கீதாபென்னெட் பக்கம்
இந்த கட்டுரையை எழுதும் சமயத்தில் தமிழ்நாடு ஒரே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. நடு இரவில் முன்னாள் முதல் அமைச்சர் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு அரை குறை ஆடையுடன் கைது செய்யப்படுகிறார். சன் டிவி மாலன், தினமணி ஆசிரியர் என்று பலரும் ஒரு நாள் சிறைவாசம் செய்கிறார்கள். ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் ஆயிரக்கணக்கில் கைது. இதெல்லாம் தமிழகத்திலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகைகளின் முதல் பக்கத் தலைப்புச் செய்திகள்.

அதே தினம் எனது கலி·போர்னியா வீட்டில் காலையில் எழுந்தவுடன் வழக்கம் போல் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தித்தாளைப் பிரித்த போது முதல் பக்கத்தில் பெரிய தலைப்புச் செய்தி. ''ஆசிய இந்தியர்கள் Silicon Valley - யைப் புதுப்பித்திருக்கிறார்கள்.'' கட்டுரையைப் படித்த போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது.

சன்னிவேல், கலி·போர்னியாவிலிருந்து பிரத்தியோகமாக இந்த தினசரிக்கு எழுதப்பட்டுள்ள கட்டுரை நமக்குத் தெரிந்த விஷயங்கள் பலவற்றை சொல்லுகிறது. இதுவரை தெரியாத புள்ளிவிபரங்களும் உண்டு.

1990-லிருந்து 2000-த்திற்குள் கலி·போர்னியாவில் ஆசிய இந்தியர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிட்டது. இப்போது இங்கே ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் 6 சதவிதம், சைனீஸ் 30 சதவீதம், வியட்நாமீஸ் 60 சதவீதம் என்றால் இந்தியர்கள் 97 சதவீதம் இருக்கிறோம். அதுவும் அமெரிக்காவிலேயே வட கலி·போர்னியாவில் தான் அதிகம். அதனால் இந்தியாவில் கிடைக்கும் அனைத்தும் - சாப்பாடா, சினிமாவா, துணிமணி கடைகளா, நகைக் கடைகளா எல்லாம் இங்கேயும் உண்டு.

ஹை டெக் பூம் (High-Tech Boom) காரணமாக இங்குள்ள பள்ளிக்கூடங்களின் தரமும் மிகவும் உயர்ந்து விட்டதாம். இந்த ஆசிய இந்திய குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேரும்போதே ஏகப்பட்ட விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் வந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ''கின்டர் கார்டன் பசங்களுக்கே நான் முதல் வகுப்பு பாடங்கள் எடுக்கலாம் போல இருக்கிறது.'' என்று சொல்கிறார் கேரன் ஆட்டோபார்னி என்ற ·ப்ரிமான்ட் கின்டர்கார்டன் ஆசிரியை.

நீங்கள் எந்த நாட்டை, ஊரை சேர்ந்தவர்? உங்களது மதம் என்ன? நீங்கள் ஆணா, பெண்ணா? உங்கள் தோலின் நிறம் என்ன? இதெல்லாம் இப்போது இங்கே கேள்விகள் கிடையாது. உங்களுக்குத் தகுதியிருக்கிறதா? ஆங்கிலம் லகுவாக பேச வருமா? வாருங்கள். இந்த ரேஸில் கலந்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். தமிழ்நாட்டில் பலரும் பெருமூச்சு விடுவது கேட்கிறது.

சரி! இதெல்லாம் பாஸிடிவ் விஷயங்கள். எதுவுமே தப்பாக நடக்காதா என்றால் குழந்தைகளை, மனைவியை அடித்து துன்புறுத்துவது இதெல்லாம் இந்தியாவிலிருந்து வந்த சில குடும்பங்களில் தொடர்கிறதாம். அமெரிக்காவில் இப்படி நடந்து கொண்டால் சிறைவாசம் தான் என்பதை பலர் இன்னும் உணரவில்லை!'' என்கிறது போலீஸ்.

அமெரிக்க வந்த பிறகு தான் 'சைல்ட் அப்யூஸ்', 'ஸ்பெளஸ் அப்பூஸ்' வார்த்தைகளை தெரிந்து கொண்டது. நாங்கள் ஒன்பது சகோதர சகோதரிகள். சின்னவளாக இருக்கும் போது எல்லோரையும் போல் நானும் நிறைய விஷமம் செய்வேன். எங்களில் யாரையும் அப்பா அடித்ததேயில்லை. நண்பர்கள் எதிரில் ரொம்பவுமே அசடு வழியும் போது மட்டும் அம்மா யாருக்கும் தெரியாமல் தொடையில் நறுக்கென்று கிள்ளி விடுவார். ஆனால் அவர்கள் முன் அழுது அம்மாவைக் காட்டிக் கொடுக்கவும் முடியாது அது தான் அல்டிமேட் தண்டனை.

சமீப காலத்திய சிங்கப்பூர் பயணத்தின் போது அந்த நாட்டு தேடியோவில் என்னைப் பேட்டி கண்ட தமிழ்ப் பெண்மணி, நான் வெகு காலத்திற்கு முன் எழுதிய 'அடிக்கிற கை தான்' என்ற கதையைப் பற்றி ரொம்ப நேரம் பேசினார்.

பக்கத்து வீட்டில் இருக்கும் அமெரிக்க முதிய பெண்மணி, மதிய நேர தூக்கத்தைக் கெடுத்த அழுமூஞ்சி இந்திய குழந்தையை ''அம்மா அடித்துத் துன்புறுத்துகிறாள்' என்று போலீஸ¤க்குத் தகவல் கொடுத்து விடுகிறாள். தவறுதலாக சூடுபட்டுக் கொண்ட குழந்தையைப் பார்த்து தவறாக புரிந்து கொள்கிறது போலீஸ். விவாகரத்து வாங்கிக் கொண்டு தனியாக கைக்குழந்தையை வளர்க்க பாடுபடுகிற இந்திய இளம் பெண்ணை 'சைல்ட் அப்யூஸ்' என்று கைது செய்வதாக கதை.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் 'இந்தியாவில் குழந்தைகளைத் தட்டுவது (Slapping) சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் இங்கே அது குற்றம்'. என்று போலீஸ்காரர் சொன்னதாக படித்த போது இந்தக் கதை தான் ஞாபகம் வந்தது.

இதெல்லாம் சரி! ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் 'லகான்' இந்திப்பட பாடல்களை கேட்டீர்களா?

© TamilOnline.com