ஆகஸ்டு 3 நண்பர்கள் தினத்தை நினைவுபடுத்த இந்த இதழில் சில கவிதைகள்.
நண்ப!

இறுக்கிப் பிடித்த
உள்ளங்கைச் சூட்டில்
தெரிந்தது
நம் இருவருக்குமான நட்பு

மழை அடித்து ஓய்ந்த
மாலைப் பொழுதுகளில்
விரல் பிடித்து நடக்கவொரு
சிநேகிதம் வேண்டும்

நண்ப! நீ கிளம்பிச் சென்ற பிறகும்
அழகாய்த்தான் இருக்கின்றன
இரயில்வே பிளாட்பாரங்களும்.

*****


நண்ப!

நண்பா பேருந்து கிளம்பிய
பின்னும் சன்னல் வழி
எக்கித் தலையசைப்பாயே!
அது கவிதை.

*****


நண்ப!

மாறி மாறி போட்டுக் கொண்ட
நம்மின் சட்டைகள்கூட
உரத்துச் சொல்லும்
உலகுக்கு நம் நட்பைப் பற்றி.....

நட்புக்கு இலக்கணம்
சொல்லும் தமிழாசிரியர்
நம்மிருவரையும் ஓரக் கண்ணால்
பார்ப்பாரே!
வள்ளுவன் இருந்தால்
சந்தோசப்பட்டிருப்பான்.

நாம் சேர்ந்து குடித்துத்
தீர்த்த இரவுகள்
உன்னின் என்னின் கனவுகள்
எல்லாமும் மெய்ப்பட வேண்டும்
உன் விரல்கள் பிடித்து ஒருநாள்
நம் வெற்றியை உலகுக்குச்
சொல்ல வேண்டும்.

*****


நண்ப!

ஒரேயொரு சிகரெட்
சில கவிதைகள்
கொஞ்சம் உன் நினைவுகள்
உலகைக் கடக்க இது போதும்.

காதலியைக் கூட காக்க வைத்துவிட்டு
எனக்காகச் சிகரெட் புகைக்க வருவாயே
அதற்காகவேனும் காலம் முழுக்கக்
கடன்பட்டுக் கிடப்பேன்.

காதல் என்னும் வார்த்தை
கனவிலும் நுழையாமல்
காலங்காலமாய் நடைபோட வேண்டும்
பழைய பாதையில்.....

© TamilOnline.com