FeTNA- ''தமிழர் விழா 2003'' - நியூசெர்சியில்! சூலை 4,5, 6 2003
தணியாத தமிழ்த் தாகத்தைத் தணிக்க, கோடையிலே கொஞ்சு தமிழோடு இளைப்பாற, இணையற்ற வகையிலே இவ்வாண்டு தமிழ்ச்சங்கப் பேரவையின் 2003 தமிழர் விழா அமைய சிரத்தையுடன் செயலாற்றி வருகின்றனர் தமிழ்ச்சங்கப் பேரவையின் 16ஆவது ஆண்டுவிழா பொறுப்பாளர்கள்! இப்படி ஒரு வாய்ப்பு அமையவே காத்திருந்தோம். ''வீசும் இந்தக் காற்றை எப்படித் தூற்றிக் கொள்ளாது விட்டுவிடுவோம்'' என்று மும்முரம் சூழ சுழன்று வருகின்றனர் நியூ செர்சித் தமிழர்கள்! அதாவது தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் சுழற்றி வருகின்றார்! 16வது ஆண்டு விழா கொண்டாடும் தமிழ்ச்சங்கப் பேரவையை அறியாதவர் சிலர் அமெரிக்க மண்ணில் இருக்கலாம். அவர்களும் ஆனந்த உள்ளத்தோடு ஆண்டு விழாக்களில் பங்கு கொள்ள வேண்டும் வகை செய்தல் வேண்டும் என்பதே 2003 தமிழர் விழாவிற்கு முன்னர் கடைசியாக அமையக் கூடிய இந்த அழைப்பின் நோக்கம்.

விழாக் குழுவைத் தலைமைத் தாங்கும், திரு. சிவராமன் குறிப்பிடுவது ''சுத்தமான நெய்யில் செய்த அல்வா போன்று, தமிழ்த் தேன் கலந்து அமையும் இந்த விழா, இது நாள் வரை நடந்த விழாக்கள் யாவற்றையும் மிஞ்சிய இனிப்பாகும்'' என்கிறார். சென்ற ஆண்டு சிகாகோவில் வெற்றியுடன் விழா அமைத்த விழாத்தலைவர் கூறிடுகின்றார், ''தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்கெல்லாம் இனிது'' என்பது சார்ந்து எம் வழி நின்று பேரவையை வழி நடத்துபவர் செய்பெருமையெல்லாம் நமக்குப் பேரின்பம்'' என்கிறார். ''இனிதினிது! இனி நடப்பதெல்லாம் இனிது!

உயர உயரப் பறப்போப்போம், தமிழர் பெருமை தரணி பார்த்திட விழா நடத்துவோம்'', என்றே உடனுழைக்கின்றார்கள் வெற்றி விழாக்கள் பல கண்ட பேரவையின் முன்னாள் தலைவர்கள்! ''நீங்கள் கூற வேண்டியதைக் கூறுங்கள். கருத்தோடு, கணமும் கழியுமுன்னரே அக்கருத்தைச் செயலாக்கி வைக்கின்றோம்'' என்கின்றனர் விழாக்குழு உறுப்பினர்கள்.

