இளமையாகச் சிந்திக்கிற மா. ஆண்டோ பீட்டர் பதினொரு வருடமாகத் தமிழ்மென்பொருள் தயாரிப்புத் துறையில் பணியாற்றுகிறார். மலேசியாவில் நடைபெற இருககும் தமிழிணைய மாநாட்டின் இந்திய ஒருங்கிணைப்பாளர். கணித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருக்கும் ஆண்டோ பீட்டர் தமிழ் வாயிலாக மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியும் அளித்து வருகிறார். 'இன்டர்நெட் கையேடு', 'டி.டி.பி.', 'கம்ப்யூட்டர் தொழில்கள்' போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். தமிழ்ச் சினிமா டாட் காம் என்னும் இணைய இதழையும் 96-ஆம் வருடத்திலிருந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த இதழ் அச்சில் மாதப் பத்திரிகையாகவும் வருகிறது.
கார்ட்டூன் நெட்வொர்க்கில் தான் பார்த்த படத்தை விவரிக்கும் குழந்தை போல தன்னுடைய ஆரம்ப கால அனுபவங்களை விவரிக்கிறார்.
''எனது தந்தை விறகுக் கடை வைத்திருந்தார். பெரிய வளம் ஏதுமில்லை. 1976-இல் அவர் மறைந்த பிறகு எங்கள் குடும்பம் இன்னும் ஏழ்மையான நிலைக்குத் தள்ளப்பட்டது. நான் படித்து முடித்த பிறகு குஜராத்தில் மத்திய அரசில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் நான் தமிழ்நாட்டில்தான் பணிபுரிய வேண்டும் என்பதால் ஒரு மாதத்தில் அந்த வேலையை உதறி எறிந்து விட்டு சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனமொன்றில் சர்வீஸ் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது தான் கம்ப்யூட்டர் தொடர்பான மொழிகளில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து''.
தனக்குக் கிடைத்த நல்ல தொடக்கத்தை நினைவு கூர்ந்து விட்டு தன்னுடைய அடுத்த கட்ட நகர்வைச் சொல்கிறார்.
''டெஸ்க் டாப் பப்ளிஷிங் தொடர்பான சாப்ட்வேர்களில் நல்ல பயிற்சி கிடைத்து. அந்த நேரம் டிடிபி தொழில்வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரம். போட்டோ டைப் செட்டிங் பரவிக் கொண்டிருந்தது. போட்டோ டைப்செட்டிங்கோடு ஒப்பிடும்போது லேசர் பிரிண்டர் மலிவு என்பதாலும் அச்சுப் பிரதிகள் எடுக்க ஆகும் செலவு மிகவும் குறைவு என்பதாலும் நிறைய டிடிபி நிலையங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. எனவே படிப்படியாக நானே தமிழ் டிடிபி சாப்ட்வேர்களை உருவாக்கினேன். இந்த சாப்ட்வேர்களை விற்பனை செய்வதில் தீவிரமாகச் செயல்பட்டேன். பல பத்திரிகைகளுக்கும் எங்கள் இன்ஸ்கிரிப்ட் தமிழ் சாப்ட்வேர்களை விற்பனை செய்தேன். விண்டோஸ் NT என்ற மென்பொருளுக்கு இந்தியாவில் முதன்முதலில் தமிழை வடிவமைத்து நாங்கள் தான்''.
தனது அடுத்த கட்ட முயற்சியான தமிழ் சினிமாவுக்கான இணைய இதழ் தொடங்கியது பற்றிச் சொல்லும் போது,
''நான் தொடங்கும் போதுள்ள காலத்தில் தமிழ் மின்னிதழ்கள் என்கிற வார்த்தையே தமிழில் கிடையாது. அப்போது கேபிள் டீவி ஆக்கிரமிப்பு செய்திருந்தது தமிழ்நாட்டை. ஒவ்வொரு ஏரியாவிலும் தனித்தனியாக கேபிள் டீ.வி. டிஷ்ஷ¤கள் வைத்து ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த நேரம். நான் தமிழ் சினிமாவுக்கான இணைய இதழினைத் துவங்கினேன்'' என்று குறிப்பிடுகிறார்.
