தேமதுரத் தமிழோசை உலகமெலாம்.....
''யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்''


பாரதியின் இந்த வரிகளின்படி தேமதூரத் தமிழோசை உலகெல்லாம் பரவியிருக்கிறதா? தெரியவில்லை. ஆனால் இந்த வரிகளை நிறுவுவதற்காக பல ஆண்டுகளாகத் தமிழ்சூ சமூகம் எல்லா வகைகளிலும் உழைத்தும் வந்திருப்பதை மறுக்க முடியாது.

தமிழ் மொழியைத் தமிழனின் வாழ்வைப் பற்றியெல்லாம் உலக சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டப் பல்வேறு வகைகளிலும் அறிஞர்கள் எலர் உழைத்திருக்கிறார்கள். தமிழ்மொழி தெரியாத வெளிநாட்டு அறிஞர்கள் பலரும் தமிழ்மொழியின் ஆக்கத்திற்கு பெருமளவில் தங்களுடைய பணியைச் செலுத்தியிருக்கிறார்கள். தாமாகவே முன் வந்து தமிழைக் கற்று தமிழ் மொழிக்கே இலக்கணத் திருத்தங்கள் சொல்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமெனில், தத்துவ போதக சுவாமி எனப்படும் இராபர்ட் தெ நோபிலியும், வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியும் தமிழுக்கு ஆற்றிய சேவை அளப்பரியது. தத்துப போதக சுவாமிகளின் படைப்பு நூல்களே தமிழில் இன்று கிட்டியுள்ள முதல் உரைநடை நூல்களாகும். வீரமாமுனிவர், தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார். தேம்பாவணி, இரட்சண்ய யாத்திரிகம் முதலிய நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். தன் வாழ்நாளில் பெரும்பாலான பகுதியைத் தமிழ்நாட்டில் கழித்தவர். திராவிட மொழிகள் பற்றிய ஆய்வுகள் வளர்வதற்கு முன்னோடியாக இருந்தவர் வீரமாமுனிவர். தமிழில் முதன்முதலாக எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனையை செயல்படுத்திக் காட்டியவராக வீரமாமுனிவர் அறியப்படுகிறார். வீரமாமுனிவருக்கு முந்தைய தமிழ் வழக்கில் ஏகாரம், ஓகாரப் பிரிவினைகள் இல்லை. அவருடைய காலத்திற்குப் பின்னரே இவ்வழக்குகள் புழக்கத்திற்கு வந்தன.

முன்னைய காலத்தில் தமிழ்மொழி குறித்து விஞ்ஞானப் பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சிந்தித்தவர்கள் இந்தக் கிறித்துவ பாதிரிமார்களே! தமிழ் ஆராய்ச்சிப் பரப்பைப் பற்றியும் தமிழர்களின் வாழ்வு, பண்பாடு இவைகளைப் பற்றியும் உலகுக்கெல்லாம் தெரிவிப்பதற்காகப் பதிவு செய்தும் வைத்திருக்கின்றனர். இவர்களாலேயே ஆரம்ப கால கட்டத்தில் தமிழின் பெருமை அன்னிய நாடுகளில் பரவி வந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவர்களுக்கு முன்னர் மன்னராட்சி காலகட்டத்திலும் வெளிநாட்டுப் பயணிகள் சிலரும் இங்கு வந்திருந்து தங்களுடைய பயணக் குறிப்புகளில் தமிழ்மொழி குறித்து எழுதி வைத்துள்ளனர்.

கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பாக சில அரசியல் காரணங்கள் நிமித்தமும் தொழில் நிமித்தம் காரணமாகவும், ஏராளமான தமிழர்கள் புலம்பெயர்ந்து அன்னிய மண்ணில் வசிக்கத் தலைப்ட்டனர். இவர்களில் அதிகமான பேர் இலங்கை யாழ்ப்பாணத் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் அரசியல் நெருக்கடிகள் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களில் அனைவரும் தொழில் நிமித்தமாகவே இங்கிருந்து நகர்ந்து போனவர்கள். ஏற்கனவே ஆங்காங்கே தமிழுக்கு இருந்த பெருமையை மேலும் மேலும் வளர்க்க இத்தகைய புலம்பெயர் தமிழர்கள் பெருமுயற்சி எடுத்து வந்தனர்.

தாங்கள் வசித்து வரும் நாடுகளின் ஆட்சி மொழியில் தமிழ் பங்கு வகிப்பதற்கு இவர்களின் எண்ணிக்கையும் தமிழ் மேலுள்ள பற்றும் ஒரு காரணம். சிங்கப்பூர் அரசினால் தமிழுக்கு மிக உயர்ந்த இடம் தரப்பட்டுள்ளது. இன்று கனடாவில், இங்கிலாந்தில், ·பிரான்சில், ஆஸ்திரேலியாவில், ஜெர்மனியில், ஸ்விட்சர்லாந்தில், டென்மார்க்கில், நார்வேயில் என்று பல நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். கென்யாவில் தமிழ் வகுப்புகள் நடக்கின்றன. கனடாவில் ஏராளமான தமிழ்ப் பத்திரிகைகள் பிரசுரமாகின்றன. லண்டன் தமிழ்ச் சங்கம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பர்மாவில் இன்னும் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வாசிங்டன், பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிக்சிகன், டெக்சாஸ் கோர்னெல், கலிபோர்னியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனத் தொடர்ந்து பலவகைகளிலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் தத்தமது பங்கை ஆற்றி வருகின்றனர்.

