''I.T. மறைந்து விடும்'' - மு. அனந்தகிருஷ்ணன்
அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் துணைவேந்தர். தமிழ்நாடு உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர். இந்திய உயர்கல்விக் குழுக்களின் ஆலோசகர். உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர். முன்னாள் தமிழக முதல்வரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்... எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு திறம்படச் செயலாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்களுடனான ஒரு சந்திப்பு.

தகவல் தொழில் நுட்பத்துறை தோற்று விட்டதாகச் சொல்வதைப் பற்றி?

இந்த டெக்னாலஜி தோற்றுவிட்டதாகச் சொல்ல முடியாது. தற்போது சின்ன பின்னடைவு அவ்வளவு தான். காரணம் இந்தியாவைப் பொறுத்தவரை அடிமட்டத் திறமைகளை வளர்ப்பதிலேயே அதிகக் கவனத்தைச் செலுத்தி வருகிறோம். மாணவர்களும் தகவல் தொழில் நுட்பம் என்கிற கவர்ச்சியில் ஒரு குறிக்கோளே இல்லாமல் படித்து வருகிறார்கள். எல்லாத் துறைகளிலும் கால் வைத்துச் சிறப்பைத் தேர்ச்சி பெறாமல் போய்விடுகிறார்கள். தெருவுக்குத் தெரு தோன்றிய கணிபொறி பயிற்சி நிறுவனங்களும் அரைகுறையாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கின்றன. உதாணரத்துக்கு சொல்வதென்றால், எனக்குத் தெரிந்த மாணவி ஒருத்தி எனக்கு இ-காமர்ஸ் தெரியும், ஜாவா தெரியும், வேலை வாங்கிக் கொடுங்கள் என்றாள். ஆனால் உண்மையில் இரண்டும் படித்த அவளுக்கு இரண்டிலும் சிறப்புத் தேர்ச்சி இல்லைவே இல்லை. இப்படி இருக்கிற கட்டத்தில் நம்மால் எப்படி தகவல் தொழில்நுட்பத்தில் உலகத் தரத்துக்குச் சவால்விட முடியும். ஆனால் இந்தப் பின்னடைவால் ஒன்றை உணர்ந்திருக்கிறோம். இந்தத் தோல்வி எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளது. கண்டிப்பாக இந்தத் துறை மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மீண்டு வரும்.

அடுத்து வரும் வருடங்களில் ஐ.டி. என்பது மறைந்து விடும். அது தனித் துறையாக இருக்காது. ஐ.டி. மெக்கானிக்கல், ஐ.டி. இஞ்சினியரிங், ஐ.டி. பயாலஜி என ஒவ்வொரு துறையோடும் ஐ.டி. இரண்டறக் கலந்துவிடும். இனி ஐ.டி. எனத் தனிப்பட்டுப் படிக்கத் தேவையில்லை.

தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள் எந்தக் கட்டத்தில் இருக்கிறது?

தமிழிணையப் பல்கலைக்கழகம் மாதிரிச் செயல்பாட்டளவில் தான் இருக்கிறது. 65 நாடுகளில் இருந்து பலர் விண்ணப்பப் படிவதைப் பூர்த்தி செய்து தந்திருக்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட இது அதிகம். தொடங்கிய மூன்று மாதங்களிலேயே இத்தகைய வரவேற்புக் கிடைத்தது பெருமைப் பட வேண்டிய விசயமே. பாடத்திட்டம், கட்டணம், தேர்வு முறைகள் போன்றவைகளைப் பற்றி விவாதித்து வருகிறோம். அந்த அந்த 65 நாடுகளிலுள்ள சில பல்கலைக் கழகங்களைத் தேர்ந்தெடுத்து எவ்வாறு தேர்வுகள் வைப்பது என்பதைக் கலந்தாலோசித்து முடிவுக்கு வருவோம்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகத்தின் நிலை?

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போத இணையத்திலும் கணிப்பொறி வளர்ச்சியிலும் தமிழகம் முன்னோடியாகத் தான் விளங்குகின்றது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் தமிழ்நாட்டிலுள்ள அறிஞர்களும் இணைந்து பணியாற்றி வந்ததுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இன்று தமிழில் உள்ள இணையப் பத்திரிகைகள் அளவுக்கு வேறு எந்த மொழிகளிலும் தோன்றவில்லை. பல வெளிநாட்டு மென்பொருள் தயார்ப்பு நிறுவனங்களும் இந்திய மொழிகளில் தமிழுக்கும் இந்திக்கும் மட்டுமே முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறார்கள்.

தமிழ் வழி மின் வர்த்தகம் சாத்தியமா?