துவங்கிய பிறகு நடந்த பல வேடிக்கையான சம்பவங்களை நினைவுகூர்ந்து அவர்,
''நான் ஆன் லைன் பத்திரிகை துவங்கியிருக்கிறேன் என்று சினிமா PRO களிடம் சொன்ன போது முதலில் அவர்களுக்குப் புரியவில்லை. இரண்டு PROக்களை மாற்றினேன். நான் துவங்கி பிரஸ்மீட் நடத்துவதற்கே மூன்று மாதங்கள் ஆனது. ஒரு குறிப்பிட் பிரபலப் பத்திரிகையொன்று பிரஸ்மீட் நடந்ததைப் பற்றி செய்தி வெளியிட்ட போது புதுத் தமிழ்ப்படத்தின் பூஜை நடந்தது என்று செய்தி வெளியிட்டது. வேறுவழியில்லாமல் சில பத்திரிகையாளர்களை அழைத்து இன்டர்நெட் பற்றி வகுப்பு எடுத்தேன். அந்த வகுப்பில் இன்டர்¦ட் பற்றிய புத்தகமொன்றையும் உருவாக்கி அவர்களுக்கு அளித்தேன்'' என்று அதே அளவு வேடிக்கையுடன் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய இணைய இதழின் முக்கியத்துவம் பற்றி....
''கணியன் டாட் காமிற்கு முதல் தமிழ் இணையத்தளம் என்கிற பெருமை உண்டு. அதே மாதிரி எங்கள் தமிழ்ச்சினிமா டாட் காமை முதல் இணையப் பத்திரிகை என்று சொல்லலாம்''.
சினிமாவுக்கென்று தனியாகவே இணைய இதழ் நடத்துவதன் அவசியம் பற்றி.....
''சினிமாவுக்கென்று நல்ல பத்திரிகைள் தமிழில் இல்லை. தமிழ்ச் சினிமா பாடல்களை முணுமுணுக்காதவர்கள் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? தமிழர்களின் வாழ்வில் 90% சினிமா தான் ஆக்கிரமித்திருக்கிறது. இலக்கியவாதியாக இருந்தால் கூட தமிழ்ப் பாட்டை முணுமுணுக்காமல் இருக்க முடியாது. அல்லது சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளைப் படிக்காமல் இருக்க முடியாது. காதல் கவிதை என்று ஒரு படத்தில் ஒரு காட்சி வரும்; காட்சிப்படி பிரசாந்த் மற்றும் தலைவாசல் விஜய் இருவரும் அறிமுகமே இல்லாமல் ஒரு ஹோட்டலில் எம்.ஜி.ஆர். பாடலை வைத்துத் தான் சந்தித்துக் கொள்வார்கள். அந்தளவிற்கு சினிமா நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கிறது. அதனால் தான் சினிமாவுக்கென்றே பிரத்தியேகமான பத்திரிகையை ஆரம்பித்தேன்''.
கவர்ச்சிப் படங்கள் வெளியிடுவது குறித்து மறுத்துச் சொல்லும் போது,
''என்னுடைய சைட்டில் அப்படிப்பட்ட வல்கரான படங்களை வெளியிடுவதில்லை. நான் நடத்துகிற தமிழ்ச்சினிமா டாட் காம் என்ற பிரிண்ட் பத்திரிகையிலும் வேண்டுமென்றே சினிமா நடிகைகளின் வண்ணப்படங்களைப் போடுவதில்லை. அப்படிப்பட்ட கவர்ச்சிப் படங்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். என்னுடைய சைட்டிலும் சரி, பத்திரிகையிலும் சரி முதல் தர நடிகைகளின் படங்களை மட்டுமே வெளியிடுகிறேன். குடும்பத்தோடு அமர்ந்து என்னுடைய சைட்டைப் பார்வையிடுபவர்களிம் நான் நாகரீகத்தை மெயின்டென் பண்ண நினைக்கிறேன். பெயர் தெரியாத நடிகைகளின் படத்தை வெறும் கவர்ச்சிக்காக நான் ஒரு போது வெளியிட்டதில்லை'' என்று உறுதியாகச் சொல்கிறார்.
சினிமா பத்திரிகைகளை விமர்சனம் செய்பவர்களைப் பற்றிச் சொல்கிறார்.
