'ஏன் அத்தை சிரமப்படுறீங்க. எல்லாவற்றையும் என்னிடம் கொடுங்க. நான் ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினில் போட்டு நன்றாக துவைத்து காய வைத்து தருகிறேன்' விசயத்தை இப்படி அந்தரத்திலிருந்து ஆரம்பிப்பது சரியல்ல! அதனால் இந்த வசனம் என் மருமகள் சொல்வதற்கு முன்னாலுள்ள சம்பவங்களைச் சொல்லி விட்டு மறுபடியும் வசனத்திற்கு வருகிறேன்.
நான் சந்தித்த ஒரு இக்ட்டான சூழ்நிலையைச் சொல்வதற்கே இந்தப் பீடிகையெல்லாம்.
நானும் என் கணவரும் அகில உல அரிமா சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வந்தோம். ஊர் விட்டு ஊர் வந்தால் ஊர் சுற்றாமல் இருக்க முடியுமா? நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ, இண்டியானா, பாரிஸ் முதலிய ஊர்களுக்குச் சென்று விடடு என் மகன் இருக்கும் இடமான சான்பிரான்ஸிக்கோ வந்§¡ம். கடந்த ஒரு மாதமாக ஐரோப்பா, சுவிட்சர்லாந்து, அமெரிக்க நாடுகளில் நாங்கள் சுற்றுப் பயணம் செய்ததால், இருக்கிற எல்லா உடைகளையும் சலவை செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.
என்னுடைய மகனின் வீட்டிற்கு வந்தும் என்னுடைய மருமகளிடம், ''ஏம்மா கவிதா! இந்தத் துணிகளை எல்லாம் நன்றாகத் துவைத்துக் காய வைக்க வேண்டும்'' என்று கவலையோடு கேட்டேன்.
அதற்கு அவள், ''ஏன் அத்தை சிரமப்படுறீங்க. எல்லாவற்றையும் என்னிடம் கொடுங்க. நான் ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினில் போட்டு நன்றாக துவைத்து காய வைத்து தருகிறேன்'' என்றாள்.
மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சனை ஓய்ந்ததில் எனக்கு பரம திருப்தி. அவள் சொன்ன விதம், துணிகளை நன்றாகச் சலவை செய்து, வெயிலில் உலர்த்தி ஒழுங்காக மடித்து அடுக்கி வைக்கிற காட்சியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. என்னுடைய கண்களை அகலமாக விரித்து புன்சிரிப்போடு பலமாகத் தலையை அசைத்தேன். விளம்பரங்களில் வருவது மாதிரி 'ஒன் மினிட்' என என் மருமகளும் எங்களுடைய உடைகளைச் சலவை செய்ய புறப்பட்டாள். அமெரிக்க வந்த பிறகும் மாமியாருக்குப் பணி செய்து கிடப்பதே என் கடமையென நினைத்துக் கொண்டிருக்கும் என் மருமகளை நினைத்து எனக்குப் பெருமையோ பெருமை. பெருமைப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு மறுநாள் எனக்கு ஏற்படப்போகும் அதிர்ச்சியைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.
மறுநாள் காலை நான் உடைமாற்றிக் கொள்ள மருமகள் அமெரிக்க இயந்திரத்தில் துவைத்துக் காய வைத்த புடவையை எடுத்த போது எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. என் பட்டுப்புடவை, சில்க் புடவை எல்லாம் பல நூறு சுருக்கத்துடன் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தன.
''ஏம்மா கவிதா ஏன் இப்படி புடவையெல்லாம் கசங்கி பழசாக இருக்கிறது'' என்று அழாத குறையாகக் கேட்டேன்.
''ஆமா அத்தே! இந்த மெஷினில் துவைத்து காய வைத்¡ல் இப்படித் தான் இருக்கும். ஆனால் நம் ஊர் போல் சிரமப்பட்டு துவைக்க வேண்டாம். வெயிலில் காய போட வேண்டாம். எல்லாம் ஒரே நேரத்தில் ''சட்'' என்று முடிந்து விடும்'' என்று பட்டென உற்சாகமாக விளம்பரப் பாணியில் கைகளை ஆட்டியபடி சொன்னாள்.
அப்போதைக்கு அவளுடைய உற்சாகத்தை கெடுக்க விரும்பவில்லை. அதே சயமம் என்னுடைய மனதும் சமாதானமடையவில்லை. மறுநாள் கையோடு கொண்டு போயிருந்த ''ரின் சோப்பைக் கொண்டு நன்றாக துவைத்து நீரில் அலசினேன். வெயிலில் காய வைக்க வேண்டுமே!
வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு வந்தேன். துணிகளை உலர்த்த சரியான இடம். நான் உடனே கையோடு கொண்டுவந்திருந்த சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு நைலான் கயிற்றின் ஒரு முனையை வீட்டின் வெளிப்புற மரத்தில் கட்டினேன். மறுநுனியை ஆப்பிள் மரத்தில் கட்டினேன்.
'கொடி ரெடி' துணிகளைச் சுருக்கம் இல்லாமல் அழகாக உலர்த்தி கிளிப்புகளைப் போட்டேன், சலவையும் ரெடி.
மாலையில் துணிகளை அழகாக மடித்து என் மருமகளிடம் பெருமை பொங்கக் காட்டி அவள் என்னைப் பாராட்டுவாள் என்று எண்ணினேன். ஆனால் அவளோ, ''இந்த மாதிரி கொடி கட்டி துணிகளை நம்மூர் போல காண வைப்பது அவருக்கு பிடிக்காது. இங்கே எல்லாம் இப்படி யாரும் கொடிகட்டி துணிகளை காய போட மாட்டார்கள்'' என்றாளே பார்க்கலாம்.
கொடி கட்டியது கட்டியாகி விட்டது. இனி என்ன என்று எண்ணியபடியே, ''சரி, சரி அவன் வந்தால் நான் சொல்லிக் கொள்ளுகிறேன்'', என்று சொல்லி விட்டு அன்னிய மண்ணில் நம் ஊர் கொடியை (கயிற்றை) கட்டிய மரத்தை மீண்டும் வீரப் புன்னகையோடு நோக்கியபடியே உள்ளே வந்தேன். நான் இந்த அன்னிய மண்ணில் இருக்கும் வரை நம்ம ஊர் கொடி பறக்கும். அப்போது தானே நாளைக்கும் துணிகளை காய வைக்க முடியும்?
கே. மீனாட்சி தியாகராசன் |