'திரும்பவும் சென்னைக்குத் திரும்பி விடுவேன்!' - பத்மினி ராமச்சந்திரன்
நியூஜெர்சியில் உள்ள பத்மினி ராமச்சந்திரனுடன் கலி·போர்னியாவிலிருந்து தொலைபேசியில் ஒரு பேட்டி......

தமிழில் மும்மூர்த்தி, முத்தமிழ், முக்கனி என்றெல்லாம் மூன்று எண்ணிக்கைக்குத் தனிச் சிறப்புண்டு. அதுபோல நடனமணிகள் மூவர் என்றால் லலிதா, பத்மினி, ராகினி என்பார்கள். நடனமணிகளுள் ஒருவரான நாட்டியப் பேரொளி திருமதி. பத்மினி ராமச்சந்திரனுடன் ஒரு சந்திப்பு.

நீங்கள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டதன் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்?

என்னுடைய ஊர் திருவனந்தபுரம், குருகோபிநாத் நடத்திய 'நாட்டிய கலாலயம்' என்ற நாட்டியப் பள்ளியில் தான் நானும் என் சகோதரி லலிதாவும் கதகளி நாட்டியம் கற்றுக் கொண்டிருந்தோம். குருகோபிநாத் திருவனந்தபுர ஆஸ்தான வித்வானாக இருந்தார். அப்போது எனக்கு நான்கு வயது. டைரக்டர் கே. சுப்ரமணியம் திருவனந்தபுரம் வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் ஆடுவதைப் பார்த்து, பரதநாட்டியம் கற்றுக் கொண்டு ஏன் அரங்கேற்றக் கூடாது என்று கேட்டார். அதற்குப் பின் இப்போது பம்பாயில் இருக்கும் திருவிடைமருதூர் டி.கே.மகாலிங்கம் பிள்ளையை வரவழைத்து வீட்டிலேயே ஒன்றரை ஆண்டுகள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டோம். காலையில் கதகளி, பின்னர் பள்ளிக்கூடம், மீண்டும் மாலையில் கதகளி, அதை முடித்துக் கொண்டு பிறகு பரதநாட்டியம்.

நடன அரங்கேற்றம் பற்றி?......

திருவனந்தபுரத்திலே விக்டோரியா டவுன் ஹாலில் அரங்கேற்றம் நடந்தது. அப்போது எனக்குப் பத்து வயது இருக்கும். திருவனந்தபுரம் 'HIGHNESS' 'சித்திரைத் திருநாள் பலராமவர்மா' வந்திருந்தார். அந்தக் காலத்தில் எல்லாம் இப்போது போல மாதவி ஸ்டைல் டிரெஸ் என்பதெல்¡ம் கிடையாது. ஒன்பது கஜப்புடவை தான். வாத்தியாரே கட்டி விட்டுவிடுவார். அலாரிப்பு, ஜதிஸ்வரம், ஸ்வாதித் திருநாள் தெலுங்கில் எழுதிய ஸரஸிஜாஷி என்ற சப்தம் எல்லாம் நானும் லலிதாவும் ஆடினோம். அரங்கேற்றம் பிரமாதமாக அமைந்தது. ஆனால் நாட்டியம் கற்றுக் கொண்ட காலத்தில் அப்பப்பா! அது சரியில்லை, இது சரியில்லை என்று திட்டு வாங்கி நேரந்தான் அதிகம்.

மலையாளம் உங்களுடைய தாய்மொழி, இருந்தும் எப்படி உங்களால் இவ்வளவு அழகாகத் தமிழ் பேச முடிகிறது?

எங்கள் ஊரையொட்டி கொல்லம், திருநெல்வேலி என்பதால் தமிழ் பேசுவோர் நிறைய வாழ்ந்த பகுதி. நிறைய பேர் தமிழ்க் குடும்பங்கள். அவர்களோடு கொண்ட பழக்கம் தான் காரணம். அப்போது திருவனந்தபுரத்தில் திவானாக இருந்தவர் ஸர்.ஸி.பி. இராமஸ்வாமி ஐயர். எங்கள் ஊர் ராணி பெயர் பார்வதிபாய்.

