ஜூலை 2003: வாசகர் கடிதம்
தமிழ்நாட்டுக் கோவில்களின் வரலாறு, சிறுகதைகள், அமெரிக்க இந்தியர்களின் கலாசாரம், கர்நாடக இசை, நடனம், சமையல் குறிப்புகள், குழந்தைகளுக்கான பாடல்கள், படக்கதைகள், விடுகதைகள் எல்லாமே மிகச் சிறப்பாகவும் ரொம்ப பயனுள்ளவையாகவும் உள்ன. மொத்தத்தில் 'தென்றலடிக்குது. என்னை மயக்குது இந்தப் பூமியிலே' என்று தென்றலை வாழ்த்தி விட்டு தென்றல் மேன்மெலும் வளர வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்.

ஜெயகல்யாணி மாரியப்பன், கலி·போர்னியா

*****


சில மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்த வந்த எங்களுக்குத் தென்றல் இதழ்கள் ஒரு இன்ப அதிர்ச்சி. ஆன்மீகம் முதல் அரசியல் வரை பல சுவையான, பயனுள்ள தெளிவான கட்டுரைகள், சாதனை தமிழர் செம்மல்கள் சந்திரசேகர் முதல் சோமசேகர் வரை பற்றித் தெரிந்து பெருமிதம் கொள்கிறோம். ஆனால் தென்றலுடன் துர்வாடையும் வீசுவது வேதனை அளிக்கிறது. குறிப்பாக அரசியல் பக்கம்.

கீதா பென்னட் இசை பற்றிப் பல சுவைமிக்க செய்திகளில் கவம் செய்தால் வாசகர்கள் பயன் பெறுவார்கள்.

தென்றல் பல்லாண்டு குற்றாலச் சாரல் போன்று வீச எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

என். ஆர். ரங்கநாதன்.

*****


சென்ற இதழில் முனைவர் அலர்மேல்ரிஷி அவர்கள் எழுதிய ஆலங்குடி என்னும் வழிபாட்டுத் தொடர் கட்டுரையை வாசித்தேன். அதில் அவர் காளமேகம் போன்ற உயர்ந்த புலவர்களின் சிலேடைப்பாக்களை மேற்கோள்காட்டி விளக்கியது மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பா மிகவும் எளிய ஆனால் மிக நம் பொருந்திய பா.

இக்காலத்தில் திருத்தலங்களைப் பற்றி எழுதுவோர் பழைய சான்றோர்களின் சொற்களை மேற்கொள்ளாமல் தமக்குத் தோன்றியபடி எழுதுவது பெருகிவிட்டது; ஆனால் அவ்வாறல்லாமல் அலர்மேல்ரிஷி அவர்கள் இவ்வாறு எழுதியிருப்பது சாலவும் பாராட்டத்தக்கது. இதையெல்லாம் எத்தனை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று முந்திக் கொண்டு வடிகட்டி வாசகர்களை அவமதிக்கும் பத்திரிகையான இல்லாமல் அதனை ஊக்கிய தென்றலுக்கும் பாராட்டுகள். ஆலம் என்றால் நஞ்சு என்று அந்தக் கட்டுரையில் விளக்கியிருக்கலாம்.

பெ. சந்திரசேரன், அட்லாண்டா.

*****


மே மாத தென்றல் படித்தேன். ஒரு பக்கம் விந்தனின் சிறுகதையால் சந்தோஷம். மேலும் பல பழைய எழுத்தாளர்களின் கதைகள் வந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை. எதிர்பார்ப்பு. இன்னொரு பக்கம் காஞ்சனாவின் சாதனைகளில் மலைப்பு. இதன் நடுவே தென்றலின் ''தன்னிலை விளக்க''த்தால் ஒரு மென்சிரிப்பு.

