முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள், கடந்த மே மாதம் 17ஆம் தேதி, போஸ்ட் ஓக் ஹோட்டல் டபுள்ட்ரீயில், ஹ¥ஸ்டன் வாழ் இந்தியச் சமூக மக்களைச் சந்தித்து ''உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார வல்லரசாம் இந்தியாவுடன் கூட்டு'' என்ற தலைப்பில் உரையாற்றினார். டெக்சாஸ் ஆசியா சொசைட்டி, டெக்சாஸ், ஹூஸ்டன் பெருநகரின் இந்தோ-அமெரிக்கன் சேம்பர் ஆ·ப் காமர்ஸ் மற்றும் ஹ¥ஸ்டனில் உள்ள இந்தியத் துணைத்தூதரகம் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். திரு. சிதம்பரம் அவர்கள் தம் அமெரிக்கப் பயணத்தில் கடந்த மாதம் ஆற்றிய பல உரைகளில் இதுவும் ஒன்று.
வாஷிங்டன் டி.சியின் AIMS இந்தியா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த பத்துநாள் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில், திரு. சிதம்பரம் ஒன்பது நகரங்களில் இந்திய அமெரிக்கச் சமூகக் கூட்டங்களில் உரையாற்றினார். வாஷிங்டன் பெருநகர்ப்பகுதியில் வாழும் ஊக்கமும், நோக்கமும், முனைப்பும் கொண்ட சிலர் மேம்பட்ட இந்திய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கிய தன்னார்வ அமைப்புதான் AIMS இந்தியா அறக்கட்டளை. உலகெங்கும் இதே கண்ணோட்டத்துடன் உள்ள தனிநபர்களையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இந்தியாவில் சமூகப் பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவர விழைகிறது இந்த அமைப்பு. சனிக்கிழமையன்று ஹ¥ஸ்டனில் தொடங்கப்பட்ட AIMS இந்தியா அறக்கட்டளையின் கிளை பற்றி www.aimsindia.net என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம். மேலும் தகவல் பெற விரும்புபவர்கள் info@aimsindia.net என்ற மினனஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.
ஹூஸ்டன் இந்திய சமூகத்தின் தூண் போன்று கருதப்படும் திரு. சாம் கண்ணப்பன் அவர்கள், கூட்டத்துக்குத் திரு. சிதம்பரம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். திரு. சிதம்பரம் அவர்கள் கடந்த பன்னிரெண்டு ஆண்டு கால இந்தியப் பொருளாதார மாற்றங்கள் குறித்தும், ஒரு பொருளாதார வல்லரசாக முன்னேறுவதற்கு இந்தியா மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார். இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியம் என்று வலியுறுத்திய அவர், அமெரிக்காவின் பொருளாதார நிலையில் பின்னடைவு ஏற்பட்டால் வளரும் நாடுகள் தாம் முதலில் பாதிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
வரும் இருபது ஆண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரம் வறுமை நிலையைக் கடந்து வளர வேண்டுமெனில் ஒவ்வோராண்டும் தொடர்ந்து 8% பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டுமென்று சிதம்பரம் தன் பேச்சில் குறிப்பிட்டார். 1997ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சி விகிதங்கள் 4% க்கும் 6.5%க்கும் இடையே ஏறியிறங்கிக் கொண்டேயிருக்கிறது. எட்டு சதவீதப் பொருளாதார வளர்ச்சி அடைவதற்குச் சரி செய்யப்பட வேண்டிய மூன்று முக்கிய காரணிகளையும் சிதம்பரம் குறிப்பிட்டார். அவை :-
1. பொதுத்துறை நிறுவனங்களின் ஏமாற்றம் தரும் வளர்ச்சி 2. நிதிப்பற்றாக்குறை 3. முதலீட்டுக் குறைவு
தனியார் மயமாக்க வேண்டிய அல்லது போட்டியை ஊக்குவிக்க வேண்டிய பல தொழில்களைப் பொதுத்துறை இன்னும் தன் கைக்குள் மடக்கி வைத்திருக்கிறது என்று திரு. சிதம்பரம் கூறினார். ஆனால், விமானம், ரெயில், துறைமுகங்க்ள் அடங்கிய போக்குவரத்துத் துறையிலும், எ·கு ஆலைகளிலும் அரசின் முதலீட்டைக் குறைப்பதற்கு இன்னும் கடும் எதிர்ப்பு இருக்கிறது, என்கிறார் சிதம்பரம்.
பொதுத்துறையின் பல தொழில்கள் மோசமாக நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் அரசும் பொதுத்துறையும் இணைந்து செயல்படும் துறைகள் விரயம் செய்பனவாக உள்ளன. இந்தியக் குடும்பங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 22.5% சேமிக்கின்றன. ஆனால், தனியார் துறை 4% சேமிக்கிறது. பொதுத்துறையும் அரசும் இணைந்து GDPயில் 2.5% இழக்கின்றன.
