அடிப்படை மாற்றங்கள்
தமிழகத் தேர்தல் முடிவுகள் ஓரளவு எதிர்பார்த்த திசையிலேயே இருக்கின்றன. அஇஅதிமுக வின் பலத்துக்கும் அக்கட்சி மற்றும் கூட்டணி வென்ற வாக்குகளுக்கும், பெற்ற இடங்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு தொகுதிக்கு ஒருவர் (First past the post) என்ற நமது தேர்தல் முறையில் இத்தகைய நிலைகள் வழக்கம்தான். தமிழகத்தை 100 தொகுதிகளாகப் பிரித்து அவற்றில் இப்போது போன்ற தேர்தலையும், அந்நூறு தொகுதிகளில் கட்சி வாரியாகப் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தில் இன்னும் ஒரு 120 - 150 இடங்களை நிரப்பும் முறையைக் கொண்டு வந்தால் நல்லது என்று தோன்றுகிறது. கூட்டணிகள், இடம் மாறும் தலைவர்கள், அணி மாறும் கட்சிகள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வலுவிழக்கவைக்க இம்முறை பயன்படும்.

சென்ற தேர்தநலப் போலவே, இரு அணிகளின் தொலைக் காட்சிகளும் முற்றிலும் மாறுபட்ட 'முடிவுகளை' அறிவித்து வந்தன! பொதிகை ஒளிபரப்பிய நிலையோ இவை இரண்டுக்கும் மாறுபட்டதாய் இருந்தது. சில அறிவிப்பாளர்கள் official party line நிலையில் பேசத் தடுமாறியதைப் பார்ப்பதற்கு வருத்தமாக இருந்தது.

பரபரப்பாக்கப்பட்ட சூழ்நிலையிலும் தேர்தல்களை செம்மையாக நடத்தி முடித்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகின்றன.

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் இடதுசாரிக் கட்சிகள் அடிப்படை மாற்றங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்ததன் சான்றாக உள்ளன. உண்மையில் பயனளிக்கும் நிலச் சீர்திருத்தங்கள் கிராமப் புறங்களில் அவர்களை வேரூன்றச் செய்திருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் அதன் மூலம் சமூக மாற்றம் இரண்டும் பெரிதும் மேற்கு வங்கத்தில் நிதர்சனமாக ஏற்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்திலும் தமிழகத்திலும் இது போன்ற அடிப்படை மாற்றங்களை நிகழ்த்தும் வாய்ப்புக்கள் முன்னர் சில ஆட்சிகளுக்குக் கிடைத்தன; ஆனால் பயன்படுத்தப் படவில்லை.

அமெரிக்க அதிபர் மற்றும் அவரது குழுவினரது குழப்படிகள் நாளொரு தவறும், பொழுதொரு பொய்யுமாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இப்போதோ அவர்களது பொய்களுக்கு, "வெறும் சிறிய தவறுகளே" என்று முலாம் பூசும் வேலையும் பொதுவாகத் திசைதிருப்பும் வேலையும் முழுமுனைப்புடன் ஆரம்பித்துவிட்டது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
ஜூன் 2006

© TamilOnline.com