தென்றலின் தமிழ் நடை பற்றி, என்னுடைய இரண்டு தாழ்மையான கருத்து. ஒருவருக்கு ''தன்னிலை விளக்கம்'' எப்போது தேவைப்படுகிறது? ஒன்று, தான் செய்வது ஒரு அதீதமான (extreme) அல்லது பொதுவான வழக்கத்துக்கு மாறான (unusual) செயல் என்று தோன்றும் போது தேவைப்படலாம். இல்லை, தன் செயலால் (நல்ல/கெட்ட விதமாகாவோ) பாதிக்கப்படுகிறவர்கள் தன்னை/தன் செயலை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விழையும் போதும் ''தன்னிலை விளக்கம்'' வேண்டிவரலாம்.

வாசகர்கள் தென்றல் தமிழ் நடையின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் வாசகர் எண்ணிக்கை குறையாமல் இருக்கும் என்று எதிர்பார்ப்பது சரிதான். ஆனால் அப்படி விளக்கம் கொடுக்கும்படியான ஒரு அதீதமான ஒரு தமிழ் நடை உடனே, ஒட்டுமொத்தமாகத் தேவையா? ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவரை ஒரே நாளில் திருத்தமுடியுமா? தமிழகத்தில் உள்ள தமிழர்களே ஒரேயடியாக ஆங்கிலம் கலந்து பேசுவதென்பது ஒரு நாகரீகமாகவே மாறியுள்ள இன்னாட்களில் எழுத்தாளர்களும் ஏன் 'அதீத'மான கருத்துக்களையும் வழிமுறைகளையும் உபயோகிக்க வேண்டும்? ஒருபக்கம், ஒரு சாராரின் 'விடாப்பிடியாக எல்லா வார்த்தைகளையும் தமிழ்ப்படுத்துவேன்' என்ற பிடிவாதம். காப்பியை (coffee) 'குழம்பி' என்று குழப்புவதும் கம்ப்யூட்டரை (computer) கணினி என்று கலக்குவதும் இவர்கள் வழி. இன்னொரு பக்கம் மறுசாராரின் 'எதை எழுதினாலும் தங்களீஷ் உபயோகிக்காமல் எழுதுவதில்லை' என்ற நாகரீக 'வளர்ச்சி'. 'கார் மேனு·பேக்ஸரிங்' (car manufacturing), 'மெடிக்கல் காலேஜும் பிரைவேட்', 'கவர்மென்ட் டாக்ஸ்' (government tax) போன்ற சொற்றொடர்களைத் தாராளமாக ''யூஸ்'' செய்வார்கள் இவர்கள்.

ஏன் ஒரு 'மித'மான அணுகுமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக [:) சரி. சரி. கோபிக்க வேண்டாம், 'சிறிது சிறிதாக' என்று மாற்றிக் கொள்ளுங்கள்] தமிழர்களின் இந்த ஆங்கிலப் பாதிப்பை மாற்ற முயலக்கூடாது? தமிழர்களால், தமிழ் மக்கள் வாழும் இடத்தில் கண்டுபிடிக்கப்படாத computer போன்ற கருவிகளின் பெயர்களையும், நவீன முன்னேற்றங்களின் விளைவு வார்த்தைகளான (technology-based) 'internet', 'browser', 'webpage' போன்ற வார்த்தைகளையும் தமிழ்ப்படுத்தித்தான் ஆக வேண்டுமா? 'போதனை செய்வது எங்கள் எண்ணமில்லை' என்கிறீர்கள். ஆனால் உடனே 'புதுச் சொற்களின் பட்டியலைத் தருகிறோம்' என்றும் சொல்கிறீர்கள். இது முரண்பாடாகத் தோன்றவில்லையா? சொற்பட்டியல் (glossary) உபயோகித்துப் படிக்க வேண்டிய ஒரு நிலை உங்கள் வாசகர்களுக்குத் தேவையா? இது தர்க்கத்துக்குரிய ஒரு விஷயமாக இருக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்தத் தமிழ் நடையின் உங்களது அணுகுமுறை காரணமாக ஒருவேளை உங்கள் 'readership'. அதாவது, வாசகரெண்ணிக்கை பாதிக்கப்பட்டு நீங்கள் வேறு ஒரு 'அதீத' நிலைக்குத் (அதை சொல்ல மனம் ஒப்பவில்லை) தள்ளப்பட்டால் அதனால் மிகவும் வருத்தப்படும் பல ஆயிரம் தென்றல் வாசகர்களில் நானும் ஒருவனாக இருப்பேன்.

