செப்டம்பர் 2001 : வாசகர் கடிதம்
தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவின் போது 'தென்றல்' கிடைக்கப் பெற்றேன். இதழ் மிகச் சிறப்பாக ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால், அனைவரும் சுட்டிக் காட்டிய குறை ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.

கட்டுரையாளர்களின் பெயர்கள், பேட்டி கண்டவரின் பெயர் போன்றவை பெரும்பாலும் விடுபட்டுள்ளது. (அல்லது படைப்பின்கீழ் பகுதியில் சிறிய அளவில் இடம் பெறுவது) குறிதூது பலரும் சுட்டிக் காட்டினர். படைப்புகளின் தலைப்புக்கு கீழாகவே படைப்பாளிகளின் பெயர்களுக்கும் இடமளித்தால் நன்றாக இருக்கும். செய்வீர்களா?

லலிதா ஐயர்

*****


ஒவ்வொரு மாதமும் இதழினைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

ஆகஸ்ட் மாத இதழில், வாஞ்சிநாதன் அவர்கள் எழுதிய ''அமெரிக்காவில் பஞ்சபூதங்களுக்குப் பஞ்சம்'' கட்டுரையை மிகவும் அனுபவித்துப் படித்தேன். அவரது கருத்துகள் அனைத்தும் உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.

எங்கள் கால்கள் நிலம் பாவிப்பதில்லை தான்! நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்கிறோம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் அலைந்து கொண்டிருக்கிறோம். குழாய்களில் 24 மணிநேரமும் தண்ணீர் கொட்க் கொண்டிருப்பதால் அது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை. அமெரிக்க வருபவர்கள் அவசியம் எடுத்து வர வேண்டிய 3 அத்தியாவசியப் பொருள்கள் குறித்து அவர் எழுதியிருப்பது உண்மையிலும் உண்மை! அற்புதமான கட்டுரை.

பிரகதா மோகன், கலிபோர்னியா.

*****


அற்புதமாக வெளிவரும் ''தென்றல்'' இதழ் எனை வெகுவாகக் கவர்ந்தது. வாழ்த்துக்கள். தங்களின் நற்பணி என்றென்றும் தொடர விழைகிறேன்.

ராஜா, ·பிரிமாண்ட்.

*****


இந்திய உணவகங்களுக்குச் செல்லும் போது, தங்களின் தென்றல் இதழ்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல தமிழில் அற்புதமாக எழுதப்பட்ட படைப்புகள். தங்களுக்கு எனது வாழ்த்துக்கள். தென்றல் இதழ்களை நேரடியாகப் பெற முடியுமா? என்பது குறித்து தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன். இதன் மூலம் அனைத்து இதழ்களையும் தவறாது படிக்க முடியும் அல்லவா!

சி.எஸ்.வெங்கட்ராமன், பேஏரியா.

*****


தென்றல் இதழினை வாசித்தேன். மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. தென்றல் இதழைத் தொடர்ந்து எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? அது குறித்து தெரியப்படுத்தவும். நன்றி.

கரு. மாணிக்கவாசகம், ஹூஸ்டன், டெக்ஸாஸ். krmanickam@hotmail.com

*****


தமிழகச் செய்திகள் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்த சில கட்டுரைகளை ஆங்கிலத்திலும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

அமெரிக்காவில் உள்ள, தமிழ் மொழியில் அத்தனை புலமை பெற்றிராத தமிழ் இளைஞர்களுக்கு அது மிகப் பயனுள்ளதாக அமைவதோடு, தமிழ் கலாச்சாரத்தை அவர்களுக்கு நினைவூட்டுவதாகவும் அமையும். அவர்களது பெற்றோரின் தாயகம் மற்றும் கலாச்சார அடையாளங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இதுவும் ஓர் குறிப்பிடத்தக்க வழியாக அமையும்.

ஜமுனா விட்டல், நியுஜெர்சி.

*****


தென்றல் இதழினை ரசித்துப் படித்து வருகிறோம். மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எனத அன்னை வெகுவாக விரும்பிப் படித்து வருகிறார். 'மாயாபஜார்' பகுதியில் வெளியாகியுள்ள சில சமையல் குறிப்புகளை முயற்சித்தோம். இதழில் வெளியாகியுள்ள சில விளம்பரங்கள் கூட சுவையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உமா கணபதி, நியூயார்க்.

*****


ஜூலை முதல் வாரத்தில் டெட்ராய்டில் நடந்த தமிழல் மாநாட்டில் கலந்து கொண்டபோது 'தென்றல்' மாதப் பத்திரிகையை முதன் முறையாக படிக்க நேர்ந்தது.

பத்திரிகை இலவசம் என்றாலும் தரமான கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றம் போன்ற பகுதிகளை அமெரிக்கத் தமிழ் மக்களுக்கும் தாய்த் தமிழ்நாட்டின் மக்களுக்கும் தொடர்பு கொள்ளும் வகையில் அமைந்திருப்பதை எல்லோருமே பாராட்ட வேண்டும்.

வாஷிங்டன் வட்டாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த தென்றலுக்கு நானும் சில கட்டுரைகள் எழுதி தொடர்பு கொண்டிருக்கிறேன். இந்த 'தென்றல்' மேற்குக் கடற்கரையிலிருந்த வீச ஆரம்பித்திருக்கிறது. தமிழ்மக்களின் உள்ளத்தைத் தொட்டு. மறுமலர்ச்சி தர ஒத்துழைப்போமாக.

எம்.எஸ். சுவாமிக்கண்ணு, பிலடெல்·பியா PA

© TamilOnline.com