முழக்கம்.காம்
'பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு' என்று மார்தட்டிக் கொண்டு இணையத்தில் வலம் வருகிறது. (www.muzhakkam.com) முழக்கம்.காம். டொராண்டோ, கனடாவைத் தளமாகக் கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த இணையத்தளம் வலையேற்றம் செய்யப்படுகிறது.

1996-இல் முல்லைத்தீவு இராணுவ முகாமின் மீது புலிகள் நடத்திய 'ஓயாத அலைகள்- I' தாக்குதலைப் பற்றியும், அதற்குப் பிறகான செய்திகளைப் பற்றியும் உடனுக்குடன் தெரிந்து கொள்வதில் ஒட்டாவாவிலுள்ள கார்ல்டன் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் நடுநிலைத் தன்மையோடு அங்கே நடக்கும் விஷயங்களை இவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவான சரியான தமிழ் பத்திரிகை எதுவுமே இல்லை. இந்தக் குறையைப் போக்குவதற்காகத் தான் முழக்கம் வார பத்திரிகையும், முழக்கம் வார பத்திரிகையும், முழக்கம் இணைய தளமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒட்டாவாவில் தொடங்கப்பட்டிருந்தாலும், தொடங்கிய ஆறு மாதங்களுக்காகவே டொராண்டோவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. 1996லேயே முழக்கம் இணைய இதழ் உருவாக்கப்பட்டிருந்தாலும், 1998க்குப் பிறகுதான் சரியாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக செய்திகள் வலையேற்றம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

தமிழ் சமூகத்துக்குத் தேவையான செய்திகளையும், தகவல்களையும் அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் வகையில் தாங்கி வரும்படி இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சுடச்சுட செய்திகளைக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், கனடாவில் தமிழர்களுக்கு இருக்கும் வாய்ப்பு வசதிகள் பற்றியும், தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான வழிகளைப் பற்றியும், நிறைய தகவல்களைக் கொடுத்து அவர்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் முக்கியமான பணியை இந்த முழக்கம் இணையதளம் தொடர்ந்து செய்துவருகிறது. இதைத் தவிர தமழுணர்ச்சியைப் பரப்புவதையும், தமிழர்களிடத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுவதையும் தலையாய கடமையாகக் கொண்டும் இந்த இணையதளம் செயல்படுகிறது.

முழக்கம் என்ற பெயரில் வெளியாகும் வாரப் பத்திரிகை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் வெளியாகிறது. இணையதளம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதிய செய்திகளோடு உலா வருகிறது. முழகம் இணையதளத்தில், தமிழ் ஈழச் செய்திகள், தமிழ்நாட்டுச் செய்திகள், ஸ்ரீலங்கா செய்திகள், இந்தியச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள் போன்றவை இடம்பிடித்திருக்கின்றன. இவை தவிர முக்கியப் பிரமுகர்களின் நேர்காணலும், முக்கிய நிகழ்வுகள் குறித்த சிறப்புப் பார்வையும் இந்த இணையதளத்தின் கூடுதல் சிறப்பம்சங்கள்.

இலக்கியத்திற்கும் இந்த தளத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தரமான கருத்துள்ள கவிதைகளையும், சிறுகதைகளையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

தற்சமயம் கவியரசர் கண்ணதாசன் குறித்த ஒரு தொடரும், ஒரு தொடர்கதையும், டாக்டர் ராமதாஸ் எழுதிய அக்கினி அம்புகள் புத்தகம் தொடராகவும், இன்னும் ஒரு சில தொடர்களும் இந்த தளத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த தளத்தின் மிக முக்கியமான அம்சம் என்று சொல்வதென்றால் புகலிட நிகழ்வுகளைச் சொல்லலாம். அதாவது புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் இடத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பும், செய்தியும் இந்தப் பக்கத்தில் வெளியாகிறது. நாடு விட்டு நாடு சென்று குடியேறியிருக்கும் தமிழர்களுக்குக் குறிப்பாக இந்தப் பக்கத்தில் வெளியாகிறது. நாடுவிட்டு நாடு சென்று குடியேறியிருகூகும் தமிழர்களுக்குக் குறிப்பாக இந்தப் பகுதி ஒரு பாலமாகச் செயல்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

அடுத்ததாக, புலம்பெயர்ந்த சூழலில் தமிழர்கள் தகுந்த வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரும் என்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் மணமகன்-மணமகள் தேவை குறித்த தகவல்களுக்காக மணமேடை என்ற பகுதியை கொண்டிருக்கிறது இந்த தளம்.

இளைஞர்களுக்கான தனிப்பகுதி இந்த தளத்தில் உள்ளது. தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும், பொருளாதார நிர்வாகம் குறித்த கட்டுரைகளையும், இன்னும் இதுமாதிரியான உளவளத்துணை கட்டுரைகளையும் இந்த தளத்தில் படிக்க முடிகிறது.

கனடாவில் உள்ளவர்கள், தங்கள் உறவினர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த எண்ணினால் (obituary) இந்த தளத்தில் இதற்காக இயங்கும் இலவச சேவையைப் பயன்படுத்தலாம்.

தங்கள் குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்ட விரும்புவர்களும், தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள விரும்புபவர்களும் இந்த தளத்தில் 'தூய தமிழ்ப்பெயர்கள்' என்ற பகுதிக்குச் சென்று நீங்கள் விரும்பும் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதைப் போலவே வேற்று மொழிக் கலப்பில்லாமல் தமிழ் என்று நினைத்துப் பயன்படுத்தும் சொல்லுக்கு உண்மையான பொருள் அறிய விரும்பினாலோ இந்த தளத்தில் 'தூய தமிழ்ச் சொற்கள்' என்ற பகுதிக்குச் சென்று பார்த்துப் பயன்பெறலாம்.

முழக்கம் வார இதழில் வெளியாகும் எல்லா பக்கங்களும் இணைய தளத்தில் இடம் பெற செய்யப்படவில்லை என்றாலும், இந்த தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை செய்திகளும், தகவல்களும், கட்டுரைகளும், தமிழ்.... தமிழுணர்ச்சி... தமிழின் விழிப்புணர்ச்சி என்பதை மட்டுமே மையப்படுத்துவதாக உள்ளன. உண்மையிலேயே தமிழர்களின் உணர்ச்சிகளை முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது இந்த தளம்.

© TamilOnline.com