''சினிமா என்றாலே சிலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது தவறு. சினிமாவைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அது அந்தந்தப் பத்திரிகைகளுக்கு செய்தியாகத் தான் இருக்கிறது. அதையும் வாசகர்கள் விரும்பிப் படிக்கத்தான் செய்கிறார்கள். அப்போது மட்டும் இந்த மாதிரியான சினிமா பற்றி விமர்சனங்கள் வருவதில்லையே ஏன்? உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். சிவாஜி சார் மறைந்த பின்னரும் அவர் தொடர்பான செய்திகள் தான் இன்னும் பத்திரிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் சினிமா பத்திரிகைகளை விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள்.''
தன்னுடைய இணைய தளத்தின் விளம்பர வருமானம் வந்த கதையை விவரித்த அவர்,
''மற்ற இணையத் தளங்களைப் போல ஆரம்பத்தில் எனக்கு விளம்பரங்கள் கிடைக்கவில்லை. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஐரோப்பிய நாடுகளில் எனக்குக் கொஞ்சம் தொடர்புகள் இருந்தன. அதை வைத்துக் கொண்டு தான் கொஞ்சம் கொஞ்சமாக விளம்பரங்கள் பிடிப்பதை டெவலப் செய்து கொண்டேன். இன்றைய நிலையில் தமிழ் இணையப் பத்திரிகைகளுள் என்னுடைய பத்திரிகைக்குத் தான் அதிக விளம்பரங்கள் கிடைக்கின்றன'' என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
தமிழ்ச் சினிமா டாட் காம் வாசகர்களிடம் பெற்றிருக்கும் வரவேற்பைப் பற்றி.......
''ஆறாம் திணை, வெப் உலகம், இன்தாம், சிபி போன்ற இணையப் பத்திரிகைகள் தங்களுடைய பெயரை விளம்பரப்படுத்தவே ஏராளமான பணத்தைச் செலவழித்தன. எனக்கு அந்தப் பிரச்சனை ஏற்படவில்லை. அதுவுமில்லாமல் என்னிடம் அவ்வளவு பொருளாதார வசதியும் இல்லை. என்னுடைய சைட் அதற்குரிய பப்ளிசிட்டியைத் தானாகவே தேடிக் கொள்கிறது. கனடா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரிண்ட் பத்திரிகையும் வருவதால் தானாகவே முன்வந்து அவர்கள் தமிழ்ச் சினிமா டாட் காமைப் பார்வையிடுகிறார்கள். நானும் அவர்கள் ரசிக்கிற மாதிரியாக சினிமா மட்டுமல்லாமல் செய்திகள் மற்றும் இதர விஷயங்களையும் அளித்து வருகிறேன்''.
வலைவாசிகளின் எண்ணிக்கை பற்றி.....
''நான் மற்றவர்களை மாதிரி ஒரு கோடி ஹிட்ஸ் என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. என்னுடைய சைட்டை ஒரு நாளைக்குக் குறைந்தது 16,000 பேர் பார்வையிடுகிறார்கள்.
தற்போதுள்ள விளம்பரங்கள் குறைவாக வருவது, சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை போன்றவைகள் பற்றிச் சொல்கிறார்.
''விளம்பரங்கள் எனக்கும் குறைந்து கொண்டு தான் இருக்கின்றன. காரணம் என்று சொன்னால், இங்கு கண்டதுக்கும் ஒரு வெப்சைட் ஆரம்பித்து விட்டு அனைவரும் போய் அவ்வளவு பேர் பார்க்கிறார்கள். இவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்று சொன்னால் யார் விளம்பரம் தர முன்வருவார்கள். பரதநாட்டியம், குச்சுப்பிடி என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு வெப்சைட். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. பின்னடைவுக்குக் காரணமென்றால், தமிழனிடம் நிலையான பொருளாதாரம் இல்லை. முதலீட்டைப் பொறுத்தவரை வெளிநாடுகளையே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. வெளிநாடுகளில் இணையம் வளர்ச்சியடைந்த போது அதையே நாமும் காப்பியடித்து இங்கு முயற்சி செய்து பணம் சம்பாதிக்க நினைத்தோம். ஆனால் எப்படி அதை நடைமுறைப்படுத்துவது என்பதை நாம் கற்றுக் கொள்ளவில்லை.