மின் வர்த்தகத்தில் ஆங்கிலம் மட்டுமே சாத்தியம். ஒருவேளை மார்கெட்டில் உங்களுஐடய குறி தமிழ்நாடாக இருக்கிறபட்சத்தில் மட்டும் தமிழ் மின்வணிகம் சாத்தியம். தஞ்சாவூர் பொம்மையை அமெரிக்காவில் ஒருவர் விற்க எண்ணினால் ஆங்கிலத்தைத் தான் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. உள்ளூரில் மட்டும் வேண்டுமானால் தமிழில் செய்து கொள்ளலாம்.

தமிழிணையத் தளங்களில் வெவ்வேறு எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுவதால் படிப்பதற்கும் பிரதி எடுப்பதற்கும் சிரமமாக இருக்கிறது என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்களே, அதை எப்படி நிவர்த்தி செய்வது?

ஒரே எழுத்துரு அனைவரும் பயன்படுத்துவது என்பதை நாம் வலியுறுத்த முடியாது. மேலும் அவரவர்களுக்கு தேவையான எழுத்துருக்களை உள்ளீடு செய்து கொள்ளத் தயாராகயிருக்கும் போது நம்மால் என்ன சொல்ல முடியும். இன்னும் கொஞ்சக் காலத்தில் எழுத்துருக்களைப் பற்றிய கவலையில்லாமல் செயல்படும் நிலை வரும். அதுவரை இதுபோன்ற சிக்கல்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.

கடந்த மாநாடுகள் பற்றியும் அந்த மாநாடுகளில் நீங்கள் முடிவெடுத்த விதமும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்ல முடியுமா?

1999 பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் முதல் இணைய மாநாடு நடைபெற்றது. அதற்கு முன்னர் அவ்வப்போது நடப்பதுண்டு. ஆனால் முறையாக அதிகாரப் பூர்வமாக நடத்தப்படவில்லை. முதல் அதிகாரப்பூர்வமான மாநாடு என்று சொல்வதென்றால், 2000-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டைத் தான் சொல்ல வேண்டும். இந்த மாநாட்டில் முக்கியத் தீர்மானமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற மாநாட்டை நடத்த வேண்டும் என்பது முடிவெடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாநாட்டிலும் தீட்டப்படும் திட்டங்களைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அடுத்த மாநாட்டில் விவாதித்து மேலும் எவ்வாறு புதியவாறு நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

தமிழிணைய இரண்டாவது மாநாட்டை முதலில் இலங்கையில் தான் நடத்துவதாகயிருந்தது. ஆனால் அங்குள்ள அரசியல் சூழல்களின் காரணமாகச் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தோம். மூன்றாவது மாநாடான தமிழிணையம் 2001 வரும் ஆகஸ்ட் மாதம் 26, 28 ஆகிய தேதிகளில் கோலாம்பூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதுற்கு தாத்தோ சாமிவேலின் உதவி அளப்பரியது. அடுத்த மாநாடு 2002-இல் அமெரிக்காவில் நடத்த வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறோம். இந்த மாநாடு அமெரிக்காவில் நடைபெறுவதற்கு மணி மணிவண்ணன் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கை, தமிழ்நாடு போன்ற தமிழ் ஆர்வம் மிகுந்த பகுதிகளிலும் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதிகளிலும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு இணையாகத் தமிழ்மொழி எவ்வாறு ஈடுகொடுக்க முடியும் என்பதைப் பற்றி விவாதித்துப் பல புதிய முடிவுகளை எடுக்க உள்ளோம். கடந்த சிங்கப்பூர் மாநாட்டின் விளைவாகச் சிங்கப்பூர் அரசு தமிழிணைய வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பல உதவிகளைச் செய்தது. அதன்படி உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்தை உருவாக்கி அதற்கு என்னைச் சேர்மனாகத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த மன்றத்திற்கான செயலகம் அமைக்கச் சிங்கப்பூர் அரசு போதுமான உதவிகளை எங்களுக்குச் செய்து தந்தது. சிங்கப்பூர்வாசியும் தமிழார்வலருமான அருள்மகிழ்னனை இந்த மன்றத்துக்கு நிர்வாக இயக்குநராக நியமித்தார்கள். அவரும் இன்று வரை சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

உத்தமம் என்பது தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சுருக்கப் பெயர். இந்த மன்றத்தின் நோக்கம் ஒவ்வொரு மாநாட்டிலும் எடுக்கப்படும் முடிவுகளை எந்தெந்த வகைகளில் செயல்படுத்துவது என்பதை வலியுறுத்துவதாகவும், நிர்வாகப் பணிகளுக்காக நிதியுதவிகளைத் திரட்டுவதும், உலக நாடுகளில் வசித்து வரும் அறிஞர்களை பணிகளை நோக்கி ஈடுபடுத்துவதமாகும்.