சுப்ரமண்ய மூர்த்தி, இர்வைன், கலி·போர்னியா.

*****


மலிவான தமிழிலும், ஆழமில்லாத உள்ளடக்கத்துடனும் எத்தனையோ பத்திரிகைகள் தமிழில் வெளிவருகின்றன. ஆனால், தேமதுரத்தமிழில் ஒரு இதழைப் படிக்கும் போது ஏற்படும் சுகானுபவம், இதமான தென்றலால் வருடப்படுவது போன்றதாகும். அத்தகைய இனிய உணர்வுகளைத் தருவதற்குத் தென்றல் போன்ற ஒரு சில பத்திரிகைகளே இன்று உள்ளன. அத்தகைய அரியதொரு இதழை, ஒரு மாணிக்கத்தை, எளிமைப்படுத்துகிறோம் என்ற போர்வையில், தமிழ் இதழியலை மாசுபடுத்தும் எண்ணற்ற குப்பைகளுடன் சேர்த்து விட வேண்டாம் என தென்றல் ஆசிரியர் குழுவினரை வேண்டிக் கொள்கிறேன். எளிமைப்படுத்துவதுற்கும் ஒரு எல்லை உண்டு. பாரதி, தனது பாடல்களை எளிமைப்படுத்தினாலும், அதன் தரத்தையோ, நடையையோ, எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. நமது மொழி அறிவை விரிவாக்கினால் மட்டுமே, அவரது கவிதைகளைப் புரிந்து கொள்ள இயலும். அதுபோல் தென்றலும் நமது இலக்கிய, மொழி அறிவினை வளர்க்கின்றது, சிறப்பான தமிழ் மொழியை அதன் தரம் கெடாமல் வாசகர்களுக்கு இலக்கியக் கொடையாக அள்ளித் தருகின்றது. அதை அனைத்து வாசகர்களும் புரிந்து கொண்டால், தென்றலின் தரத்தோடு நமது வாசிப்புத்தரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும். தென்றலைப் படிக்கும் வாசகர்களின் எல்லையை விரிவாக்கும் முயற்சியை தென்றல் செவ்வனே செய்யட்டும். அந்தப் பொதிகை மலைத் தென்றல் போல், இவ்வட அமெரிக்கத் தென்றலும், மாசுபடாதத் தென்றலாக என்றும் தவழ வாழ்த்துகிறேன்.

புதிய கலைச்சொற்களை அடைப்புக்குறிக்குள் வழங்குவது நல்லதொரு முயற்சி, தொடரட்டும். எழுத்தாளர் அறிமுகப்பக்கம், சிறப்பான, அதே நேரம் இளைய தலைமுறைகளுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத பல தமிழ் நாவலாசிரியர்களை அறிமுகப்படுத்துகிறது. மிகவும் பயனுள்ள ஒரு பக்கம். வழிபாட்டுத்தலங்கள் குறித்தான Dr. அலர்மேலு ரிஷி அவர்களின் திருத்தலக் கட்டுரை பக்கம், மற்றும் ஒரு சிறப்பான பக்கம். தமிழ்நாட்டில், திருத்தல பயணங்கள் மேற்கொள்வோருக்கும், தொன்மையான ஆலயங்களைக் காண விழைவோருக்கும், அவரது கட்டுரைகள், மிக பயனுள்ள கையேடாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ச. திருமலை, யூனியன் சிட்டி, கலி·போர்னியா.

*****

© TamilOnline.com