தமிழ் மன்றம் - கம்பன் விழா
இந்தியாவின் தலைசிறந்த கவிஞர் என்றும், உலகக் கவிஞர்களில் தலையாய இடம் பெற்ற ஒப்பற்ற கவிஞர் என்றும் கம்பரை அடிக்கடி போற்றுவார் பர்க்கெலி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் அவர்கள். படித்த பண்புள்ள தமிழர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் கம்பராமாயணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார் ஹார்ட். கம்பன் காவியத்தின் இலக்கிய நயத்தைச் சுவைக்கும் வாய்ப்பு அமெரிக்கத் தமிழர்களுக்கு சூன் மாதம் கிடைத்தது.

வட அமெரிக்காவிலேயே முதல் முறையாகக் கவியரசர் கம்பனைப் போற்றும் கம்பன் விழாவை சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் கொண்டாடியது. சூன் 17ம் நாள் ஞாயிறு பிற்பகல் 2.30க்குத் துவங்கி மாலை 7 மணி வரை நடந்த நிகழ்ச்சிகளை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மவுன்டன் வியூ சமூகக்கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியாவிலிருந்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேரா. பி. இளங்கோ, வாஷிங்டன் டி.சி.யிலிருந்து மறைமலை அடிகளாரின் கொள்ளுப்பேத்தியும், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளருமான திருமதி. மலர் நடராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. விழா மலரில் சென்னை ஆன்லைன் துணையாசிரியர் ஹரிகிருஷ்ணன் அவர்களின் 'கற்பின் கனலி' என்ற இலக்கிய ஆய்வுக் கட்டுரையும், ஜெர்மனியிலிருந்து 'பாசுர மடல்' நா. கண்ணன் அவர்கள் எழுதிய 'கம்பனும் ஆழ்வார்களும்' என்ற கட்டுரையும் இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சி அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளின் மழலைத் தமிழில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. கருத்தரங்கத்தில் முதலாவதாக ஏறத்தாழ ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் பேரா. இளங்கோ பேருரையாற்றினார். பல மேற்கோள்களுடன் கம்பனின் கவிநயம் பற்றியும், பல பண்டைத்தமிழிலக்கிய மரபுகளுக்கும் கம்பனுக்குமுள்ள தொடர்பு பற்றியும் விளக்கவுரை தந்தார் அவர். அடுத்ததாகக் கவிஞர் பாகீரதி சேஷப்பன் அவர்கள் கம்பன் கொண்ட இராமன் எல்லா இன்னல்களையும் புன்முறுவலோடு எதிர்கொண்டதைப் பற்றிப் பேசினார். இவர் பேச்சுக்கிடையில் அமெரிக்காவில் படித்த தமிழ்ப்பள்ளி இளைஞர் இருவர் இராமனாகவும் சீதையாகவும் அமெரிக்கத் தமிழில் பேசி மக்களை வியப்புக்குள் ஆழ்த்தினர். மலர் நடராஜா கம்பனின் கவிநயம் பற்றி உரையாற்றினார்.

கருத்தரங்கத்திற்குப் பின் 'சீதையின் தீக்குளிப்பு இராமனுக்க இழுக்கா இல்லையா?' என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது. ஆம் என்று தமிழ் மன்ற முன்னாள் தலைவர் கணிஞர் மணி மு. மணிவண்ணனும், இல்லை என்று கணிஞர் பிரபாகரன் வைத்தியா அவர்களும் சுவையாக வழக்காடினார்கள். இது ஒரு சிக்கலான தலைப்பு. பெண்ணியவாதிகள் மட்டுமல்லாமல், பல முற்போக்குச் சிந்தனையாளர்களும் இராமனின் செயலை ஏற்றுக் கொள்வதில்லை. வழிபடும் தெய்வமான இராமனை வணங்குபவர்களோ இராமனின் செயல் சீதையின் கற்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தவே என்று நம்புவார்கள். இராமனை ஆணாதிக்கவாதி என்று கண்டிக்கக் கூடுமா? இராமகாதையை இலக்கிய நோக்கின்படி அலசவேண்டுமா அல்லது தத்துவப் பார்வையில் இறைவனின் செயலுக்கு விளக்கங்கள் தேவையில்லை என்று அணுக வேண்டுமா? தற்காலப் பெண்ணிய நோக்குடன் ஒரு கடந்தகால நிகழ்ச்சியை எடைபோடுவது சரியா? தன் நண்பன் கர்ணன் தன் மனைவியின் இடையணியை விளையாட்டு வேகத்தில் இழுத்ததைக் கண்ட பின்பும் மனிதரில் இழிந்தவனாக மகாபாரதம் காட்டும் துரியோதனன் மனைவி மேல் ஐயம் கொள்ளாமல் சிதறிய மணிகளை எடுக்கவோ கோர்க்கவோ என்று தான் கேட்டான். ஆனால், மாந்தருள் மாணிக்கம் என்று போற்றப்படும் இராமன் தன் மனைவி மேல் ஐயம் கொள்வது சரியா? பிறன் மனையில் கணவன் கண்படாமல் வாழ வேண்டிய நிலையில் இருந்த மனைவியை இராமன் சோதித்திருக்கா விட்டால் அவளது கற்பின் தூய்மையை மற்றவர்கள் அறிந்திருக்க முடியுமா? இது போல் பல கருத்துகள் வழக்காடு மன்றத்தில் தலைப்பை ஒட்டியும், வெட்டியும் பேசினார்கள் மணிவண்ணனும் பிரபாகரனும்.

