இணைய முன்னோடி - நா. கோவிந்தசாமி
தந்தை நாராயணசாமி தனது மகன் கோவிந்தசாமி பற்றி இப்படி நினைத்திருக்க மாட்டார். ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் ஓர் ஆசிரியராக வருவார்; கூடப் போனால் கொஞ்சம் எழுதுவார் என்று யோசித்திருக்கலாம்.

இன்று நா. கோவிந்தசாமி தமிழுலகம் போற்றும் இணைய முன்னோடி; சிங்கப்பூரில் தமிழ்ச் சிறுகதை, நாடகம் எழுதி பல பரிசுகள் பெற்றவர். பல இலக்கிய சந்திப்புகள் நிகழ காரணமாகி இருப்பவர்.... என்று அனைவராலும் ஏதோ ஓர் வகையில் மதிக்கப்படுபவர்.

கோவிந்தசாமி தனது உழைப்பின் மூலம் தமிழை இணையத்தில் நுழைத்தபோது, ''இந்திய மொழிகளில் தமிழ் முதன்முதலாக இணையத்தில் நுழைந்து விட்டது என்று பத்திரிகைகள் எழுதின. இவர் பெரிதும் ஆனந்தப்பட்டார். நண்பர்களுக்குத் தெரிவித்து மகிழ்ந்தார்.

பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளர் பணி செய்து கொண்டே கிடைக்கும் நேரத்தை தமிழ்ப் பணிக்காக அதிலும் குறிப்பாக கணினி மற்றும் இணையத்திற்காகச் செலவிட்டு கணிசமான பங்களிப்பைச் செய்தவர் இவர்.

பெயர், புகழ், பணம் போன்றவற்றிற்காக ஓர் செயலைச் செய்யாது எது செய்தாலும் முழு ஈடுபாட்டோடும் அது தமிழுக்குப் பயன்தரக்கூடியதாகவும் பார்த்துக் கொண்டார்.

1989ம் ஆண்டு 'ஐஇ' விசைப்பலகை (IE Key Board) என்னும் புதிய தட்டச்சு வடிவமைப்பை உருவாக்கினார். அதற்காக தமிழ் எழுத்துகளின் பயன்பாடு, இலக்கணத்தில் கூடுதல் பரிச்சயம் போன்றவற்றிற்கு பல மாதங்கள் வேலை செய்ய நேர்ந்தது. இன்று சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பரலால் பயன்படுத்தப்படுவது இவரது விசைப்பலகை தான்.

ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் இணைய செயல்பாடுகள் தான் வாழ்ந்த சிங்கப்பூரில் முக்கியத்துவம் பெற்ற போது, தமிழ்மொழி இணையத்தில் வரவேண்டும் என்று டாக்டர் டான் டின் வீ, லியோங்க கோக் யாவ் ஆகிய இரு சீனர்களோடு தமிழ் இணைய வேலைகளில் இறங்கினார்.

1995-ம் ஆண்டு அக்டோபர் மாதம தமிழ் இணையத்தில் அடியெடுத்து வைத்தது. நா. கோவிந்தசாமிக்கு அது முக்கியமான பணி. பாராட்டுகளைப் பாராமல் கணியன்.காம் என்ற பெயரில் ஒரு வலையகத்தை தன் சொந்த செலவில் தொடங்கி தமிழுலகச் செய்திகளை இடம் பெறச் செய்தார். சிங்கப்பூரிலிருந்து ஓரளவு தான் செய்ய முடியும் என்ற நிலையில், தமிழகத்தில் ஓர் அலுவலம் திறந்து இந்தியா டூடே இதழில் பணியாற்றிய செ.ச. செந்தில்நாதனை பொறுப்பாளராக்கி தமிழகச் செய்திகளை கலை- இலக்கியம் பற்றிய விஷயங்களை - படைப்புகளை கணியனில் இடம் பெறச் செய்தார்.