மேற்கண்ட பணிகள் எல்லாம் இணையத்தின் வருகைக்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது. ஆனால் இன்றைய நிலைமையில் இணையத்தின் வருகைக்குப் பின்னரான கட்டத்தில் தமிழை வளர்ப்பதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. தமிழை வெறும் பட்டிமன்ற மொழியாகச் சுருக்கி விடாமல் அது விஞ்ஞானப் பூர்வமான மொழியென்றும் உலகுக்கு நிரூபித்திருக்கிறார்கள். அதற்காக மிகப் பெரும்பாலனவர்கள் தங்களுடைய நேரத்தையும், பணதையும் செலவழித்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சிறந்த விளங்குவதற்கும், வளர்வதற்கும் வெளிநாடுகள் வாழ் தமிழர்கள் முயன்று அதன்படி தமிழை இணையத்தில் ஏற்றி வைத்தனர். சிங்கப்பூர் நா. கோவிந்தசாமியின் கடின உழைப்பாலேயே தமிழிணையம் என்கிற வார்த்தையே சாத்தியமாயிற்று. தொடர்ந்து அவரது முயற்சியால் உருவான கணியன் டாட் காம், மற்ற இந்தியத் தமிழிணையத் தளங்களுக்கு முன்னோடியாக இன்றளவும் இருந்து வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவில் தமிழகம் முதன்மையான இடத்தை தற்போது வகித்து வருகிறது. இந்த இடத்தை தமிழகத்துக்குப் பெற்றுத் தந்ததில் வெளிநாடுகள் வாழ் தமிழர்களுக்கு முக்கியமான இடமுண்டு. இதைப் பற்றி மு. ஆனந்தவிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், ''மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது இணையத்திலும் கணிப்பொறி வளர்ச்சியிலும் தமிழகம் முன்னோடியாக விளங்குகின்றது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் தமிழ்நாட்டிலுள்ள அறிஞர்களும் இணைந்து பணியாற்றி வந்ததுதான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இன்று தமிழில் உள்ள இணையப் பத்திரிகைகள் அளவுக்கு வேறு எந்த மொழிகளிலும் தோன்றவில்லை. பல வெளிநாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் இந்திய மொழிகளில் தமிழுக்கும் இந்திக்கும் மட்டுமே முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறார்கள்'' என்று கூறுகிறார்.

வெளிநாடுகள் வாழ் தமிழர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று; இலக்கியப் பின்புலங்களுள்ள ஈழத்துத் தமிழர்கள். இரண்டு; தொழில்நிமித்தமாகத் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தீவிர இலக்கியப் பின்புலமில்லாத தமிழர்கள். ஆரம்பத்தில் தாம் வாழும் நாடுகளில் இலக்கியப் பத்திரிகைகள் நடத்துவது, மாதாந்திரக் கூட்டங்கள் நடத்துவதென்றே ஈழத்துத் தமிழர்கள் தங்களுடைய பணியை ஆற்றி வந்தனர். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழ்ச் சங்கங்கள், தமிழ்க் கற்பிப்பது, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் என்பதுகளில் கவனம் செலுத்தி அதன் மூலம் தம்முடைய இருப்பை வெளிக்காட்டி வந்தனர். இந்த வகையினருக்குத் தமிழ்மொழி மீது மட்டுமே அதிக அளவு ஆர்வமிருந்ததே தவிர தமிழிலக்கியங்கள் மீது பெரும்பான்மையானவர்களுக்கு ஆர்வம் இருக்கவில்லை. தங்களது அடையாளத்தை மற்ற நாட்டவர்களுக்கு எப்படித் தெரிவிப்பதென்பதில் மிதமிஞ்சிய குழப்பத்தில் இருந்து வந்தனர்.

தகவல் தொழில்நுட்பத்தின் வருகையும் அதைத் தொடர்ந்த இணையத்தின் கூரகையும் இந்த தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. தாங்கள் கற்ற தொழில்நுட்பங்களின் வழி தமிழுக்குச் சேவை செய்ய இவர்களுக்கு உரிய வாய்ப்புக் கிடைத்தது. தங்களுக்கும் உயர்நத் பராம்பரியம் இருக்கிறதென்று அன்னியர்களிடம் காட்டிக் கொண்டிருந்த இவர்கள் ஒருபடி மேலே போய் எங்களின் மொழியும்கூட இணையத்தில் வலம் வருகிறது என்று சொல்லிக் கொள்ள ஏதுவாக தங்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்தனர்.