நீண்டதொரு பயணத்தை நிறைவுடனே செய்து தமிழ்ச் சங்கப் பேரவை 16 ஆண்டுகளைக் கழித்த விதமே பெரும் சரித்திரம் - இந்த மண்ணுக்கு ''விடுதலை நாடென்ற'' பெருமிதம் சேர்த்த ''பிலடெல்பியா''வில் ஒரு கை எண்ணிக்கைக்கு சற்றே மிஞ்சியதான தமிழ்ச் சங்கங்களை உள்ளடக்கி ''கூட்டுத் தமிழ்ச்சங்க''மென உருவவெடுத்த அமைப்பு '90களில் தொடர்ந்து அடைந்த வளர்ச்சியில் ''அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை'' என்ற பெயரும் பெற்றது. இலக்கியத்தை இனிதாக்கி நமக்குத் தந்த தாய் நாட்டுத் தமிழ் வல்லுநர்கள் ஆண்டுதோறும் இங்கு வைத்த வித்துக்கள், இம்மண் வளத்தால், அடர்ந்து படரும் 'ஆல்' எனவும் பரவி தமிழ்ச் சங்கங்கள் என்ற விழுது ஆயின. இலக்கியத்தோடு இனிய தமிழ்க்கலைகள் பலவும் '90களில் வெற்றிவிழா பல கண்டு 2000களில் இரட்டித்த புத்துணர்வோடு வெற்றிகளைத் தொடர்ந்தது. உலகத் தமிழர்க்கு ''இடர்பான வாழ்வு'' என்பதை உணர்ந்து உறுதிக்கரம் நீட்டி உதவியது. '90களில் ''இனநலம் எல்லாப் புகழும் தரும்'' உணரப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்டது. பேரவையும் அறக்கட்டளை செயற்பாடுகளை உட்கொண்ட அமைப்பாயினும் உடன் சேர்ந்த தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பின் செயல்திட்டம் முன்வைத்து, தன் அறச் செயல்களை அமெரிக்க மண் அளவில் கட்டுப்படுத்திக் கொண்டது. வறியோருக்கு, வீடற்றோருக்குத் தமிழர் விழா நாட்களில் உணவு, 911 என்பதில் எண்ம் பதித்து, தன் உறுப்புச் சங்கங்களோடு இணைந்து கரம் நீட்டி உதவியது. 'தமிழ் இல்லையெனில் தமிழன் இல்லை; மொழிதழைக்க '91ல் அமெரிக்க மண்ணில் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை ஒன்று பெர்கிலியில் அமைத்திட வழிவகுத்து தமிழர் மனம் மலரவைத்தது. செம்மொழியென உலக அரங்கில் அன்னை மொழி அமைந்திட செயற்திட்டமொன்றைத் தேர்ந்தெடுத்து செயல்பட்டது எனினும், தாய்மண்ணின் அரவணைப்புமின்றி ஆதரவுமின்றி உலக அளவில் இந்திய நாட்டளவிலும் செயலாக்கும் வழியின்றி ஆனாலும் தொடர்கின்றது தன் முயற்சிகளை. விரைவில் காய்த்து, கனிந்து விடும் இம்முயற்சி என்ற எண்ணத்தில் கானமுயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் இனிதாம் தொடர்வோம். ''ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே ஒல்லோக்கல் செல்லும் வாய் நோக்கிச் சொல்'' - வினையது விளையாடும் வரை! ''செம்மொழி'' தமிழ் என்றாகும் மட்டும்!

அடுத்து தமிழ்காக்கும் நல்லறிஞர்க்கு ஆண்டு தோறும் மாட்சிமைப் பரிசொன்று அமைத்து நற்றமிழர் தான் மேற்கொள்ளும் செயற்பாடுகளக்கு ''ஓராயிரம் வெற்றி'' அன்பளிப்பென அளித்துப் பெருமை கொண்டது அழகுத் தமிழை அமெரிக்க ஆங்கில மொழிப்படுத்தி அகண்ட உலகமெல்லாம், பல மொழியாளும், பெருமதிப்போடு உளமறிய நுகரச் செய்த திரு. இராமானுஜம் என்ற துவங்கி தமிழ்மொழிக்கு ஓர் அமைப்பு என தன் உள்ளம் மகிழ்ந்திட்ட ''திரு. ஆர்ட்'' தொல்தமிழ் இலக்கணம் விதிமுறை விளக்க நூல் கண்ட ''திருமதி. இராஜம், ''தமிழர்க்குத் தஞ்சையில் பல்கலைக்கழகம் அமைத்த ''சுப்பிரமணியனாருக்கு எனத் தொடர்ந்து தமிழ் இசைக்கு தாரணியில் இடம் தேடித் தந்த பெரியவர் வி.ப.கா. சுந்தரம் என்று தமிழ்காப்போர் நற்பணி மதித்து வருகின்றது.