இந்தியா ஒரு காப்பியடிக்கிற நாடு. குருட்டுத்தனமாக இந்தத் தொழில்நுட்பத்தையும் காப்பியடித்தோம். ஆரம்பித்த இடத்திலேயே இன்னும் Net சரியான Result தரவில்லை. Result அங்கு வந்த பிறகு நாம் இங்கு முயற்சி செய்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும். அப்புறம் இந்த இயைப் பத்திரிகைகளின் இப்போதைய நிலை சரியாகத் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் குறைவான பார்வையாளர்கள் இருக்கும் போது அளவுக்கதிமாகப் பத்திரிகைளும் மற்ற மீடியாக்களும் இதைப் புகழ்ந்தன. ஆனால் இன்றைய நிலையில் பார்வையாளர்கள் அதிகரித்திருக்கிற போது புகழ்வதில்லை. இகழ்கிறார்கள். அதனாலேயே பின்னடைவு ஏற்பட்ட மாதிரியான தோற்றம் கிடைக்கிறது அவ்வளவு தான்.
சில சைட்கள் அமைதியாகப் பிரபலம் அடைந்து கொண்டுதானிருக்கின்றன. தமிழ் செக்ஸ் டாட் காம் எங்காவது விளம்பரம் செய்திருக்கிறதா? அல்லது புலிகள் நடத்தும் இணையத்தளங்களுக்கு எங்காவது விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறதா? அவையெல்லாம் எப்படிப் பிரபலம் அடைந்தன? என்பதை யோசிக்க வேண்டும். அவை தானாகவே தங்களுக்குரிய விளம்பரத்தைத் தேடிக் கொள்கின்றன. அதே மாதிரி சிலவற்றுக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் எனக்குத் தெரிந்து பாரத் மெட்ரிமோனியல் டாட் காம் என்ற இணையத்தளத்துக்கு வெளிநாட்டு முதலீடு கிடைத்துள்ளது. இந்தத் துறைக்கு வளமையான எதிர்காலம் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது''.
இணையப் பத்திரிகை தவிர்த்து மற்ற கணனித் தமிழ்ப் பணிகள் பற்றிச் சொல்ல முடியுமா? என்று கேட்டதற்கு,
''இன்ஸ்கிரிப்ட் - தமிழ் 2000 பண்ணியிருக்கிறோம். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் பண்ணியிருக்கிறோம். இதற்கு முதலில் பெயராக சித்திரம் என்பதை வைக்கத்தான் தீர்மானித்தோம். ஆனால் சித்திரம் என்றால் சலூனா என்று பலபேர் கேட்டார்கள். அதனால் தான் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தோம். மேலும் அமுதம், தமிழ் டிக்ஸ்னரி, தமிழ் கிளிப்படங்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள், சித்திரங்கள் - ஓவியங்கள் போன்ற சி.டிக்களையும் பண்ணியிருக்கிறோம்'' என்று பட்டியலிடுகிறார்.
இறுதியாக இந்தத் துறையில் தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டைச் சொல்கிறார்.
''தமிழ் கணனித் துறை அல்லாது எந்தத் துறைக்கு நான் போயிருந்தாலும் இந்நேரத்தில் கோடீசுவரனாகியிருப்பேன். அதே போல் தமிழ் சினிமா டாட் காமை ஆங்கிலத்தில் தந்திருந்தாலும் நன்றாக சம்பாதித்து இருப்பேன். ஆனால் அடிப்படையில் எனக்குள்ளிருந்த தமிழுணர்வு தான் என்னை இந்தத் துறைப் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்தது. என்னுடைய அலுவலகத்திலும் 'தமிழை வளர்க்க தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்' என்றே எழுதி வைத்திருக்கிறேன். 80 நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழனுக்கு இன்னும் அடிப்படை புள்ளிவிபரங்கள் கூடக் கிடையாது. இன்னும் பல நாடுகளில் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு செய்தி படித்தேன். திருப்பதியில் 22 அடிமைகள் இருப்பதாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். இப்படி அடிமைகளாக இருக்கும் தமிழினத்தை ஏதாவதொரு வகையில் முன்னேற்ற வேண்டும், அதற்காக நான் ஒரு வழியில் பாடுபடுகிறேன்.''
இந்தத் துறையில் வெற்றி என்று அனைவரும் குறிப்பிட்ட போதும் சரி; பின்னடைவு என்று இப்போது குறிப்பிடும்போதும் சரி; தான் எப்போதும் போலவே கிராஜுவலாக இருப்பதாகவே குறிப்பிடும் மா. ஆண்டோ பீட்டர், ''நான் யாரையும் போட்டியாளர்களாக நினைப்பதில்லை'' என்று மட்டும் இறுதியாகக் கூறுகிறார்.
சந்திப்பு :சரவணன் |