நாட்டியத்திலிருந்து திரைப்படத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

என்னுடைய மாமா பம்பாய் வெர்ஸோவாவில் கப்பற்படையில் கமாண்டர் ஆக இருந்தவர். அவருக்கு ஆறு பிள்ளைகள். பெண் கிடையாது. அவருக்கு நிறையச் சொத்து இருந்தது. மலேசியாவில் 400/500 ஏக்கர் ரப்பர் தோட்டம் இருந்தது. அதிலிருந்து 1936லிலேயே ரூ. 40,000 வரும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் வீட்டிற்கே மலேயாக் கோட்டை என்று பெயர். அவர் என்னை ஆறுமாத குழந்தையிலே சட்டபூர்வமாக தத்து எடுத்துக் கொண்டார். விடுமுறை காலங்களில் நாங்கள் பம்பாய் போவோம்.

என் மாமாவின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தவர் உதயசங்கர். உலகப்புகழ் வாய்ந்தவர். ரவிசங்கரின் சகோதரர். ஒருமுறை என் மாமா கொடுத்த விருந்தில் உதயசங்கர் கலந்து கொண்டார். அவர் இந்தியில் ஒரு நாட்டியத் திரைப்படம் எடுக்க உத்தேசித்திருந்தார். நான் ஆடுவதைப் பார்த்த அவர் அதில் நடிக்க அழைப்பு விடுத்தார். அதற்காக 1944-இல் சென்னை வந்தோம். எங்களுக்குச் சென்னையில் யாரையும் தெரியாது. அதனால் சுப்ரமணிய மாமா வீட்டிலேயே வந்து தங்கினோம். அப்போது தான் பத்மா சுப்பிரமணியம் பிறந்தார். அவருடைய அரங்கேற்றத்திற்கு என்னுடைய அம்மா சரசுவதியம்மா தான் சலங்கை எடுத்துக் கொடுத்தார்கள்.

நாட்டியப் பேரொளி என்ற பட்டத்தை உங்களுக்கு அளித்தது யார்?

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஸர்.ஸி.பி. ராமசுவாமி ஐயர் அவர்களால் கொடுக்கப்பட்டது.

தமிழ்த் திரைப்பட உலகில் கால் வைத்தது எப்போது? அது பற்றி...

எனக்கு எட்டு வயதில் பாரிஜாத புஷ்பாகரணம் என்ற நாட்டிய நாடகத்தில் நான் நாரதர். எனக்கு பித்தளை அலர்ஜி. அதனால் என் பெரியம்மா நாரதர் வேஷமணிந்த எனக்காகத் தங்கத்திலேயே ஒரு ருத்ராக்ஷம் செய்து போட்டார்கள். அந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே. மதுரம் அக்காவும் வந்திருந்தார்கள். கிருஷ்ணராக நடித்த பெண்ணுக்குப் பரிசைக் கொடுக்கும் போது சொன்னார். 'உண்மையில் இந்தப் பரிசு நாரதருக்குக் கொடுக்கப்பட வேண்டும்' என்று சொல்லி என்னை அப்படியே தலைமேல் தூக்கிக் கொண்டு 'ஒருநாள் நீ பெரிய நடிகையாக வருவாய்' என்று கூறிப் பாராட்டினார்.

நடந்தது என்னவென்றால் அவர் வாக்குப்படியே அவர் எடுத்த 'மணமகள்' படத்திலேயே நான் முதன் முதலாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். முழுக்க முழுக்க குற்றாலத்தில் எடுத்த படம் அது.

எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன் போன்றவர்களுடன் நடித்துள்ள நீங்கள் அதிகமாக நடித்திருப்பது சிவாஜியுடன் தான். அதுபற்றி......

'எனக்குத் தெரிந்து எனக்கு சமமாக நடிக்கக்கூடிய ஒரே நடிகை பப்பிதான்'' என்று சிவாஜியே சொல்லியிருக்கிறார். அவருடன் 60 படங்களில் நடித்திருக்கிறேன். We had great respect for each other. அவருடன் நான் நடித்த முதல் படம் 1952 -இல் கண்ணதாசன் எடுத்த 'பணம்' என்ற படம். அவர் மிகவும் Jovial, DIsciplined, Punctual. அவர் பகுதியை நடித்து விட்டுப் போய்விட மாட்டார். அந்தக் காட்சி முடியும்வரை இருப்பார்.

உங்கள் சகோதரி லலிதாவும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். உங்களுக்கிடையே படத்தின் வாய்ப்பைத் தருவதில் இயக்குநர்கள் முடிவு செய்வார்களா?

