புயலிலே ஒரு தோணி
தமிழ் நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ப. சிங்காரம், நேதாஜியின் I.N.A. எனும் இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை, அதன் அன்றைய செயல்பாட்டைப் பின்புலமாகக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். 'புயலிலே ஒரு தோணி,' 'கடலுக்கு அப்பால்' என்ற இரண்டு நாவல்களும் பினாங்கில் நடக்கும் கதையைப் பின்புலமாகக் கொண்டது. தமிழ் வாழ்வோடு நேதாஜி இயக்கம் கொண்ட உறவையும், பிழைப்பதற்கு வழிதேடி மலேயா, பினாங்கு தோட்ட வேலைகளுக்குப் போன மக்களின் வாழ்வையும், சிங்காரம் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

ப. சிங்காரம் மலேயாவில் ஒரு செட்டியார் கடையில் கடைப் பையனாக இருந்தவர். நகரத்தார்கள் எப்படி இந்திய தேசிய இராணுவத்திற்கு உதவி செய்தனர் என்பதை அறிந்தவர். தமிழ் இராணுவம் உருவானதும், இளைஞர்கள் இதற்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டு வீரர்களாக வீதிகளில் அலைந்ததும் அவர் காலக் காட்சிகள், அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெமிங்வேயின் நாவல்களைப் போல போரின் பின்னணியில் உருவான ப. சிங்காரத்தின் நாவல், 'கலைமகள்' போட்டியில் பரிசு பெற்ற போதும் அவரைத் தமிழ் எழுத்துலகம் அறிந்து கொள்ளவேயில்லை.

மிகச் சாதாரணமான புரு·ப் ரீடர் வேலைபார்த்துக் கொணடு, பிரம்மச்சாரியாக மதுரையின் YMCAன் தனியறையில் தனக்குப் பிடித்த மணிமேகலையும், அன்னா கரீனாவும் படித்துக் கொண்டு மிகத் தனிமையாக வாழ்ந்து சென்ற ஆண்டின் ஜனவரி மாததில் இறந்து போனார் ப. சிங்காரம்.

INA யின் பழைய வீரர்கள் சந்நிதிக்கும் மதுரை ராயல் சலூன் இன்றும் அவர் நினைவாக எவரோ பேசிக் கலைய இருக்கிறது. தமிழ் நாவல் உலகில் இந்த இரண்டு நாவல்கள் காலம் கடந்து நிற்க கூடியவை.

ஹரி கிருஷ்ணா

© TamilOnline.com