நடிகர் திலகம் 1927 - 2001
சரித்திரமல்ல. பல சரித்திரங்களை உள்ளடக்கிய சகாப்தம்

சரித்திர நாயகர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனாகட்டும், ராஜராஜ சோழனாகட்டும், வ.உ.சிதம்பரம் பிள்ளையாகட்டும் இவர்களை எல்லாம் நடிகர் திலகத்தின் மூலம் தான் மக்கள் தரிசித்தார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படம் சிவாஜிக்கு சர்வதேச விருதை தேடித் தந்தது. கெய்ரோவில் நடந்த ஆப்பிரிக்க ஆசிய பட விழாவில் 'சிறந்த நடிகர்' என்ற பட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் மூலம் அவருக்கு கிடைத்தது.

தமிழ்த் திரையுலகில் சிரித்துக் கொண்டே அழுவதையும், அழுது கொண்டே சிரிப்பதையும் அர்த்தப்படுத்தியவர் நடிகல் திலகம் தான்.

கிறித்து பிறப்பதற்கு முன் - கிறித்து பிறந்த பின் என வரலாற்றை கணக்கிடுவது போல் சிவாஜி கணேசன் நடிக்க வந்ததற்கு முன் நடிக்க வந்ததற்கு பின் என்றே தமிழ் திரையுலக வரலாறு அவருடைய வருகைக்கு பின் பேசப்பட்டு வந்தது.

மானுட இனத்தை ஆட்டி வைப்பேன். அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று இறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே மரணசாசனம் பாடி வைத்த கவியரசு கண்ணதாசன், நடிகர் திலகத்தைப் பற்றி கூறும் போது, ஒன்பது வகையான பாவத்தை 90 வகையாக காட்டும் உன்னத நடிப்புக்கு சொந்தக்காரர் சிவாஜி கணேசன். அவரைப் போல் இதுவரை ஒருவர் பிறந்ததில்லை. இனி பிறப்பார் என்பதற்கும் உறுதி இல்லை. இது உலகறிந்த உண்மை என்று கூறினார். இந்த உண்மையை யாரும் மறுக்க மாட்டார்கள்.

போன நூற்றாண்டில் புகழின் உச்சியில் இருந்தவரை புதிய நூற்றாண்டு கவர்ந்திழுத்துக் கொண்டுவிட்டது.

தமிழ் என்றாலே அழகு தான். ஆனால் தமிழ்த் தாயோ நடிகர் திலகம் உச்சரிக்கும் போது தன்னை அழகு பார்த்துக் கொண்டாள். அழகுக்கு அழகு சேர்த்த அந்த மாபெரும் கலைஞனின் மரணம் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

நடிகர் திலகம் சரித்திரமல்ல.... பல சரித்திரங்களை உள்ளடக்கிய சகாப்தம்.

© TamilOnline.com