகர்களில் ஒருவனாக நானும்....!''
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும், 'ஸ்ரீ க்ருபா' பரதநாட்டிய நிறுவனத்தின், கவிஞர்களின் கற்பனையில், கண்ணனின் பெருமை (Poetic Visions of Glory), என்னும் நிகழ்ச்சியில், மேலே சொல்லப்பட்ட கற்பனை நிஜமாக இருக்கக் கூடாதா என்று நினைத்திருக்கக் கூடும். இந்நிகழ்ச்சியிலே, பக்தர்கள் தலங்களை நோக்கி பயணிக்காது, பரமனே, பல தலங்களையும், அவர்கள் கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்தி விட்டான்....!
நடன இயக்குநர் திருமதி விஷாலம் ரமணியின், உயரிய கற்பனை வளமும், உழைப்பும், ஆடியவர்களின் மெருகிலேயும், விருவிருப்பான நடனத்திலும், வெளிச்சமாகத் தெரிந்தன. கடினமாகத் தோன்றிய ஜதிக்கோர்வைகளானாலும் சரி, கண்ணசைவில் காட்டும் நவரச பாவங்களானாலும் சரி, இதயத்தில், காதலாகி, கசிந்து கண்ணீர் மல்க வைக்கும் பக்தி இரசமானாலும் சரி, அளவோடும், அழகோடும் அபிநயித்த அத்தனைப் பேரையும், ஆட்டுவித்த நடன அமைப்பாளர் மற்றும், இயக்குநர் திருமதி விஷாலத்தையும் பாராட்டியே தீரவேண்டும்.....! ஒடிஸி நடன மணியான லீனா மொஹந்தியின், அனுபவமும், திறமையும், அவர் ஆடிய, ஜயதேவர் அஷ்டபதி உருப்படியில் (பஸ்யதி திஸி திஸி), பளிச்சென்று தெரிந்தன. பரதநாட்டியத்தோடு சேர்ந்து ஆடிய உருப்படிகளில், இரு நடன அழைப்புகளிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை, இரசிகர்கள், புரிந்து கொள்ளும் வகையிலே அமைத்திருந்தது. மிகவும் அழகான, நேர்த்தியான முயற்சி.
நல்ல குரல் வளமும், ஸ்ருதி, பாவம், லயம் இவற்றோடு இணைந்த திரு. அஷோக் சுப்பிரமணியத்தின் பாட்டு, இந்நிகழ்ச்சியின் மொத்த அழகுக்கு அழகு சேர்த்தது என்றால், மிகையில்லை. உள்ளத்தை ஊடுருவி, உலுக்கக் கூடிய வெண்கலக் குரல்வளம் கொண்ட இளைஞர் இவர். அனுசரணையாக மிருதங்கம் வாசித்த ரமேஷ் ஸ்ரீனிவாசன், அனுபவம் வாய்ந்த பக்கவாத்தியக்காரர். குழலிசை இல்லாமல், கண்ணனைப் பற்றிய நிகழ்ச்சியா...? ரவிதேஜாவின், மோகனக் குழலும், நாகராஜனின் பாந்தமான ஹார்மோனியமும், பாராட்டப்பட வேண்டிய பக்கவாத்தியங்கள்....!
கண்ணனின் திருத்தலங்களாம், ஸ்ரீவில்லிபுத்தூர், குருவாயூர், உடுப்பி, மதுரா, பண்டரிபுரம், புவனேசுவர் போன்ற திருநகரங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவந்த பிரமிப்பை ஏற்படுத்தி விட்டார்கள். குழந்தைக் கிருஷ்ணனாக வந்த வர்ஷிணி ரவி என்னும் சிறுமி, உள்ளங்கவர் கள்ளி, கனகதாசராக வந்த மாளவி மூர்த்தி, கண்ணன் பிறந்த ரோஹிணி நக்ஷத்திரத்தை உவந்து ஆடிய அமிபட், ஆண்டாளின் பக்தியைக் கண்முன்னே நிறுத்திய அபர்ணா சுந்தரம் போன்றவர்கள், குறிப்பிட்டுக் சொல்லக்கூடியவர்கள்.
நடன உருப்படிகளுக்கிடையே கொடுக்கப்பட்ட விவரணங்கள், இரத்தினச் சுருக்கமாகவும், இயல்பாகவும் அமைந்திருக்கலாம். ஒளி அமைப்பிலும், சில இடங்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
ஆக மொத்தம், இந்நிகழ்ச்சி, கண்களுக்கும், காதுகளுக்கும், கருத்துக்கும் நிறைவான நிகழ்ச்சியாக இருந்ததென்பதில், இரு வேறு கருத்துக்கள் இருந்திருக்க முடியாது....!
பூங்கொடி சுப்பிரமணியம் |