பெரும்பாலும் இயக்குநர்கள் Good characters choose பண்ணி எனக்குத் தருவார்கள். அப்போதெல்லாம் பெரும்பாலும் கதைகள் Heroine oriented ஆக இருக்கும். லலிதா 'ஓர் இரவு' படத்தில் கதாநாயகி. துன்பம் நேர்கையில் என்ற அருமையான பாடல் அதில் இடம் பெற்றிருக்கும். (பாடிக் காட்டுகிறார்) ப. நீலகண்டன் இயக்குநர், அண்ணாத்துரை வசனம்.

தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, மரகதம்.... போன்ற படங்களெல்லாம் Heroine oriented...

கதாநாயகர்கள் மட்டும் கடைசி வரையில் கதாநாயகர்களாகவே நடிக்கிறார்கள். கதாநாயகிகளை மட்டும் அக்கா, அம்மா என்று இறக்கி விடுகிறார்களே?

என்னைப் பொறுத்தவரை இல்லையென்றுதான் சொல்வேன். சிலபேர் 16 அல்லது 17 வயதிலே கல்யாணம் ஆன உடனே திரையுலகை விட்டு ஓடி விடுகிறார்கள். என்னுடைய திருமணத்திற்குப் பிறகும் நான் கதாநாயகியாக நடிக்கவில்லையா? விளையாட்டுப் பிள்ளையில் நடித்தேன். தில்லானா மோகனாம்பாளில் நடித்த போது என் பிள்ளைக்கு வயது 6. எப்படி நடிக்கிறீர்கள். எப்படி உங்களை வைத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் 1954லேயே மங்கையர் திலகத்தில் சிவாஜிக்கு அண்ணி. சிவாஜிக்கு சித்தியாகவும் நடித்திருக்கிறேனே? அதில் நாகையாவுக்கு நான் இரண்டாவது மனைவி. சித்தியில் எம்.ஆர். ராதாவுக்கு இரண்டாவது மனைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய்.

நடித்துள்ள மொத்த படங்கள்?

250. ஐந்து மொழிகள். முதல் படமே ஹிந்தியில் கல்பனா. ஒரு வேற்றுமொழிப் படம் கூட. டப்பிங் கிடையாது. ஒரிஜனல். மலையாளம், தெலுங்கு மற்றும் என் குரு கோவிநாத் பெங்காலி என்பதால் பெங்காலி பேசுவேன். ரஷ்யாவில் 'பர்தேசி' படம் ஷ¥ட்டிங் போது மூன்று மாதம் தங்கியிருந்தேன். அப்போது ரஷிய மொழியும் கற்றுக் கொண்டேன். I can speak Russian very well.

உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் என்னென்ன?

அருங்கலை மாமயில், கலைமாமணி பட்டம் இருமுறை கிடைத்தது. அலகாபாத்தில் 'நாட்டியராணி' என்ற பட்டம் என்னுடைய முதல் படம் கல்பனாவே அவார்டு பிக்சர். 'எதிர்பாராதது', 'தில்லானா மோகனாம்பாள்', மலையாளத்தில் தேவசேனா, பிளித்தங்கா, அரசம்பூவம், சத்யாபிகா போன்ற படங்கள் எல்லாமே அவார்டு வாங்கியவை. ரஷ்யாவில் 1957-இல் என் கலைத் திறனைப் பாராட்டி தபால் தலை வெளியிடப்பட்டது.

நீண்ட காலத்திற்குப் பிறகு 'பூவே பூச்சூடவா' என்ற படத்தில் நடித்தீர்கள். அதைப் பார்த்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு அது போன்ற இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா?

ஏன் கிடைக்காது? நல்ல காரெக்டர் கிடைத்தால் பண்ணுவேன். நிறைய குழந்தைகள் இருக்கும் ஒரு தாயாக நடிக்க மாட்டேன் என்று ஒரு சில பேர் சொல்லுவார்கள். ஆனால் நான் நடித்த கண்கண்ட தெய்வம் படத்தில் எனக்கு நான்கு குழந்தைகள். சித்தி படத்திலும் அதுபோலத்தான். அதற்கு அவார்டும் கிடைத்ததே.

