அரசியலில் எதுவும் நடக்கலாம்
தமிழக அரசியலில் இதுவரை எந்தவொரு முதலமைச்சரும் சந்திக்காத ஜெயலலிதா சந்தித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாதளவிற்கு அவரது வேட்பு மனுத்தாக்கல் சட்டரீதியாக நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பதை இழந்தார்.

ஆனால் தேர்தலில் அதிமுக கூட்டணி அணி பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற்றது. குறிப்பாக அதிமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றது. ஜெயலலிதா முதலமைச்சரானார்.

தொடர்ந்து பதவியில் நீடிக்க அவர் தற்போது ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்றால் மட்டுமே முடியும் என்ற நிலையில் உள்ளார்.

'ஜெ' பதவிக்கு வந்த ஒரு மாதத்தில் திமுகவை பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தார். கருணாநிதி கைது. மத்திய அமைச்சர்கள் கைது, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள்.... என தொடர்ந்த நிகழ்வுகள் மாநில ஆட்சிக்கெதிரான நிலைமைகள் உருவாக காரணமாயிற்று. எப்படியும் 356 சட்டப்பிரிவை பிரயோகித்து மாநில ஆட்சியை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர திமுக தனது பக்கத்தில் இருந்து, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.

விளைவு கலைஞர் கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூன்று போலீஸ் அதிகாரிகளை தில்லிக்கு அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. அத்துடன் டிஜிபி ராஜகோபாலனையும் அனுப்ப உத்தரவிட்டது. தொடர்ந்து அனுப்ப முடியாது என்ற இறுங்குப் பிடியில் ஜெயலலிதா இருந்தார்.

தற்போது ராஜகோபாலனை மட்டும் அனுப்பியுள்ளார். ஆனால் மற்ற மூவரையும் அனுப்ப முடியாது எனவும் தெளிவாக கூறி வருகின்றார்.

மேலும் கலைஞர் கைது விவகாரத்து எதிர்ப்பு தெரிவித்து 'ஆகஸ்ட் 12'இல் திமுக மாபெரும் கண்டன ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தியது. ஊர்வல முடிவில் போலீஸார் கட்டவிழ்த்த வன்முறைத் தாண்டவம் இரத்தச்சுவடு பதித்து வரலாற்றில் மறக்க முடியாத சிறப்பு நாளாக்கி விட்டது.

திமுக தொண்டர்கள் தாக்கப்பட்டு கொலையுண்டது ஒருபுறம்; இதையும் தாண்டி செய்தி சேகரிக்கச் சென்றப் பத்திரிகையாளர்கள் திட்டமிட்டு போலீஸாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத 'கறைபடிந்த அத்தியாயத்தை' வரலாற்றில் எழுதியுள்ளார்.

பொதுவில் ஜெயலலிதாவுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருந்தது இல்லை. இதனை இதுவரையான வரலாறு நிரூபிக்கிறது. ஆகஸ்ட் 12 வன்முறையும் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் பத்திரிகையாளர்கள் தாம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திர இந்தியாவில் பத்திரிகையாளர்கள் 'சுதந்திர தினத்தில்' தமது உரிமைக்காக போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை இதுவே முதல்முறை எனலாம்.

இதுபோன்ற நிகழ்வுகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் எப்படியும் தனது முதல்வர் பதவியை தக்க வைக்கும் முயற்சியில் காய்கள் நகர்த்தத் தொடங்கி விட்டன. எந்த டான்சி நிலபேர ஊழல் வழக்கில் தண்டனை பெற்றாரோ, அந்த வழக்கு தற்போது புதுத்திருப்பம் காண உள்ளது.

உயர்நீதிமன்றம் முன்பு இந்த வழக்கு அப்பீல் உள்ளது. முந்தைய தீர்ப்பை மாற்றியமைக்குமா? ஜெயலலிதாவுக்கு தேர்தலில் நிற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்குமா? போன்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த வழக்குக்கு ஆதாரமாக இருந்த சாட்சி - தங்கவேலு திடீர் பல்டி அடித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சாதகமாக, தான் முன்னர் கூறிய கருத்துக்களை மறுத்து கூறக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

இந்த வழக்கு விவகாரம் இப்போது எல்லாத் தரப்புகளிலும கவனயீர்ப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் பரபரப்பான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அதாவது எம்எல்ஏ ஆகாமல் ஒருவர் மந்திரி பதவியில் 6 மாதத்துக்கு மேல் நீடிக்க முடியாது. அப்படி செய்வது சட்ட விரோதம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. இதனால் தமிழக முதல்வராக இருந்து வரும் ஜெயலலிதா நவம்பர் 14ம் தேதிக்குள் எம்எல்ஏ ஆகாவிட்டால் அதன்பிறகு அவர் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது.

உச்சநீதிமன்றம் இன்னொரு வழக்கில் கூறிய தீர்ப்பும் கவனிப்புக்குரியது. அதாவது, ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டனை விதிக்கப்பட்ட அரசு ஊழியர் உச்சநீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று தீர்ப்பு கூறப்பட்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படாதவரை... பதவி பொறுப்பில் இருக்கக் கூடாது.

ஆகவே இந்த இரண்டு தீர்ப்புகளும் ஜெயலலிதாவுக்கு பொருந்தக் கூடியது என்கிற வாதம் வலுவாக உள்ளது. இந்தத் தீர்ப்புக்களின்படி ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியுமா? முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ள முடியுமா? என்ற கேள்விகள் வலுப்பெற்றுள்ளன.

ஜெயலலிதாவைச் சுற்றி பின்னப்பம் நெருக்கடிகளில் இருந்து எப்படி மீளப் போகிறார் என்பதுதான் தமிழக அரசியலில் பரபரப்புக்குரிய எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புகளை மீறியும் அரசியலில் எதுவும் நடக்கலாம்.

மதுசூதனன்

© TamilOnline.com