கீதாபென்னெட் பக்கம்
போன மாத பக்கத்தைப் படிக்காதவர்களுக்காக..... பல வருடங்களுக்கு முன் நியூயார்க்கிலிருந்து முப்பை வழியாகச் சென்னை செல்லும் போது விமானம் பல மணிநேரம் தாமதமாக வந்ததால் இந்தியன் ஏர்லைன்சின் சென்னை விமானத்தைத் தவற விட்டோம்.

அந்தச் சமயத்தில் மும்பையில் எதற்கோ பந்த் நடந்து கொண்டிருந்ததால் என் ஆறு வயது மகன் ஆனந்தோடு வெளியே போவது உசிதம் அல்ல என்று என்னை அங்கேயே தங்கச் சொல்லி கை காட்டிய இடம் ஏர்போர்ட் சிறைச்சாலை. கட்டாந்தரையாக இருந்ததால் சூட்கேசிலிருந்து ஒரு மிருதுவான பட்டுப்புடவையை கீழே போட்டு அவனை படுக்க வைத்தால் அவன் உடம்பு அனலாக கொதிக்கிறது.

ஒவ்வொரு முறையும் 'வெயிட்டிங் லிஸ்டில்' பெயரைக் கொடுத்து விட்டு சென்னை கவுண்டரிலேயே மணிக்கணக்காக நிற்பேன். ஒவ்வொரு முறையும் 'சாரி மேடம்.. எங்களால் ஒன்றும் பண்ண முடியவில்லை. இன்று போய் நாளை வா.... அடுத்த சென்னை விமானத்துக்கு முயற்சி பண்ணு. இது டிசம்பர் மாதம். விடுமுறை நேரம். பிரதமர் இந்திரா காந்தி வந்தால் கூட இப்போது சென்னை விமானத்தில் இடம் கிடையாது'. என்பதே பதிலாகக் கிடைத்தது. அந்த வயதில் ஆனந்த் சூப்பர் மேன் உடையை எப்போதும் அணிந்து கொள்வான். என் கண்ணில் நீரைப் பார்த்து விட்டு 'நான் உன்னை என் முதுகில் ஏற்றிக் கொண்டு பறந்து போய்ப் பாட்டி தாத்தாவிடம் கொண்டுவிடுகிறேன் மாம்.......'' என்று வேறு சொல்லி என் கண்ணீரை அதிகப்படுத்துவான். இப்படியே இரண்டு நாட்கள் ஓடி விட்டன.

இந்த இரண்டு நாட்களும் போலீஸ்காரர் ஒருவர் ரொட்டியும் டீயும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். மூன்றாவது நாள் வேறு ஒருவர் ஷிப்ட் மாறி வந்தார். அவருடைய பெயர் சர்தார் படேல்!. 'இந்தப் பெண்ணும் குழந்தையும் சரியாகச் சாப்பிட்டு நாட்கள் ஆகியிருக்கும் போல.... தென்னிந்திய சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுகிறேன்......'' என்று ஒரு மப்டி போலீஸ் துணையுடன் எங்களை ஒரு உடுப்பி ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தார்.

இன்னும் இரண்டு நாட்கள் ஓடின. இன்னும் பம்பாய் விமான நிலையம் தான். சிறை தான் விடுதி. படேலுக்கு என்ன தோன்றிற்றோ, திடீரென்று அவர் முகம் பிரகாசமானது. 'இன்று இரவு சென்னை விமானம் கிளம்பும்போது ட்யூட்டி ஆபிஸர் வர்கீஸ் என்பவர். கீதாவிற்கு இடம் கிடைக்காவிட்டாலும் பென்னெட்டுக்கு கிடைக்கலாம்...', என்று சூசகமாகச் சொல்லி என்னை அனுப்பினார். வர்கீஸ் ஆபிஸில் அவரைச் சுற்றி நாலைந்து பேர். என் கதையை விலாவாரியாக ஆங்கிலத்தில் (இந்தி பேசத் தெரியாதே!) சொல்லி இடம் கேட்டேன். வர்கீஸ் அதற்குள் போனில் பேச என் அருகே அமர்ந்திருந்தவர் 'ம்..... பென்னெட்.... க்றிஸ்டியனா......? என்றார். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஆமாம் அல்லது இல்லை என்று தலையை ஆட்டவில்லை. ஜாதி, மதம் இதெல்லாம் பற்றி கேட்பது நாகரீகம் இல்லை என்று வழக்கமாக சத்தம் போடுபவள் ஏன் அந்த சமயத்தில் வாயை மூடிக் கொண்டு இருந்தேன்? ஆனால் என் மெளனம் விமானத்தில் ஒரு இருக்கையை வாங்கித் தந்து விட்டது.

இரண்டு மாதத்திற்கான தென்றல் பக்கங்களை நிரப்பி ஒரு கட்டுரையைத் தொடர்ந்து எழுத காரணம்? என் முன் அனுபவம் நம் எல்லோருக்குமே ஒரு பாடமாக இருக்கட்டுமே!

பயணம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து நாம் அடைய வேண்டிய நகரம் வரை ஒரே ஏர்லைன்ஸ் கம்பெனியாக இருப்பது நல்லது. எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் முதல் விமான நிலையத்திலேயே கஸ்டம்ஸ் நடக்கும் என்பதால் உள்ளூர் விமானம் பிடிக்க நிறைய நேரம் ஒதுக்குங்கள். இரண்டு நாட்களுக்கான குக்கீஸ், க்ராக்கர்ஸ் போன்றவையும், ஆஸ்பிரின், பான்ட் - எயிட்களும், மருந்து மாத்திரைகளும் கைப்பையில் தண்ணீர் பாட்டிலுடன் எதற்கும் இருக்கட்டும். ட்ரான்ஸிட்டாக தங்கும் நகரங்களில் உங்களுக்கு, அல்லது உங்கள் நண்பர்களுக்குத் தெரிந்த குடும்பத்தினரின் விலாசம் டெலிபோன் எண்கள் வைத்துக் கொண்டால் சமயத்தில் உதவும்.

சர்தார் படேல் ஷிப்ட் முடிந்த பின்னும் வீட்டிற்குப் போகாமல் என்னை வழியனுப்ப காத்திருந்தார். தனியாகப் பயணம் செய்யும் ஒரு இளம் (அப்போது) பெண்ணிற்கு அவர் கொடுத்த பாதுகாப்பை என்னால் மறக்க முடியுமா? அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியாமல், விமானம் ஏறுமுன் பணத்தை நீட்டிய போது இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் பதில் சொன்னார். ''என் சிஸ்டருக்கு இது போல ஒரு சங்கடம் நேர்ந்தால் நான் உதவ மாட்டேனா?''

மொழிகள் மாறினாலும், நாகரீகங்கள் அதிகரித்தாலும், அனுபவங்கள் வேறானாலும் படேல் மாதிரி நண்பரை என்றும் என்னால் மறக்க முடியாது.

பான் வாயாஜ்!!!!

கீதாபென்னெட்

© TamilOnline.com