இதுவரை வெறும் இலக்கியக் கூட்டங்கள் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் வழி இணையதளம், தமிழ் மின்னஞ்சல், தமிழ் மின்வணிகம் என தத்தமது தகவல் தொழில் நுட்ப உயர் அறிவைத் தமிழின் வளர்ச்சிக்குச் செலுத்தத் துவங்கினர்.

அடுத்து இந்த வெளிநாடுகள் வாழ் தமிழர்களின் முன்னிருந்த மிகப் பெரிய சிக்கல் தம்முடைய குழந்தைகளுகூகு எவ்வாறு தமிழ்மொழி பற்றியும் தமிழ் பராம்பரியம் பற்றியும் கற்றுத் தருவது என்பதே. அந்தச் சிக்கலை இணையத்தின் வழி தீர்த்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் இணையதளங்களும் அவர்களுக்குப் பேருதவி புரிந்தன. அவர்களுக்காகவே தமிழிணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழிணைய மாநாடுகள் நடத்துவதில் இவர்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு.

தமிழ்நாட்டு அரசை இணையத்தின் பக்கமாகத் திருப்பி விட்டதில் இவர்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றனர். இன்றைய தமிழில் இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் வருவதற்கு இவர்கள் உழைத்தது அசாத்தியமானது. தமிழ்நாட்டிலுள்ள கணிப்பொறி மேதைகளையும் தங்களுடைய பணியில் கைகோர்த்துக் கொண்டனர். அடுத்த தமிழிணைய மாநாட்டை மலேசியத் தமிழர்கள் நடத்தித் தரப் போகிறார்கள். மேலும் பல புதிய தமிழ்மென்பொருள்கள் பற்றி விவாதிக்கப் போகிறார்கள்.

உலகெல்லாம் பரவிக் கிடக்கிற தமிழர்கள் முன்பு மாதிரி பழம்பெருமையை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், உபயோகப் பூர்வமாக தமிழின் பெருமையையும் தமிழர்களின் பெருமையினையும் அனைவருக்கும் எடுத்துக்காட்டத் துவங்கி விட்டனர். உலகளாவிய அளவில் தமிழர்களுடன் எந்த நேரத்திலும் தாய்மொழியிலேயே தொடர்பு கொள்வதற்கு வசதி வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகையொன்று மொழியியல் குறித்து வெளியிட்ட கட்டுரையொன்றில் விரைவில் அழிந்து போகப் போகும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று கருத்துத் தெரிவித்திருந்தது. அதைப் பொய்யாக்கிடும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். வரும் தலைமுறைக்குத் தமிழைக் கற்பிப்பதற்கு உரிய வாய்ப்பு வசதிகள் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் வழியாகவே தங்களுடைய தொடர்புகளை மேற்கொண்டிட வேண்டும். பாரதியின் வரிகளைப் போல் இனிவரும் காலகட்டங்களிலும், தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்திடல் வேண்டும்.

உலகெங்கும் பரந்து பரவியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை (தோராயமான)

1. நேபாளம் 500
2. ஈராக் 1,000
3. கம்போடியா 1,000
4. பிலிப்பைன்ஸ் 1,000
5. ஜிபுட்டி 1,000
6. லாவோஸ் 1,500
7. ஸ்பெயின் 1,500
8. பின்லாந்து 2,000
9. வியட்நாம் 2,000
10. தாய்லாந்து 3,000
11. ஹாங்காங் 3,000
12. போர்ச்சுகல் 3,500
13. காடார் 4,000
14. ஜோர்டான் 4,000
15. இத்தாலி 5,000
16. ப·ரெயின் 5,000
17. ஓமான் 7,000
18. நார்வே 7,000
19. சீசெல்சு 7,540
20. ஸ்வீடன் 9,000
21. எமிரேட்ஸ் 10,000
22. கயானா 10,000
23. குவைத் 10,000
24. நியூசிலாந்து 10,000
25. டென்மார்க் 12,000
26. அமெரிக்க ஐக்கிய நாடுகள் 25,000
27. சவூதி அரேபியா 25,000
28. ஸ்விட்சர்லாந்து 30,000
29. ஜெர்மனி 40,000
30. இந்தோனேஷியா 50,000
31. ஆஸ்திரேலியா 75,000
32. சுரிநாம் 1,00,000
33. பிரான்ஸ் 1,00,000
34. மொரீஷியஸ் 1,10,000
35. சிங்கப்பூர் 1,20,000
36. கனடா 1,50,000
37. மியான்மர் 2,50,000
38. பிரிட்டன் 3,00,000
39. இறியுனியன் 3,50,000
40. பிஜித் தீவுகள் 4,00,000
41. தெ. ஆப்பிரிக்கா 6,00,000
42. மலேசியா 16,00,000
43. ஸ்ரீலங்கா 50,00,000
44. இந்தியா 6,11,00,000
7,05,46,540


நன்றி : 'கறுப்புத் தமிழனே கலங்காதே'.

சரவணன்

© TamilOnline.com