நிதிப் பற்றாக்குறைப் பிரச்சனைக்கும் பொதுத்துறையைக் காரணம் செல்ல முடியும். அரசு, பொதுத்துறையில் தன் ஈடுபாடுகளைக் குறைப்பதன் மூலம் மட்டுமே செலவுகளைக் குறைக்க முடியும். அரசு தன் கடமைகளைச் செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் வரி வருமானம் முழுவதும் அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே போய்விடுகிறது. இந்த மாநிலங்கள் தங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் உள்ளன.
இந்தியாவில் முதலீட்டு விகிதம் 23% ஆக உள்ளது. அதே நேரம் சீனாவில் முதலீட்டு விகிதம் 35% ஆக உள்ளது. இந்தியா தன் முதலீட்டை அதிகரிக்க வேண்டுமென்றால் அது தன் உள்நாட்டுச் சேகரிப்பைக் கூட்ட வேண்டும் அல்லது வெளிநாட்டு நேரடி முதலீட்டைத் திறந்து விட வேண்டும். ஏற்கனவே இந்தியக் குடும்பங்கள் GDPயில் 22.5% சேமிப்பதால் இந்திய உள்நாட்டு சேமிப்பைக் கூட்டும் வாய்ப்பு குறைவு. எனவே, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைத் தான் கூட்ட வேண்டி இருக்கிறது. இந்தியாவின் அடிக்கட்டுமானக் குறைபாடுகள் ஏராளம். எனவே எவ்வளவு அதிகமான முதலீடுகள் கிடைத்தாலும், அவற்றை ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையைத் தொடர வேண்டும் என்று திரு. சிதம்பரம் வலியுறுத்தினார். முதலீடுகளுக்கு அதிக ஆதாயம் அளிப்பதில் சிறந்த நாடு இந்தியா தான். எரிசக்தித் துறையில் (energy sector) இந்தியாவுக்கு நீண்டகால முதலீடுகள் தேவைப்படுகின்றன. அடுத்த 15 ஆண்டுகளில், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை 10,000 மெகாவாட் மின்சக்தி அதிகரிப்பு இந்தியாவுக்குத் தேவை. வணிகத்தையும் முதலீட்டையும் உயர்த்துவதே அரசியல் தலைவர்களின் முக்கியப் பணி என்று வலியுறுத்தினார்.
பொருளாதாரம் மட்டுமல்லாமல் இந்தியாவை ஆட்டியெடுக்கும் பிற பிரச்சனைகளையும் பற்றிப் பேசி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார் சிதம்பரம். இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றப் பாதையில் இந்தப் பிரச்சனைகளும் தடைக்கற்களாக இருப்பவை தான்.
சிதம்பரம் அவர்கள் தன் பேச்சின் முடிவில் இந்தியாவின் உள்ளேயும் வெளியேயும் அனுகூலமான முதலீட்டு நிலை கூடியிருப்பதால் இந்தியப் பொருளாதாரம் மேலும் மேலும் கட்டாயம் வலுவடையும் என்று துணிந்து கூறினார். ஏற்கனவே உலக அளவில் நான்காவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா மிக விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் திறமையும் கொண்டிருக்கிறது என்றார் அவர். இந்தியாவில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளின் வளர்ச்சிகளுக்கும் இந்திய மனித வளங்கள் துணை போகின்றன என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்க வேண்டியது அவசியம். வர்த்தகம், முதலீடு மற்றும் கருத்துப் பரிமாற்றம் போன்றவை இந்த இரு நாடுகளுக்கிடையேயான உறவைப் பலப்படுத்த உதவும், என்று கூறினார்.
இந்தப் பேச்சைத் தொடர்ந்து பார்வையாளர்களின் பல்வேறு வினாக்களுக்குத் தெள்ளத் தெளிவாக விடையளித்தார். ஒரு கேள்விக்கு விடையளிக்கும்போது ''வெளிநாட்டில் வாழும் இந்தியர்களே, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்!'' என்று கேட்டுக் கொண்டார். 'இன்போசிஸ்' நிறுவனத்தை உதாரணமாகக் காட்டி, இந்தியாவிற்குத் திரும்பிய நான்கு திறமைமிக்க பொறியாளர்கள் இந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படும் இநத நிறுவனத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பதைப் பற்றி விளக்கமாக கூறினார்.
இந்தியாவில் குண்டும் குழியுமான முதலீட்டுப் பாதைகளில் பயணம் குலுக்கலாக இருந்தாலும் அந்த வழியில் செல்வது வெளிநாட்டு இந்தியர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் தூண்டும் என்றார். ஹ¥ஸ்டன் தமிழ் சமூகத்தின் சார்பில் சனிக்கிழமையன்று மதியம் டெக்சாஸில் உள்ள பேர்லோண்ட் மீனாடசி அம்மன் கோயிலிலும் சிதம்பரம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
விஜய் ஆனந்த் |