அக்கினிக் குஞ்சு - மகாகவி பாரதி பற்றிய வரலாற்று நாடகம்
கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று, ஸான் ஓஸேவிலுள்ள C.E.T. கலையரங்கில், பாரதியாரின் வாழ்க்கையைத் தழுவிய வரலாற்று நாடகமான 'அக்கினிக் குஞ்சு' நாடகத்தைப் பாரதி நாடக மன்றம் வழங்கியது. இந்த நாடகம் முதன் முறையாகக் கடந்த ஜனவரியில் தமிழ்மன்றத்தினர் நடத்திய பாரதி விழாவின் போத மேடையேற்றப்பட்டது. சில மாதங்களுக்குள்ளேயே இரண்டாவது முறையாக இதே நாடகத்தைக் கண்டுகளிக்கும் அரிய வாய்ப்பினை கலி·போர்னியா தமிழ்க் கழகம் (California Tamil Academy), சான்·ப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. கலி·போர்னியா தமிழ்க் கழகத் தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக இந்த நாடகம் இடம்பெற்றது.

பாரதி வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளையும், திருப்பு முனைகளையும் பளிச்சென வெளிச்சமிடுகிறது. இந்த நாடகம். பாதி புதிரானவன்; சாதிச் சிந்தனை, பெண்ணடிமை போன்ற மூடப் பழக்கங்களைச் சுட்டெரிக்கும் கதிரானவன்; முடை நாற்றம் வீசுகின்ற பழமைக்காடு முழுவதையும் நொடியிலே எரித்து, அங்கே புதிய பாரதம் அமைக்கத் துடிக்க அவன் ஓர் அக்கினிக் குஞ்சு. அந்த அக்கினிக் குஞ்சின் தீக்கொழுந்துகளை ஒவ்வொன்றாக நம் சிந்தனையில் வீசுகிறது இந்த நாடகம். பாரதியெனும அக்கினிக் குஞ்சுக்குத் திரியேற்றி, நெய்யூற்றி அதைச் சுடர்விட்டு எழச் செய்த நிவேதிதா, 'சுதேச மித்திரன்' ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர், கொள்கை மாறினும் குறிக்கோள் ஒன்றென பாரதியின் தேசபக்திக் கவிதைகளை நாடு முழுவதும் பரப்பிய கிருஷ்ணசாமி ஐயர் போன்ற பல பாத்திரங்களும் நம் கண்முன் உலா வருகின்றனர்.

அக்கினிக் குஞ்ச நாடகத்தினை எழுதி இயக்கியவர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான 'தென்றல்' பத்திரிகையில் இணையாசிரியரும், 2002-ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவருமான திரு. மணி மு. மணிவண்ணன் அவர்கள். சென்ற ஆண்டு பாரதி நாடக மன்றம் வெற்றிகரமாக நடத்திய 'பாஞ்சாலி சபதம்' நாடகத்தை எழுதி இயக்கிய இவர், இந்த ஆண்டு பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், வரலாற்றுச் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 'அக்கினிக் குஞ்சு' நாடகத்தை இரத்தினச் சுருக்கமான காட்சிக் கோர்வைகளாக, நறுக்கென்ற வசனங்களுடன் திறம்பட அமைத்துள்ளார்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, முறுக்கிய மீசை, செருக்கான தோற்றம் என்று பாரதியின் விடுதலைக் கனவு, வேகம், தன்னம்பிக்கை, சுதந்திர தாகம் இவற்றைச் சிறப்பாகக் காட்டினார் பாரதியாக நடித்த ஸ்ரீராமன் சபேசன். நாடக உலகிற்கு இவர் இப்போது தான் அறிமுகமாகிறார் என்பதை நம்பவே முடியவில்லை. அவ்வளவு அருமையான நடிப்பு. பாரதியின் மனைவி செல்லம்மாவாக வசந்தி விஸ்வநாதன், 'சுதேசமித்திரன்' சுப்பிரமணிய ஐயராக M.S. கிருஷ்ணன், கிருஷ்ணசாமி ஐயராக கிருஷ்ணமுர்த்தி ராமகிருஷ்ணன், மண்டயம் திருமலாச்சாரி / கிட்டாவையராக பாலாஜி சீனிவாசன், மண்டயம் சீனிவாச்சாரியாக சூப்பர் சுதாகர் என்று அக்கினிக் குஞ்சு நாடகத்தில் நடித்த அனைவருமே தேர்ந்த நடிப்பினால் நம்மை பாரதி வாழ்ந்த காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டனர்.

கனகலிடங்கத்துக்குப் பூணூல். புதுமைப்பெண், ஜாதிபிரஷ்டம் போன்ற காட்சிகள் பாரதியின், காலத்தைக் கடந்த கண்ணோட்டத்தைச் சித்தரிக்கின்றன. பாரதியின் இந்தச் சுதந்திர தாகம்...' போன்ற எழுச்சிப் பாடல்களுக்கு இனிய இசையமைத்துப் பின்னணி பாடிய திரு. இராகவன் மணியன் இசைக்குழுவினர் இந்த நாடகத்துக்கு மேலும் உயிரூட்டினர்.

காலம், மதம், சாதி, சம்பிரதாயம் என்ற கூண்டுக்குள் சிக்காமல், எல்லைகளின்றிப் பறந்து அனல் கக்கிய அக்கினிக் குஞ்சு பாரதியை ஒரு படத்துக்குள்ளோ நாடகத்துக்குள்ளோ அடைப்பது எளிதல்ல. எனினும், அந்தக் கவிக்குயிலின் வேட்கைகளையும், தாகத்தையும், அதன் கூடப் பறந்த பறவைக் கூட்டத்தையும் அண்மையில் வெளிவந்த 'பாரதி' என்ற திரைப்படத்தை விடவும் அருமையாகக் காட்டி அரங்கம் நிறைந்த அனைவர் பாராட்டையும் பெற்றதுடன், அவர்கள் மனதில் பாரதியின் எண்ண ஓட்டம் பற்றிய ஒரு சின்ன தீப்பொறியையாவது இந்த அக்கினிக் குஞ்சு நாடகம் மூட்டியிருக்கும் என்பது திண்ணம்.

கந்தசாமி பழனிசாமி

© TamilOnline.com