கலி·போர்னியா தமிழ் கழகத் (California Tamil Academy) தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா ஸான் ஓஸேவிலுள்ள C.E.T. கலையரங்கில் ஜூன் 7 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது. இந்தப் பள்ளியில் தமிழ் பயிலும் சுமார் 125 மாணவ, மாணவியர்கள், 25 ஆசிரியர்கள் மட்டுமின்றி ஏறத்தாழ 250 பெற்றோர்களும் தாத்தா பாட்டிமார்களும் மற்றும் சான்·ப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி தமிழ் மன்றத்தினரும் இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பள்ளிச் சிறுவர், சிறுமிகளின் பாடல்கள், கதைகள், நடனங்கள், குட்டி நாடகங்கள் அடங்கிய பல்சுவை நிகழ்ச்சிகள் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தளிக்கும் வகையில் இடம் பெற்றன. இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பாரதி நாடக மன்றம் வழஙூகிய மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 'அக்கினிக் குஞ்சு' என்ற வரலாற்று நாடகம் கண்ணுக்கும் செவிக்கும் மட்டுமின்றி சிந்தனைக்கும் விருந்தாக அமைந்திருந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, ஆண்டறிக்கை போன்ற சம்பிரதாயங்களுக்குப் பிறகு, 'பாலும் தெளி தேனும்...' பாடலுடன் பல்சுவை நிகழ்ச்சிகளைத் துவக்கினர். 4 - 7 வயது வரையிலான குழந்தைகள் 'கை வீசம்மா கைவீசு ...' பாட்டை 'Mary Had A Little Lamb...' என்ற மெட்டில் அமெரிக்காவுக்குத் தகுந்த மாதிரி 'Pizza" வாங்கலாம் கைவீசு....' என்று புதுமையாகப் பாடினார்கள். பாரதியின் 'ஓடி விளையாடு பாப்பா...', அவரைப் பற்றி 'இங்கே பாரு பாரதி....', 'கோடைக் காலம வந்தாச்சு தங்கமே தங்கம்...' போன்ற பாடல்களை இனிமையாகப் பாடினர். பாரதியின் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே.....' பாட்டிற்குக் கும்மியடித்து ஆடி அனைவர் மனதையும் கவர்ந்ததுடன், ''இது என்ன பாரதி விழாவா?'' என்று அனைவரையும் வியக்கவும் வைத்தனர். மழலை மொழியில் அவர்கள் வழங்கிய 'எலியும் சிங்கமும்' மற்றும் 'தாகமான காகம்' போன்ற கதைகள் பெற்றோர்களுக்குப் பெருமையளிப்பதாக இருந்தது.
8 - 10 வயது மாணவர்கள், 'பாரத விலாஸ்' திரைப்படத்தில் வரும் ''இந்திய நாடு என் வீடு...'' என்ற பாட்டுக்குப் பல மொழி, பல மதத்தைச் சேர்ந்தவர்கள் போல வேடமணிந்து சிறப்பாக ஆடி, எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந்திய மக்கள் என்ற கருத்தை எடுத்துக்காட்டினர். திருவிளையாடல், மன்னன் சாலமனின் விவேகமான தீர்ப்பு போன்ற புராண நாடகங்கள், பொங்கல் பற்றிய செயல் விளக்கக் கலந்துரையாடல் இவைகளையும் அருமையாக நடத்தினர்.
''புதிதாகத் தமிழ் கற்றுக் கொண்டிருந்தாலும், தமிழில் சிலேடை பேசுவதில் நாங்கள் ஒன்றும் சிறியவர்கள் அல்ல!'' என்று நிரூபித்தனர் 'சிலேடை சின்னசாமி' என்ற குட்டி நகைச்சுவை நாடகத்தில் நடித்த சிறுவர் சிறுமியர். கடைக்கு வந்த ஒருவர், ''புத்தகத்தின் விலையைக் கொஞ்சம் குறைத்துக் கொடுங்கள்'', என்று கேட்க, ''லொள், லொள்'' என்று குரைத்துக் கொடுக்கும் ''லொள்ளு'' சின்னசாமி, ''பழம்பூ'' என்றால் ''பழைய பூவா? இல்லை, பழமும் பூவுமா?'', என்று கேட்டும், ''முட்டை கோழியாகும், மீன்கருவாடு ஆகாது'', என்று டாக்டர் சொல்ல, ''முட்டை கோழியாகும் அது சரி. ஆனால் மீன் கருவாடாகுதுன்னு சொல்றீங்களே, அது எப்படி?'' என்றும் கேட்கிறார். வெடி வசனமும் கடி ஜோக்குமாக அனைவரையும் அசத்தியது சிலேடை சின்னசாமி நாடகம்.
மேல்வகுப்பு மாணவியர் வழங்கிய பல்வேறு திரைப்படப் பாடல்கள் கலந்த 'கலாட்டா கதம்பம்' என்ற மிக அற்புதமான நடன நிகழ்ச்சியுடன் குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் முடிவுற்றன.
இடைவேளைக்குப் பின், ஆண்டுவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக திரு. மு. மணிவண்ணன் இயக்கி, பாரதி நாடக மன்றத்தினர் வழங்கி 'அக்கினிக் குஞ்சு' என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வரலாற்று நாடகம் நடைபெற்றது. நறுக்கென்ற வசனத்துடனும், நயமிகு இசையுடனும் பாரதியாரின் முற்போக்குச் சீர்திருத்த சிந்தனைகளையும், அவரது தேசப்பற்றையும், கவித்திறமையையும் படம் பிடித்துக் காட்டியது அந்த நாடகம்.
பலகுரல் மன்னன் சூப்பர் சுதாகர் மற்றும் திருமதி. நளாயினி குணநாயகம் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்த ஆண்டுவிழா, பள்ளியின் தலைவி திருமதி. வெற்றிச் செல்வி ராஜமாணிக்கம் அவர்கள் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆர்வலர்களுக்குச் சான்றிதழ்களும் பதக்கங்களும், மற்றும் பாரதி நாடக மன்றத்தினருக்கு அன்பளிப்பும் வழங்கிய பின் இனிதே முடிந்தது.
நடிகை, நடிகையர் அல்லது சிறப்பு விருந்தினர் என்று ஒரு புகழ்பெற்றவர் பங்குகொள்ளாத ஒரு வினாவில் திரளாகக் கலந்துகொண்டு சுமார் நான்கு மணிநேரம் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த அனைவரின் ஆர்வமும், தமிழ்மொழி, பண்பாடு இவற்றைத் தன் பிள்ளைகளைப் போலவே ஊரார் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்கும் பெற்றோர் - ஆசிரியர்களின் ஈடுபாடும், சிறுவர், சிறுமிகளின் உற்சாகமும், பார்க்கும்போது அமெரிக்க மண்ணிலும் தமிழ் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.
கந்தசாமி பழனிசாமி லோகநாதன். வெ. |