இந்த மன்றத்தின் முதல்கட்டப் பணியாக Working Group என ஒவ்வொரு பிரிவாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு குழுவினருக்கும் தனித்தனிப் பணிகள் கொடுக்கப்பட்டன. தமிழ்ச் சொல்லாக்கம், தொழில்நுட்பச் செயல்பாடுகள், விசைப்பலகை வடிவமைப்பு போன்ற பணிகள் தரப்பட்டன. அந்த மன்றத்தின் செயல்பாடுகள் இன்னும் சிறப்பான முறையில் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

தமிழ்மொழி என்று மட்டுமே இதுவரை நடந்து வந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இணையத்திலும் கணிப்பொறியிலும் எவ்வாறு வெற்றி பெற்ற மொழியாகத் தமிழை மாற்றியமைப்பது என்று விவாதிக்கப்பட்டது. கடந்த அரசு தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்கான நிதியாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கித் தந்தது. இந்த நிதிப் பணத்தைக் கொண்டும் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழிணைய முதல் மாநாட்டிலிருந்து இன்று வரையிலான குறிப்பிட்ட வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால், தமிழில் இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் வந்துவிட்டன. இவை மார்கெட்டிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றதைச் சொல்லலாம்.

இந்த ஆண்டு மாநாட்டில் முக்கிய விவாதங்கள் என்னென்ன?

இந்த மாநாட்டில் முக்கியமான சில சிக்கல்களைப் பற்றி விவாதிக்க உள்ளோம். புதுப்புதுப் பன்னாட்டு நிறுவனங்கள் புதுப் புதுச் செயலிகளைக் கண்டுபிடித்துக் கொண்டே செல்கிறார்கள். நாம் கண்டுபிடிக்கும் மென்பொருட்கள் அவைகளுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் இருக்க வேண்டுமென்பதில் நாம் அதிகச் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உலகளாவிய நிபுணர்கள் புதுப்புது Browsers - களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதற்கும் ஈடுகொடுக்க வேண்டும். அதுவுமில்லாமல் தமிழில் முறையான தேடுதல் அமைப்பு இதுவரை இல்லை. இப்போது இருக்கும் அமைப்புகளிலும் தமிழை ஆங்கில உச்சரிப்பின்படியே அடித்துப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே முறையான தமிழ் வழியிலேயே உள்ளீடு செய்யும் வகையில் தேடுதல் எந்திரத்தை அமைக்க வேண்டும். சிறப்பான வகையில் தேடுதல் எந்திரத்தை வடிவமைப்பதற்குத் திறமையான ஆட்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களையெல்லாம் இந்தப் பணியில் ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய இப்போதைய பணி. இந்த மாநாட்டில் இந்தச் சிக்கல்கள் பற்றி விவாதித்து அடுத்த மாநாட்டுக்குள் இதைச் செயல்படுத்த உறுதியும் செயல்படவுள்ளோம்.

கணிப்பொறி சொல்லாக்கம் பற்றிய 10,000 வார்த்தைகளைப் பல்வேறு அறிஞர்கள் கூடி விவாதித்து உருவாக்கியுள்ளதைப் பற்றி விவாதித்து அவற்றை எல்லோரும் பயன்படுத்துவது குறித்துப் பரிந்துரைப்போம். இதை வற்புறுத்த மாட்டோம். பரிந்துரை மட்டுமே செய்வோம். Multimedia conten, The digiral divide, Entrepreneuship in the new economy, Wireless applications and Technology standards for Tamil Internet போன்றவைகள் பற்றி விவாதித்து முடிவுக்கு வர உள்ளோம்.

தமிழில் speech synthesiser கொண்டு வருவதற்கான பணிகள் எந்தளவில் இருக்கிறது?

speech synthesiser தமிழில் கொண்டு வருவதற்குச் சிக்கல் இருக்கிறது. Text to speech, Speech to text என்று இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. தமிழில் உள்ள மெல்லின வல்லின இடையின ஒலிப்பு முறைகளுக்கு ஏதுவாக ஆங்கில மொழி ஒத்துப் போகவில்லை. இதனால் ஆங்கிலத்தில் மாற்றுவது இப்போதைக்குக் கடினம். ஒலி அமைப்பு என்று எடுத்துக் கொண்டால் பெண்கள் பேசுவதற்கும் ஆண்கள் பேசுவதற்கும் ஒலிப்பு முறைகளில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதனால் இதைத் தரப்படுத்துவது கடினம். இந்தப் பணிக்காக தமிழ்மென்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிதியுதவி ஒதுக்கியுள்ளோம். அதற்கான ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் இது சிறப்பாகச் செயல்படுமென்று நம்புகிறோம்.

