மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் : அனில் கபூர்
ஷங்கர் இயக்கியிருக்கும் 'முதல்வன்' படத்தின் இந்தி ஆக்கம் 'நாயக்' அனில் கபூர், ராணி முகர்ஜி, அம்ரீஷ்பூரி, சுஷ்மிதா சென் போன்ற இந்தி பிரபலங்கள் நடித்த இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. எதற்கு சென்னையில்? அதற்கு விளக்கமளிக்கும் விதமாக அனில் கபூர் கூறினார்.

''படத்தில் பங்கு பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் முக்கியக் காரணம். ஷங்கர் ஜி, தோட்டா தரணி, கே.வி. ஆனந்த், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகிய அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். படத்தின் வாசகமாக 'நாயக் - எ ரியல் ஹீரோ' போட்டிருக்கிறார்கள். சொல்லப் போனால் நான் சொன்ன இவர்கள்தான் இப்படத்தின் ரியல் ஹீரோக்களின். சென்னைவாசிகளின் உழைப்பு எல்லோருக்கும் தெரியும். இவர்கள் தங்கள் வேலைகளை வழிபடுகிறார்கள். சொல்லப் போனால் சென்னை என் வாழ்க்கையோடு மிகவும் சம்பந்தப்பட்டது. நான் முதன்முதலில் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன். தெலுங்கு படத்திலும் கன்னடப் படத்திலும் முதலில் நடித்திருக்கிறேன். சென்னை எனக்கு சினிமா அடித்தளம். அதனால் தான் இந்த விழாவை இங்கு ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொண்டேன்'' என்றார்.

''சேற்றைப் பூசிக் கொண்டு வெறும் உடம்பில் நடித்தது திரில்லான அனுபவம். அந்தக் காட்சியின் ஒவ்வொரு ஷாட்டிலும் நடிப்பதற்கு முன்னால் மறைவாகக் கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்து கொண்டேன்'' என சென்னையைப் புகழ்ந்து தள்ளினார் அனில்.

'முதல்வனுக்கும்' நாயக்குக்கும் பிரம்மாண்டத்தில் மிக அதிக வித்தியாசம் இருப்பதை விளக்கினார் ஷங்கர். உதாரணத்துக்கு 'முதல்வனில்' ஆயிரக்கணக்கான பானைகளுக்கு நடுவே பாடல்காட்சி எடுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பானைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. 'முதல்வன்' கிராபிக்ஸ் காட்சிகள் ஹாங்காங்கில். இதில் அமெரிக்கா.

''முதல்வன் அரசியல் சம்பந்தப்பட்ட படம். தமிழகத்தின் அரசியல் சூழலுக்கும் வட இந்திய அரசியல் சூழலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆகவே தான் ரீமேக்'' என்றார் ஷங்கர்.

டைம்ஸ் ஆ·ப் இந்தியா பத்திரிகை நிறுவனம் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்மகன்

© TamilOnline.com