சிவாஜியை எங்கள் குரு மாதிரி என்று கூறிக் கொள்ளும் கதாநாயகர்கள் போல, நீங்கள் நடிக்கின்ற காலகட்டத்தில் எந்தக் கதாநாயகியையாவது பாராட்டி அவர்களை உங்களைக் கவர்ந்த கதாநாயகி என்று கூறமுடியுமா?

நடிப்பில் பானுமதி அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். டி.ஆர். ராஜகுமாரியைப் பிடிக்கும். பானுமதியின் லைலா மஜ்னுவில் நானும் லலிதாவும் நடனம் ஆடியிருக்கிறோம். பானுமதி பொம்மியாகவும், நான் வள்ளியம்மையாகவும் மதுரை வீரனில் நடித்திருக்கிறோம். She is very very versatile.

உங்களைக் கவர்ந்த அக்கால, சமகால, இக்கால நடனமணிகள்?

அந்தக் காலத்தில் பாலசரசுவதி அம்மா இருந்தாங்க. என் காலத்தில் வைஜயந்திமாலா, குமாரி கமலா. இப்போது பத்மா சுப்ரமணியம் தவிர ஷோபனா இருக்காளே. She is a good dancer & hard worker.

நீங்கள் காமெடியாக நடித்த படம்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம்.

உங்கள் வாழ்க்கையை மூன்று பகுதிகளாக பிரித்தால் முதலில் நீங்கள் ஒரு சிறந்த நாட்டியமணி. இரண்டாவது திரைப்படத்தில் வெற்றி நடை போட்ட நடிகை. மூன்றாவத நல்ல குடும்பத்தலைவி. இதில் உங்களுக்கு பிடித்த ரோல் எது?

நடனம் தான் என்னுடைய முதல் விருப்பம். பிறகு நடிப்பு.

நீங்கள் அமெரிக்காவில் நாட்டியப் பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் எத்தனை மாணவிகள் பயில்கிறார்கள்?

Padmini Institute of Fine Arts-ல் மொத்தம் இதுவரை 300 மாணவிகள். இப்போது அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை. ஏழு கிளைகளைக் கொண்டது என்னுடைய நாட்டியப்பள்ளி. சமீபத்தில் 82-ஆவது மாணவியின் அரங்கேற்றம் நடந்தது.

நீங்கள் ஒரு Professional Dancer பாட்டு என்றால் அரியக்குடி பாணி. செம்மங்குடி பாணி, ஜி.என்.பி. பாணி என்பார்கள். ஆனால் அதே பாணியில் பாட வேண்டுமென்பதில்லை. ஆனால் நாட்டியத்தில் திருவிடைமருதூர் பாணி, தஞ்சாவூர் பாணி, பந்தநல்லூர் பாணி. இவற்றில் அவரவர்கள் Strong affinity இருப்பதைப் பார்க்கிறோம். மற்றவர் பாணியை ஏற்பதில்லை. இது பற்றி..?

என்னுடைய திருவிடைமருதூர் மகாலிங்கம் பிள்ளை ஸ்டைல். அவர்தான் என் குரு. குரு கற்றுக் கொடுக்கும் முறையில் தான் நாங்கள் கற்றுக் கொள்கிறோம். பாட்டுக்கு ஏற்ப அவர் கற்றுக் கொடுக்கும் முறையில் கற்றுக் கொள்வோம்.

தில்லானா வாசிக்கும் சிவாஜியுடன் நீங்கள் போட்டியிட்டு ஆடியது? பாட்டு வாசிப்பவர் மனோபாவத்தைப் புரிந்து கொண்டு அதே நேரத்தில் ஆடுவது நிஜ வாழ்க்கையில் முடியுமா?

கானடா இராகத்தில் சிவாஜி வாசித்த தில்லானாவுக்கு அப்போதைக்கப்போது நாட்டியத்தை Choreography செய்து தான் கற்றுக் கொண்டு ஆடினேன். ஆனால் Impromptu ஆக நாட்டியம் ஆடமுடியும். உதயசங்கரிடம் நாட்டியம் கற்றுக் கொள்ளும் போது அந்தக் காலத்தில் ஒலிப்பதிவு நாடா கிடையாது. ரவிசங்கர் பாட்டை வாசித்துக் காட்டுவார். 'Improvisation class' என்று ஒன்று உண்டு. அவர்கள் என்ன பாடுவார்களோ, என்ன வாசிப்பார்களோ அதற்கு நாங்களே மனதில் தீர்மானித்து அந்த நேரத்தில் ஆடிக் காட்ட வேண்டும்.