தமிழில் Optical character recognition கொண்டு வருவது பற்றி.........

Optical character recogonizer சிறப்பாகச் செயல்படவும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. Data Base மூலம் வார்த்தைகளைச் சேகரித்து வைத்து உச்சரிக்கும் ஒலிகளின்படி அந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கும்படி தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயன்படுத்துகிற கட்டத்துக்கு வருகிற பட்சத்தில் பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களும் கணிப்பொறியைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாயிருக்கும்.

தமிழில் Word Processor சிறப்பாகச் செயல்படுகிறதா?

Word Processor தமிழில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. டெக்ஸ்டாப் பப்ளிஸிங்கிற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழில் கம்பன், பதமி, இளங்கோ போன்ற எண்ணற்ற மென்பொருட்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.

Optical cable fibre பதிக்கும் பணியின் தற்போதைய நிலை?

ஆப்டிக்கல் கேபில் பதிக்கும் முயற்சியில் ஸ்டெர்லிங் மற்றும் ரிலையன்ஸ் கம்பெனிகள் இறங்கியுள்ளன. இன்னொரு ஆறு மாதத்தில் நகர்ப்புறங்களில் இந்தப் பணி முடிவடைந்து விடும். ஆப்டிகல் கேபில் பதிக்கும் பணி முடிவடைகிற கட்டத்தில் வணிகம், கல்வி போன்ற துறைகள் மிகுந்த பயன்பாட்டைப் பெறும் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் ஆந்திராவுக்குத்தான் தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்கு அதிக நிதியுதவியும் வருமானமும் கிடைப்பதாகச் சொல்கிறார்களே?

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது நமக்கு அதிகளவில் வெளிநாட்டு நிதியுதவி கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றது. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதைப் போல் எல்லோரும் எங்களுக்குத்தான் அதிகமாகக் கிடைக்கிறதென்று சொல்லிக் கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக 93-94-இல் நம்முடைய மென்பொருள் ஏற்றுமதி வருமானம் வெறும் இரண்ட கோடி தான். ஆனால் 2000-2001-இல் மட்டும் 3116 கோடி கிடைத்துள்ளது. இந்தியாவில் அதிகமாக 39% நிதியுதவி பெறுவது பெங்களூர் தான். அதற்கடுத்தப்படியாக தமிழ்நாட்டில் 37 சதவிகிதமும், ஆந்திரா போன்ற மாநிலங்களில் 6 சதவிகிதமும் கிடைக்கிறது. அதுவுமில்லாமல் டைடல்பார்க் போன்ற ஒன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதை வைத்தே புரிந்து கொள்ளலாம் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதை.

இது மாதிரியான தேவையற்ற விவாதங்களை எப்படித் தவிர்த்து ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்?

அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி போல தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை இணைத்து தகவல் தொழில்நுட்ப முக்கோணம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அவர்களது தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும். நம்முடையதை அவர்கள் பயன்படுத்த வேண்டும். நமக்குள் ஒன்றுபட்டுச் செயல்பட்டால்தான் உலகளாவிய சந்தையில் நாம் வெற்றி பெற முடியும்.

எளிய மக்களுக்குக் கணிப்பொறியைக் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டதே! அது எந்தளவில் இருக்கிறது?

எளிய மக்களுக்குக் கணிப்பொறி வசதி செய்து தரவேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு தான் கையிலெடுத்துச் செயல்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கைக்குக் கம்ப்யூட்டர் கிடைப்பது என்பது கனவு. கைக்கு எட்டும் தூரத்தில் கொண்டு வருவது தான் இப்போதைக்குச் சாத்தியம். ஆனால் ஒன்று மட்டும் நிஜம். கணிப்பொறி அறிவற்றவர்கள் எதிர்காலத்தில் எழுத்தறிவற்றவர்களைப் போல் கருதப்படுவார்கள்.

எதிர்காலத்தில் இணையத்தில் தமிழின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

கணிப்பொறியில் தமிழின் எதிர்காலம் என்று பார்த்தால் ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணிப்பொறியைப் பயன்படுத்தும்படியான வடிவமைக்கப்படும். ஒரு விவசாயி கூட தமிழில் அமெரிக்காவில் வசிக்கும் தன்னுடைய மகனுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியும். கோயம்போடு மார்கெட்டில் இன்றைய கறிகாய் விலை நிலவரத்தைப் பார்த்துக் கொள்ளலாம். ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட மற்றவர்களின் உதவியில்லாமல் கணிப்பொறியைப் பயன்படுத்த முடியும்.

சந்திப்பு:சரவணன்

© TamilOnline.com