பலரும் எதிர்பார்த்த South Indian Fine Arts (SIFA) - வின் புதிய முயற்சியான ஸ்ரீ துக்காராம் கணபதியின் அபங்கங்கள் பாடும் கச்சேரி ஆச்சரியப்படும் வகையில் அமைந்திருந்தது. தென் தமிழகத்தில் கடையநல்லூரைச் சொந்த ஊராகக் கொண்டவர் ஸ்ரீதுக்காராம் கணபதி. பாண்டுரங்கனைத் துதிபாடும் 'வாரகரி' சம்பிரதாயமான மராட்டிய அபங்கங்களை மிகவும் துல்லியமான மராட்டிய மொழியில் பாடியது மட்டுமின்றி அவற்றிற்கு சுவையான தமிழ் விளக்கங்களையும் இவர் வழங்கினார். ஜூன் ஆறாம் தேதி சான் ஹோசே-யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி SIFA-வின் முதல் பயிற்சியாகும்.
அவருடன் சற்று உரையாடியதில், அவர் தனது பன்னிரண்டாவது வயதில் அபங்கங்களால் ஈர்க்கப்பட்டு பின், மஹராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரத்தில் வாசம் செய்து, அவற்றைக் கற்று, அதில் புலமையும் பெற்றதை உணர முடிந்தது. இந்தியாவில் தன் இல்லத்தைப் பாண்டு ரங்கனின் கோவிலாக மாற்றியிருக்கும் இவர் சுமார் 45 வயது முதிர்ந்த பசுக்களைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறார், எந்த எதிர்பார்ப்புமின்றி.
மொழி வேறானாலும், நம் பக்தி உணர்வு ஒன்றே என்பதை துக்காராம், நாமதேவர், ஞானேஷ்வர் போன்றவர்கள் மராட்டிய மொழியில் பாடியதை தமிழ் உணர்வுன் கூறி அனைவரையும் பரவசப்படுத்தினார். மேலும் இடையில் அவர் ஒளவையார், சிவவாக்கியர், புரந்தரதாஸர் கருத்துகளின் ஒற்றுமையையும் விளக்கினார்.
மெல்லிய நகைச்சுவையுடன் அவர் வழங்கிய விளக்க உரை, அமெரிக்க வாசம் செய்யும் நம்முடைய வாழ்க்கை முறையிலும் பக்தியை கடைப்பிடிக்க முடியும் என்பதை விளக்கியது.
கர்நாடக சங்கீதம் இப்போதை பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர முற்காலத்தில் பக்தியைப் பரப்பும் ஒரு கருவியாக இருந்தது தெரிந்தது.
ஸ்ரீ துக்காராம் கணபதி கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி ராகங்களை மிகவும் கவர்ச்சியாகவும் தெளிவாகவும் இனிமையாகவும் உணர்ச்சிகரமாகவும் பாடி நம் இசையில் ஒரு புதிய பரிணாமத்தைக் காட்டினார். இது இந்நாட்களில் இலக்கணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பாடுபவர்களிடமிருந்து வேறுபட்டிருந்தது. திரு. வெங்கடேஷின் பக்கவாஜ் (மிருதங்கத்தை போல் உள்ள வட இந்திய வாத்தியம்) மற்றும் திரு. சூரஜின் தபலா இந்த இசைக்குப் பக்க பலமாக இருந்தது.
கேட்டவர்கள் அனைவரையும் அவர் இசையால் பண்டரிபுரத்திற்கு அழைத்துச் சென்றார் ஸ்ரீதுக்காராம். இந்த இசை ஒரு கோவிலின் பின்னணியில் நடந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றியது என்றால் SIFA-வின் இந்த முயற்சியைப் பாராட்டுவோம்.
பத்மப்ரியன் |