அனுபவத்தின் முதிர்ச்சியால் என்று சொல்லலாமா?

இல்லை. திறமை. நான் இப்படி ஆடிய போது மிகவும் சிறிய பெண். நான் மட்டுமல்ல. என்னுடன் லக்ஷ்மி, ஜி.எஸ். வரலக்ஷ்மி, ஜி. சகுந்தலா என்று நூறு பேர் நாட்டியம் கற்றுக் கொண்டோம். சென்னையில் ஆழ்வார்பேட்டையில் 'Heritage' என்ற பவர் பள்ளியில் தான் நாட்டியம் பயின்றோம். உதயசங்கர் தான் குரு. திருவனந்தபுரம் E. இராமநாதன் இயக்குநர் படத்திற்கு ஓராண்டுப் பயிற்சி. மணிப்புரி, கதக் போன்ற எல்லாவகை நாட்டியங்களையும் கற்றுக் கொண்டேன்.

நாட்டியம் கற்றுக் கொள்ளும் பெண்களுக்கு உங்களுடைய suggesions..

கடினமாக உழைக்க வேண்டும். ஒன்பது வயதுக் குழந்தைக்குக் 'காமன்' கணை தொடுத்துக் கலந்து' என்பது போன்ற பாடல்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்தால் என்ன புரியும்? பாடல்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. கற்றுக் கொடுப்பதற்கு நிறையப் பாடல்கள் இருக்கின்றன. கே.என். தண்டாயுதபாணி பிள்ளையின் 'சுவாமி நான் உந்தன் அடிமை' போன்ற நல்ல பாடல்கள் நியை உண்டு.

நாட்டியத்தில் பின்னணி அதிகமாக இன்று ஒலிக்கக் கேட்கிறோம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அது அதிகமாகத் தான் இருக்கிறது. என் காலத்தில் ஒரு தபேலாவோ அல்லது ஏதாவது ஒரு சின்ன வாத்தியக் கருவி தான் இருக்கும். பாடுபவர் குரலுக்கு முக்கியத்துவம் இருந்தது.

சமீபத்தில் நிகழ்த்திய நாட்டிய நிகழ்ச்சி?

'கிருஷ்ண லீலா'. எல்லாமே நிதி உதவி நிகழ்ச்சிகளுக்காகத் தான்.

இப்போது உங்கள் சொந்த வாழ்க்கைக்கு வருவோம். உங்கள் திருமணம் காதல் திருமணமா?

காதல் எல்லாம் கிடையாது. என் சகோதரிகள் மூன்று பேருடையதும் arranged.

எனக்கு 1961-இல் திருமணம். Traditional Marriage. அதற்கு முன்னாலேயே தினத்தந்திக்காரர்கள் என் கணவருடைய வீட்டுக்குப் போய் போட்டோ எடுத்து 'பத்மினி மணக்கப் போகும் டாக்டர் ராமச்சந்திரன்' என்று பத்திரிகையில் போட் விட்டார்கள். அவரும் Hero மாதிரி போஸ் கொடுத்திருக்கிறார்.

குருவாயூரில் கல்யாணம். அன்றைக்குச் சொல்ல முடியாத மழை. அம்மாவும் மற்றவர்களும் 'ராமவர்மா பாலஸ்'ஸில் போய்த் தங்கியிருந்தார்கள். எனக்கு 'செந்தாமரை' படத்தில் ஷ¥ட்டிங். இரவு 2 மணி வரை ஷ¥ட்டிங். 8 மணிக்கு விமானம் ஏற வேண்டும். என்னோடு M.L.V. யும், என் சகோதரரும் இருந்தார்கள். எர்ணாகுளம் போய் இறங்கினால் கல்யாணத்துக்கு வேண்டிய என்னுடைய நகைப் பெட்டியை மறந்து வைத்து வந்து விட்டேன். உடனே இந்து பத்திரிகையோடு தொடர்பு கொண்டு எஸ்.வி. பிரசாத் அவர்களின் மகன் வீட்டின் கதவை உடைத்து, பூட்டை உடைத்து நகைப் பெட்டியை விமானத்தில் அனுப்பி வைத்தார்கள்.