கவிஞர் ஹரிகிருஷ்ணன் 'கற்பின் கனலி' என்ற தலைப்பில் இதே தலைப்பைப் பற்றிச் சிறப்புக் கட்டுரை படைத்திருந்தார். விழா மலரில் இடம் பெற்றிருந்த அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை நடுவர் தீர்ப்புக்குப் பதிலாகத் தமிழ்மன்றத் தலைவர் கணேஷ் பாபு படித்தார். பின் தொடர்ந்த கலந்துரையாடலில் மணிவண்ணன், பிரபாகரனோடு, திருமதி காவேரி கணேஷ், திருமதி பாகீரதி சேஷப்பன் ஆகியோரும் கலந்து கொண்டு வழக்கை மேலும் அலசினார்கள். வால்மீகிக்கும் கம்பனுக்கும் உள்ள வேறுபாடு, கம்பனின் கவிநயம், தமிழ்ச் சொல்லாக்கத் திறன், ஓசை நயம், கம்பனின் உவமைகள் என்று பல தலைப்புகளைத் தொட்டுக் கம்பனின் கவியமுதை மக்களுக்கு விருந்தளித்தார்கள்.

இடைவேளைக்குப் பின்னர், கம்பன் பல பாடல்களைத் தமிழிசையோடு பாடி மக்களை மகிழ்வில் ஆழ்த்தினார்கள் இசைக் கலைஞர்கள். டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் மூத்த மாணவரும், கணிஞருமான ராகவன் மணியன் கம்பனில் கரைந்து உருகிப் பாடி மக்களை எல்லையற்ற இன்பத்தில் ஆழ்த்தினர். அவருக்குத் துணையாக அரவிந்த் காந்தனின் வயலினும், நடராஜன் சீனிவாசனின் மிருதங்கமும் இசைவிருந்தளித்தன. நிகழ்ச்சியின் உச்சக் கட்டமாகச் 'சுருதி சாகரம்' சுகுணா புருஷோத்தமன் அவர்கள் இசைநிகழ்ச்சி இடம் பெற்றது. அரவிந்த் காந்தன், நடராஜன் சீனிவாசன் பக்க வாத்தியத்துடன், கம்பனின் பல பாடல்களை விளக்கத்துடன் பாடினார் திருமதி. சுகுணா புருஷோத்தமன்.

நிகழ்ச்சியில் அவ்வப்போது கம்பனின் பல பாடல்களை மனனம் செய்து அரங்கில் சொல்லிக் காட்டி மக்கள் மனதைக் கவர்ந்தார்கள். அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளான அபிராமி, சபரீஷ் பாபு, அம்ருதா, ரபி வானதி மற்றும் நண்பர்கள். ஓராண்டுக்கு முன்பு தமிழ் பேசவே தயங்கிய குழந்தைகள் கம்பனையே மனனம் செய்து மேடையேறும் அளவு திறமை பெற்றதற்கு உறுதுணையாக அமைந்தவை குடாப்பகுதித் தமிழ்ப்பள்ளிகள். நிகழ்ச்சியைக் காண வந்தவர்களுள் மன்ற மைய அமைப்பாளர்களுள் ஒருவரான பாலாஜி குறிப்பிடத்தக்கவர்.

நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட விழா மலரை வலையில் http://www.forumhub.com/tlit/kamban.pdf என்ற இலக்கில் காணலாம். விழாமலர் வெளியிடப் பொருளுதவி செய்தது தென்றல் திங்கள் இதழ்.

© TamilOnline.com