உலகம் முழுதும் பரவி வாழும் தமிழர்களும் ஆங்காங்கே பல்வேறு வேலைகளை இணையத்தில் செய்து வந்தனர். அவர்களை ஓரிடத்தில் கூடச்செய்து தமிழ் இணையச் செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ளவும், பிரச்சனைகளை கூடித் தீர்க்கவும் tamilnet'97 - International symphosium for tamil information processing and resources on the internet என்ற தலைப்பில் ஓர் தமிழிணைய மாநாட்டை தனது முயற்சியால் நடத்தியவர் நா. கோ.

அம்மாநாட்டில் உலகத் தமிழ் இணைய செயல்பாடுகள் அறிய வந்தன. பலரது உழைப்பும் பல மென்பொருள் உருவாக்கங்களும் தெரிய வந்தன. மாநாட்டிற்குப் பின்னும் மின்னஞ்சலில் கருத்துப் பரிமாற்றங்கள் - விவாதங்கள் நடந்தன.

இப்படியான இணையப் பகிர்வுகள் தமிழ்மொழியை இணையத்தில் ஓர் முக்கிய மொழியாக ஆக்கியது. பன்னாட்டுத் தமிழர்களும் தங்கள் பங்கிற்கு படைப்புகளை செய்திகளை இணையத்தில் ஏற்றியதால் தமிழ்இணைய பக்கங்கள் ஆயிரக்கணக்கில் - லட்சக்கணக்கில் என்று அகண்டது; இணையத் தமிழின் எல்லை விரிவுப்பட்டது.

அதைத் தொடர்ந்து 199ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் இரண்டாவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் தமிழக அரசு நடத்திய அம்மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி நா.கோவிந்தசாமி (சிங்கப்பூர் பிரதிநிதி)யை கெளரவித்தார்.

கோவிந்தசாமிக்கும் இன்னும் இன்னும்... செய்ய ஏராளமான திட்டங்கள் வைத்திருந்தார். அவற்றில் நல்ல தேடுதல் அமைப்பு (Search Engine) புதிய தொழில்நுட்பங்களில் தமிழில் எதையும் சாத்தியப்படுத்து.... போன்றவற்றையும் வைத்திருந்தார்.

இணையம் தொடர்பான சிறு கூட்டமென்றாலும சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்துவிடுவார்; கூடவே இலக்கியச் சந்திப்புகள் நடத்துவார்; புதிய வருகைகளைத் தெரிந்து கொள்வார்; தனது செயல்பாடுகளை இங்குள்ளவர்களிடம் காட்டவும் - பகிரவும் செய்வார். அது ஓர் உற்சாகமாக அமைந்தது.

இப்படி கணினி, இணையம், படைப்பு..... என்று பல்துறைகளில் ஈடுபட்ட அவரிடம், நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? என்று கேட்டபோது, 'நான் ஒரு படைப்புக் கலைஞனாகத் தான் அறிமுகமாக விரும்புகிறேன்' என்றார்.

தான் ஒரு படைப்பாளியாக இருந்தாலும தமி¡க எழுத்தாளர்களையும் ஈழத்து எழுத்தாளர்களையும் சிங்கப்பூருக்கு அழைத்து சொற்பொழிவுகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்தார் நா.கோ.

1946-ஆம் ஆண்டு பிறந்த கோவிந்தசாமி 'உள்ளொளியைத் தேடி', 'வேள்வி', 'தேடி',..... ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் பல சிங்கப்பூரில் பிரபலமானவை.

நிறைய கனவுகளோடும் திட்டங்களோடும் இருந்த பேராசிரியர், தமிழிணைய அறிஞர், தமிழ் எழுத்தாளர் நா. கோவிந்தசாமி 1999-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

பரந்த நண்பர்கள் வட்டத்தையும் வாசகர் வட்டத்தையும் கொண்ட நா. கோ. பலரையும் உற்சாகப்படுத்தி எழுதச் செய்ததையும் இணையத்தில் ஈடுபடச் செய்ததையும் மூன்றாவது தமிழ் இணைய மாநாட்டிற்காக சிங்கப்பூர் போன போது அறிய முடிந்தது.

நாதன்

© TamilOnline.com