ஜன்னல்
மகாதேவன் கண் விழித்தபோது கடிகாரம் இரண்டு மணி காட்டியது. ''ஏது இந்த கடிகாரம்?'' - அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எங்கே இருக்கிறோம்?' கடைசியாக பாத்ரூமில் கால் கழுவப் போனது நினைவுக்கு வந்தது. அப்புறம் மருமகள் குரல் ''ஏன் தான் இந்த கிழம் இப்படி உயிரை எடுக்குதோ, ஒரு எடத்துல உக்காந்திருக்கக் கூடாதா.....'' - ஏதோ கனவில் ஒலிப்பது போல் இருந்தது. அதற்கு மேல் ஒன்றும் ஞாபகம் இல்லை. 'என்ன ஆகிவிட்டது எனக்கு, ஆஸ்பத்திரி மாதிரி இருக்குதே, உடம்பு ஏதாவது சரியில்லையா' - நெஞ்சு 'திக்'கென்றது.

திடமாக ஓடியாடி ஓரளவுக்கு வீட்டு வேலைகளைச் செய்தபோதே மருமகளிடம் வசவும், நக்கலான பேச்சும் கேட்டு நொந்திருந்த அவருக்கு அடுத்த இரண்டு நாட்களில் தனக்கு பலம் பக்கம் வை கால் முழுக்க விளங்காமல் போய்விட்டடதும், குறைந்தது இன்னும் இரண்டு மாதம் இந்த நகராட்சி ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரியவர, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இடிந்து விட்டார் மகாதேவன்.

இந்த நிலைமையில் பக்கத்துக் கட்டில் தாத்தா தான் வாழ்க்கையின் ஒரே பிடிப்பு என்று ஆகிவிட்டது அவருக்கு. ''ஹலோ நான் தான் தாணு. சார் எப்படியிருக்கீங்க?'' - பாதி கற்களை இழந்திருநூத பொக்கை வாய்ச்சிரிப்பு. உடம்பு குச்சியாக இருந்தாலும் 'கணீர்' என்று குரல். ''ஆறு மாசமா இந்த கட்டில்ல தான் கிடக்கேன். ஏதோ என் அதிஷ்டம் பக்கத்துல ஜன்னல் இருக்குது, வேடிக்கை பாத்தே பொழுதை ஓட்டறேன்'' என்றவரிடம் தன் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார் மகாதேவன். போகப் போக தாணு தாத்தா ஜன்னல் வழியாகப் பார்த்து இவருக்கு வெளியுலக நடப்புகளை விவரமாகச் சொல்லுவது ஓரளவுக்கு பொழுதைக் கழிக்க உதவியது.

''மகாதேவன், இந்த சின்னஞ்சிறுசுங்க ஸ்கூலுக்குப் போறாங்க பாருங்க....'' என்று ஆரம்பித்து நாட்டின் கல்வி அமைப்பைப் பற்றி பேசுவார். அப்புறம் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் சாப்பாடு எடுத்துச் செல்வபவர்கள், காய்கறிக்காரிகள் இளைப்பாறுவது, சாயந்திரம் சூரியன் இறங்கும் நேரம் குருவிகள் எல்லாம் சேர்ந்து பறந்து மரத்தில் ஒளிவது என்று சிறுசிறு விவரங்களையும் விஸ்தாரமாக விவரிப்பார். உடம்பும் மனமும் துவண்டுவிட்ட நிலையில், ஏ.ஐ.ஆர். காலை நிகழ்ச்சியில் யதார்த்தமாக அன்றாட பிரச்சினைகளை ஒரு குரல் அலசுமே, அது மாதிரி தாணு தாத்தாவின் குரல் ஒரு அமைதியைத் தந்தது.

ஒரு நாள் உற்சாகத்துடன் ''மகாதேவன், உங்ககிட்டே சொல்லவேயில்ல பாருங்க, நாலு நாளா பாக்கிறேன் தினமும் சரியா நாலு மணிக்கு ஒரு பொண்ணு அந்த மரத்தடி மேடைல வந்து ஒக்காருது. அரை மணி கழிச்சு, அவ தமபி போல இருக்கு, ஒரு பையன் வந்து கூட்டிட்டுப் போறான். ஆனா இன்னிக்கு பாருங்க...'' என்று நிறுத்தினார் தாத்தா.

''தாத்தா, மொண மொணன்னு என்ன பேசிகிட்டே இருக்கற, ஜெயலலிதா கட்சிலே பேச்சாளர் தேவைப்படுதாம் போய் சேந்துக்கிறியா?''- கிண்டலடித்தவாறே அவரை நகர்த்தி துணி மாற்றினாள் நர்ஸ். அவள் போனவுடன் ''உம், இன்னிக்கு என்ன ஆச்சு சொல்லுங்க'' என்றார் மகாதேவன்.

''இன்னிக்கு அந்த பொண்ணு வந்து உட்கார்ந்ததும் ஒரு ஆள் வந்தான். தெரிஞ்சவன் போலிருக்கு. ரொம் நேரம் ரெண்டு பேரும் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டிருந்தாங்க. அவ கண்ணையும் சிரிப்பையும் பாத்தா கூடிய சீக்கிரம் அவனை லவ் பண்ணிடுவா போலிருக்கு'' என்றார். சுவாரசியமாக தினம் தினம் தாணு தாத்தா அந்த ஜோடியின் காதலை விவரிக்கவும் மகாதேவனுக்கு எப்படியாவது ஒரு நாள் அந்த ஜன்னல் வழியாக இந்தக் காட்சியைப் பார்க்க மாட்டாமோ என்ற ஆவல் பெருகியது.

ஒரு நாள் தாத்தாவுக்கு குரல் கம்மியது. ''மகாதேவன், அவங்களுக்குள்ள என்ன சண்டையோ தெரியலையே. அந்தப் பொண்ணு 'பொல' 'பொல'ன்னு அழுதுகிட்டே ஓடுது. அந்த ஆள் என்ன செய்யறதுன்னு தெரியாம அப்படியே சிலை மாதிரி நிக்கறானே'' என்றார். மகாதேவனுக்கு ராத்திரி தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தார். எப்போ தூங்கினாரோ தெரியாது. காலையில் கண் விழித்தபோது பக்கத்தில் நிறைய ஆட்கள் கூட்டம். ''தாணு தாத்தா செத்துட்டாரு'' என்றான் வார்டு பாய்.

இரண்டு நாட்கள் பொழுதை எப்படி ஒட்டினாரோ தெரியாது. மூன்றாவது நாள் தனிமை தாங்க முடியாமல் நச்சரிக்க, நர்ஸ¤ம், வார்டுபாயும் அவர் தொல்லை பொறுக்காது மகாதேவனை தாத்தாவின் கட்டிலுக்கு மாற்றினார்கள். அவர்கள் போனவுடன் ஆவலுடன் அவசர அவசரமாக ஜன்னலைத் திறந்தார் மகாதேவன்.

அங்கே தாத்தா விவரித்த பூங்காவோ காட்சிகளோ இல்லை. கட்டிடத்தை ஒட்டி புழுதி பறக்கும் தெருவும், தெருவின் அந்தப்பக்கம் பொதுக்கழிப்பறையும் தான் இருந்தன. அங்கிருந்து வந்த துர்நாற்றம் சகிக்க முடியாமல் 'டக்' கென்று ஜன்னலைச் சாத்திவிட்டு தாணு தாத்தாவை நினைத்தபடி விட்டத்தை வெறிக்கலானார் மகாதேவன்.

சுப்ரமண்யமூர்த்தி

© TamilOnline.com