கல்யாணத்திற்கு நல்ல கூடடம் கொட்டும் மழையிலும் வழியெல்லாம் யானை. எம்.ஜி.ஆர். செய்த ஏற்பாடு. எங்கு பார்த்தாலும் ஜனக் கூட்டம். நான் திருமணமாகிப் போகிறேன் என்று அவர்களுக்கெல்லாம் வருத்தம். நான் கனவுக் கன்னி, கல்யாணம் எல்லாம் பண்ணக் கூடாது என்று நினைக்கிறார்கள் ஆண்கள். வயது வரும்போது பெண்ணுக்குத் திருமணம் வேண்டியதுதானே. அது குடும்ப வாழ்க்கை அல்லவா!

என் கணவர் மணிபாலில் கஸ்தூரிபா மெடிகள் காலேஜில் டாக்டருக்குப் படித்துவிட்டு இங்கிலாந்தில் எடின்பரோவில் MRLF முடித்தவுடன், அமெரிக்காவில் வேலையில் சேர்ந்தார். 1971-இல் நான் அமெரிக்கா வந்தேன். இனிமேல் ஓய்வு பெற்று ஹாய்யாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன்.

இந்திய தூதரகத்தில் ஒரு விருந்துக்குப் போயிருந்த போது அங்கே டாக்டர் அழகப்பன் அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதுவரை அமெரிக்காவில் இந்துக் கோவில் எதுவுமில்லை. அழகப்பன் மகாவல்லப கணபதி கோவிலை 'Flushing' என்னுமிடத்தில் கட்டுவதற்கு முயன்று கொண்டிருப்பதாகவும், அதற்கு நிதி திட்டித் தருவதற்கு என்னுடைய நாட்டிய நிகழ்ச்சி நடத்தித் தருமாறு கேட்டார். நான் அதற்கு ஒப்புதல் தரவில்லை. ஆனால் என் கணவர் உடனே சரி என்று சொல்லிவிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு வேண்டிய costumes முதலியவற்றுக்காக இந்தியாவுக்குச் சென்றேன். போன சமயத்தில் ஐந்து திரைப்படங்களில் நடித்தேன். எம்.ஜி.ஆருடன் ரிக்ஷாக்காரன் மற்றும் அன்னை வேளாங்கண்ணி முதலானவை.

நிதி உதவி நிகழ்ச்சிக்கு வேண்டிய costumes, jewellery எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு திரும்பினேன்.

அழகப்பன் வீட்டில் தினமும் காலை 9 முதல் இரவு 9 வரை ஒத்திகை. 1971 மே 9-ஆம் தேதி.... காலேஜில் நிகழ்ச்சியை நடத்தினோம். Tape போட்டு நிகழ்ச்சி நடத்தினோம். எனக்கு டேப் போட்டு ஆடிப் பழக்கம் கிடையாது. ஆனால் House Full. 2000 பேர் வந்திருந்தார்கள். என் கையெழுத்திட்ட படங்களை விற்றார்கள். நல்ல கலெக்ஷன். இதுவரை 55 நிதி உதவி நிகழ்ச்சிகள் அமெரிக்கா முழுவதும் நிகழ்த்தியிருக்கிறேன்.

சிவாஜி ஈ.வே.ரா. பாத்திரமேற்று நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று வருத்தத்தோடு கூறினார். அதுபோல் உங்களுக்கு ஏதாவது கிடைக்காத வாய்ப்பு என்று ஏங்குகிறீர்களா?

நான் அநேகமாக எல்லாப் பாத்திரங்ளையும் ஏற்று நடித்திருக்கிறேன். கண் தெரியாத பெண்ணாக நடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். 'கண்கள்' என்ற படத்தில் கண் தெரியாதவளாக நடித்துவிட்டேன். 80 அல்லது 90 வயதுடைய ஒரு பாத்திரமாக நடிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். மனோரமா நடிக்கிறார்களே அதுபோல.

நாட்டியப் பயணத்தை அடுத்து உங்கள் பாதை எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?

திரும்பவும் சென்னையில் போய் தங்கிவிட முடிவு செய்துள்ளேன். இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டில் திரும்பி விடுவேன்.

டாக்டர் அலர்மேலு ரிஷி, அஷோக் சுப்ரமணியம்
தொகுப்பு : சரவணன்

© TamilOnline.com