மே மாதம் சென்னையிலிருந்து வளைகுடாப் பகுதிக்கு வருகை தந்த திருமதி. இராஜலக்ஷ்மி ஐயர் அவர்கள் பாரதிகலாலயாவில் வீணையிசை வழங்கினார்கள். திருமதி. இராஜலக்ஷ்மி ஐயர் அவர்கள் ஒரு இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் தாயார் திருமதி. லலிதா வெங்கட்ராமன் அவர்கள் பல நாடுகளிலும் வாய்ப்பாட்டுடன் கூடிய இசை நிகழ்ச்சிகள் வழங்கியிருக்கிறார்கள். திருமதி. இராஜலக்ஷ்மி அவர்கள் தாயாரிடம் வீணையிசை பயின்றதுடன், அவருடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளுமூ வழங்கியிருக்கிறார்கள். மும்பாயைச் சேர்ந்த திருமதி. டி. ஆர். பாலாமணி அவர்களிடம் வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
திருமதி. இராஜலக்ஷ்மி ஐயர் அவர்கள், சென்ற முறை வந்த பொழுது, பாரதி கலாலயாவின் 'தபஸ்யா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்த முறை ஒரு மணி நேரம் ஒரு முழுமையான இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள். ஆபோகி இராக வர்ணத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.
தீக்ஷ¢தரின் ''மஹா கணபதிம்....'', பாரதியாரின் ''ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்....'', தியாகராஜரின் ''கால ஹரண மேல ரா...'', ''வந்தனமு ரகுநந்தனா...'', ''மானச சஞ்சரரே.....'' ஆகிய பாடல்கள் வழங்கப்பட்டன. மாமி இங்கு வரும் சமயங்களில் அவரிடம் வீணைப் பயிற்சியை நான் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்ததுடன், இந்த நிகழ்ச்சியிலும் அவர்களுடன் சேர்ந்து வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. தியாயகராஜரின் விஜயநாகரி இராகத்தில், ''வர நாரதா......'' என்கிற கீர்த்தனையை மாமி இராக, தானத்துடன் வழங்கி மகிழ்வித்தார்கள். காஞ்சி காமகோடி பீடம், சந்த்ர சேகர சரஸ்வதி அவர்களின் ''மைத்ரீம் பஜதா.....'' என்ற உலக அமைதிக்கான வழிபாட்டுப் பாடலுடன் கச்சேரி இனிதே நிறைவு பெற்றது.
வீணை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, வர்ணம் மாணவர்களுடன் சேர்ந்து மிருதங்க ஆசிரியர் இரவீந்திர பாரதி அவர்களும், அவரது மாணவர்களும் தாளவாத்திய கச்சேரி நிகழ்த்தினார்கள். அதன் பிறகு பரத நாட்டிய மாணவிகள் நாட்டிய நிகழ்ச்சி வழங்கினார்கள். செல்வி. சவிதாவும், செல்வி. லாவண்யாவும் துவக்கத்தில் புஷ்பாஞ்சாலியும், முடிவில் தில்லானாவும் மிகவும் திறம்பட வழங்கினார்கள். செல்வி. சித்ரா, செல்வி. ஆரபி, செல்வி. ஸ்ம்ரிதி, செல்வி. ராஷ்மி, செல்வி. ஷைலா, செல்வி. ஸ்நேகா ஆகியோர் குறத்தி நடனம் வழங்கி மகிழ்வித்தார்கள். ஐந்து வயது சிறு குழந்தைகள், ''சலங்கை கட்டி ஓடி ஓடி வாராயோ'' என்ற வழிபாட்டுப் பாடலுக்கு நடனம் செய்தார்கள். பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் மே மாத நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
ஜுன் மாத நிகழ்ச்சியில் திருமதி. மைதிலி ராஜப்பன் அவர்கள், வயலின் இசை வழங்கினார்கள். மைதிலி ராஜப்பன் அவர்கள் பயின்ற இசைப் பள்ளியாகிய ''ஸ்ரீ குருகுஹ கான வித்யாலயாவின்'' அறுபதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ''தீக்ஷ¢தர் கீதாஞ்சலி'' வழங்கினார்கள். குரு இயற்றிய இரண்டு பாடல்களையும் அவர் வழங்கினார்.
அனுராதா சுரேஷ் அவர்களும் மாணவ, மாணவிகள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ''சரணு சித்தி விநாயகா'' என்ற புரந்தரதாசர் கிருதி, ''நாத தனுமணிசம்'' என்ற சித்தரஞ்சனி ராக தியாகராஜ கீர்த்தனம் , ''நாரயணதே நமோ, நமோ'', ''ப்ரும்மம் ஒகடே'', ''விஜயீ பவ'' போன்ற அன்னாமாச்சாரியார் நாம சங்கீர்த்தனங்களும் பாடினார்கள். திருமதி. மைதிலி ராஜப்பனின் குரு அவர்களுக்கு மாணவ மாணவிகள் மங்கள் ஆரத்தி செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.
பாகீரத சேஷப்பன். |