எனக்கு ஒரு இனிய அதிர்ச்சி. அதிசயம்.. ஆனால், உண்மை. தமிழ்நாட்டில் இருந்து ஒருமாத சுற்றுலா பயணியாக வந்த எனக்கு அமிழ்திலும் இனிய தமிமொழியில் அனைத்து அழகும் ஒரு சேர அமையப் பெற்ற திங்கள் இதழ் ஒன்றை இங்கே காண்பேன் என்று கனவிலும் எண்ணியது இல்லை.
கண்டேன் சீதையை என்பது போல கண்டேன் கடை ஒன்றில். கடையில் களம் இறங்கி தவழ்ந்த தென்றல் என் கைகளில் புகுந்து கண்ணையும், கருத்தையும் கவனத்தில் ஈர்த்தது.
பாரதியே! உன் வாக்கு பொய்யாகிறது!
இனி, தமிழ்மெல்ல வளருகிறது தென்றலாய் வாழ்க்கிறது.
இந்த பசிபிக் தென்றலுக்கு துணையாய் வாழும்.
தமிழ் அகத்திய முனிவர்கள் வாழ்க! வாழ்க!
தி.சீ.நி. தியாகராசன், டப்ளின், கலிபோர்னியா 94568
*****
மிகவும் அருமையான பத்திரிக்கை, குறிப்பாக பெண்களை உற்சாகப்படுத்தும் மற்றும் பெண்களை புரிந்து கொண்ட பத்திரிக்கை.
விமாலா பாலன், கூப்பர்டினோ, கலி·போர்னியா.
*****
நான் சன்னிவேல் இந்து கோவிலுக்குப் போய் இருந்த போது அங்கே தென்றல் புத்தகம் இருந்தது. அதில் இலவசம் என்று எழுதியிருந்தது. எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்தது. நமது பாட்டுக்கு ஒரு கவிஞர் பாரதி தேன்மதுரத் தமிழ் ஓசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று அன்று பாடிய பாட்டுக்குத் தகுந்தாற்போல் இன்று எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவுக்கு வந்து நமது தமிழ்மக்களையும் இந்திய மக்களையும் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் அதுவும் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கும் உங்கள் எல்லோரையும் மனமார பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன்.
சுதா அவர்கள் சிலோனில் பிறந்து ஆப்பிரிக்காவில் வளர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு சான்பிரான்ஸ்கோ வளைகுடா பகுதியின் மோஸ்டிலி என்ற வானொலி நிகழ்ச்சியின் 100வது வார நிறைவுவிழாவின் போது மேலும் புதுவிதமான தமிழ் நிகழ்ச்சிகளை தயார் செய்வதற்கு பலவழிகளில் முயன்று வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய தமிழ் மக்கள் இன்னும் நல்ல முன்னேற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அறக்கட்டளை என்ற ஒரு பெரிய ஸ்தாபனத்தை ஏற்படத்தி அதையும் மிகவும் நன்றாக நடத்தி கொண்டிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரையும் மனமார பாராட்டுகிறேன். முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார் என்பதற்கு இணங்க தென்றல் பத்திரிகையும் தமிழ்நாடு அறக்கட்டளையும் உன்னதமாக திகழ நாம் எல்லோரும் பாடுபடுவோம்.
S.T.M. ஸ்ரீனிவாசன், டவுண்டன்வியூ, கலிபோர்னியா 94041
***** |