'ஆங்கில ரைம்ஸிற்கு இணையான குழந்தைப் பாடல்கள்'
'ஆங்கில ரைம்ஸிற்கு இணையான குழந்தைப் பாடல்கள்' என்ற புத்தகத்தை மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு உருவாக்கியிருக்கிறார் கதிரவன் எழில்மன்னன்.

''என் மகன் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தினம் போகும் நாள் காப்பு (Day care nursery) நிலையத்திலும் ஆங்கிலமே பேசிப் பழகுவதால், தமிழ் பேச வைப்பது பிரம்மப்பிரயத்தனமாகவே இருந்தது. அப்போது நான் நினைத்துப் பார்த்தேன், குழந்தைகள் ஆனந்தத்துடன் தமிழ்க் கற்றுக் கொள்ள ஒரு வழியுண்டா என.

என் மகன் ஆங்கில நர்ஸரிப் பாடல்களை எளிதாகக் கற்பதையும் அதில் அவனுக்குள்ள ஆவலையும் பார்த்தேன். நான் என் சிறு வயதில் திரு. அழ. வள்ளியப்பா எழுதிய பாப்பாப் பாடல்களை ஆனந்தத்துடன் கற்றுக் கொண்டதையும், மற்ற தமிழ்ப் பாடல்களை ஒரு பாரமாகவே எண்ணியதையும் நினைத்துப் பார்த்தேன். ஆங்கில நர்ஸரிப் பாடல்களை அவற்றின் மெட்டிலேயே தமிழில் எழுதினால் அவற்றைப் பாடி, தமிழில் இன்னும் கொஞ்சம் ஆர்வம் பிறக்க வாய்ப்பிருக்கிறது எனத் தோன்றியது.

முதலாவதாக 'Twinkle twinkle litle star' என்னும் பாடலை 'மினுக்கும் மினுக்கும் விண்மீனே' என்று தமிழில் எழுதினேன். என் மகனிடமிருந்து நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதையே என் நண்பர்களிடமும் சொல்லிப் பார்த்தேன். யாவரும் நன்கு ரசித்து மிக்க மகிழ்ச்சியுடன் ஆதரித்தனர். அதன் பிறகு அவ்வப்போது விளையாட்டாக சில ஆங்கில நர்ஸரிப் பாடல்களைத் தமிழில் எழுதினேன்'' என்று இந்தப் புத்தகம் உருவாகியதற்கான காரணம் பற்றி கதிரவன் எழில்மன்னன் குறிப்பிடுகிறார்.

''திரை கடலோடியும் திரவியம் தேடு'' என்றது தமிழ் மொழி. இந்தப் புத்தகம் திரை கடலோடிய தமிழர்களுக்குத் தமிழ்மொழி பழக உதவியாக இருக்குமானால், அதை விட மகிழ்ச்சி எனக்கு ஒன்றுமே இருக்க முடியாது, என்று புத்தகம் எழுதியதற்கான நோக்கத்தையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலத்தில் உள்ள பாடல்களை அப்படியே மொழிபெயர்க்காமல், அதைத் தமிழ்மயப்படுத்தி இருக்கிறார். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமெனில், லண்டன் பாலத்தைப் பற்றிய பாடலை மொழிபெயர்க்கும் போது சென்னை பாலம் என்பதாக ஆக்கியிருக்கிறதைச் சொல்லலாம். ஆங்கிலம் - தமிழ் என இரண்டு மொழியிலும் பாடல்களையும் புத்தகத்தில் தந்திருப்பதால், புரிந்து கொள்ள எளிமையக இருக்கிறது.

பாடல்களுக்கு ஏற்ற மாதிரியான ஓவியர் ஜெயராஜின் ஓவியங்கள் அருமை.

'ஆங்கில ரைம்ஸிற்கு இணையான குழந்தைப் பாடல்கள்' புத்தகத்திலிருந்து சில தமிழ்ப் பாடல்கள்

Twinkle Twinkle Little Star

மினுக்கும் மினுக்கும் விண்மீனே
நீயார் என நான் வியந்தேனே!
உலகின் மேலே உயரத்தில்
வைரம் போலே வானத்தில்
மினுக்கும் மினுக்கும் விண்மீனே
நீயார் என நான் வியந்தேனே!


Two Little Black Birds

இருசிறுகுருவிகள்
மரத்தின் மேலே
இதன் பெயர் கண்ணண்
அதன் பெயர் ராதா
பறந்திடு கண்ணா
பறந்திடு ராதா
மீண்டும் வா கண்ணா
மீண்டும் வா ராதா.


She's Coming Around The Mountain

மலையைச் சுற்றி வருவாள் வரும் போது
மலையைச் சுற்றி வருவாள் வரும் போது
மலையைச் சுற்றி வருவாள் அவள் மலையைச் சுற்றி வருவாள்
அவள் மலையைச் சுற்றி வருவாள் வரும் போது

வருவாள் தேதில் வெண் புரவிகள் ஆறோடு
அவள் வருவாள் தேரில் வெண் புரவிகள் ஆற்றோடு
புரவிகள் ஆறோடு, வெண் புரவிகள் ஆறோடு
அவள் வருவாள் தேரில் வெண் புரவிகள் ஆறோடு

நேரில் சந்திப்போம் அவள் வரும் போது
நாம் நேரில் சென்று சந்திப்போம் அவள் வரும் போது
நேரில் சென்று சந்திப்போம், நேரில் சென்று சந்திப்போம்
நாம் நேரில் சென்று சந்திப்போம் அவள் வரும் போது!


Itsy Bitsy Spider

குட்டி சுட்டி சிலந்தி
குழாய்ல ஏறிச்சு
மழை வந்து கீழே
அடிச்சுத் தள்ளிச்சு
கதிர் வெளியில் வந்து
ஈரம் உலர்த்திச்சு
குட்டி சுட்டி சிலந்தி
மீண்டும் குழாய்ல ஏறிச்சு!


Little Miss Muffet

குட்டிப் பெண் முல்லை
திண்ணை மேல்
இருந்தாள்
களி தின்ன மோருடனே
அங்கு வந்த சிலந்தி
உட்கார்ந்தது அருகில்
ஓடினாள் முல்லை பயத்துடனே!.


Here WE Go Around the Mulberry Bush

மரத்தைச் சுற்றி ஓடுவோம்
ஓடுவோம் ஓடுவோம்
மரத்தைச் சுற்றி ஓடுவோம்
காலை எழுந்தவுடனே

இப்படி நாங்கள் பெருக்குவோம்
பெருக்குவோம், பெருக்குவோம்
இப்படி நாங்கள் பெருக்குவோம்
வாசலை நாம் பெருக்குவோம்

இப்படி நாங்கள் போடுவோம்
போடுவோம், போடுவோம்
இப்படி நாங்கள் போடுவோம்
கோலம் நாங்கள் போடுவோம்

இப்படி நாங்கள் தூவுவோம்
தூவுவோம், தூவுவோம்
இப்படி நாங்கள் தூவுவோம்
கோழித் தீனி தூவுவோம்.


Where is Thumbkin

கட்டை விரல் எங்கே?
கட்டை விரல் எங்கே?
நான் இங்கே, நான் இங்கே?

நீ இன்று நலமா?
நலந்தான் நன்றி!
ஓடிஒளி, ஓடி ஒளி!

சுட்டும் விரல் எங்கே...
நடுவிரல் எங்கே....
மோதிர விரல் எங்கே....
சுண்டு விரல் எங்கே....


சரவணன்

© TamilOnline.com