உலக அரங்கில் தமிழினம் அல்லலுற்ற போது அரவணைத்து நின்றது. எதிர்நோக்கியுள்ள காலத்து - இம்மண் வளர்ந்து வரும் இனம் தமிழ்ச்சமுதாயம் இனிமை மொழி கற்றறிய காலமெல்லாம் காத்து நிற்க தமிழ்க்கல்வி நிலையம் நடத்தி வரும் தமிழ்ச்சங்கங்கள், செயல்போற்றி, இணைந்து செயல்படும் பேரவை இனிவரும் நாட்களில்! இவ்வாண்டு தொடஙகிவிட்டது பேரவையின் ''தமிழ் முகாம்'' தலைநகரில் இரு திங்கள் (சூன் 23 - சூலை 19) காலம். தமிழ்முகாம் சேர்ந்து தமிழ் பரப்பிட இருக்கும் 22 மாணவமணிகளுக்கும் ஈன்றவர்கட்கும் எம்நன்றி கூறி நிற்கின்றது. இனிவரும் ஆண்டுகளில் ''இம்முகாம்'' மாநிலம் தோறும் மலர்ந்து நிற்கும் தமிழ்ச்சங்கங்கள் துணையுடனே!

கல்வியென்றே நின்றிடாது, களிப்பாட்டங்கள் கருத்தாழம், கொண்ட யாவும் தமிழ்க்கலைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தாகும் வண்ணம் விழா அமையும். சிலம்பும், இராச இராச சோழனும் என்று நடத்திய சிகாகோ தொடர்ந்து கூத்துக் கலையும், தப்பு, தவில், நாதம், பம்பையுடன் அளவு சேர்ந்த தப்பாட்டம் எனத் தமிழ்க்கலைகள் கண்டு நீங்கள் மகிழ தஞ்சை வீரசோழ தப்பாட்ட வினைஞர்கள் 2003 தமிழர் விழா அமைந்துள்ளது. தமிழ்க் கலையோடு கருத்தாழம் கொண்ட உரைகள் பல! சொல்லாழம், சொற்றொடரில் பரிமளிக்கும் திரு. பாப்பையாவின் பட்டிமன்றத்தில்! கவிஞரவர் சூசை இன்னாசியின் கவியரங்கம்! தான் கற்றது தமிழ் பெற்றது பெருமை என கிழக்கு நாடுகளில் ''சிங்கை'' வானொலித் தமிழமுதம் திருமதி. மீனாட்சி சபாபதி! நகைச்சுவை நம் நற்றமிழ் இலக்கியமே என மகிழ்விக்க உள்வர் திரு. ஞானசம்பந்தம், ''தமிழ் இசையே'' நன்னிலத்து முன்னோடி என்பது அறிவிக்க வரும் திரு. முருகன். இணையத்தில் தமிழ்க் கல்வி பரிமளிக்க பாங்குடன் ஏற்பாடு செய்திட்ட செயல்வீரர் திரு. வா. செ. குழந்தைசாமி! தமிழர் இதயம் தொட்டு நிற்கும் திரைப்படத்துறை வல்லோர்! மின்னலென பளிச்சிட சிநேகா, மாதவன்! இசையெனில் மெல்லிசை திரையிசை என்பதும் மகிழ்வதும் நாம் என்றால் மகிழ வைப்பவர்கள் மகாதேவன், மகாலெட்சுமியுடன் அக்னி இசைக் குழுவினர்.

இளையோர் போற்றுபோர் இனம் காப்போம் எம் தமிழ் இளையோர் போற்றி அமைத்துத் தர இருக்கும் நிகழ்ச்சி பல!

பல்சுவை கண்டோம் நற்சுவை தொடர்ந்திட தமிழ்சங்கப் பேரவை போற்றுபோம் என வாழ்த்திடுவீர் 2003 - தமிதுர் விழாவை. வந்திடுவீர் திரண்டு!

மேலும் விவரங்களுக்குwww.fetna.org

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

© TamilOnline.com