கலி(·போர்னியா) காலம் (பாகம்-8)
முன் சுருக்கம்: 2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.

நாரதர், கலி·போர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலகம் மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.

அப்படிப்பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் கர்ம யோகம் பற்றி உரைத்து விட்டதாகக் கூறினார். பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி என்ன என்று நாரதர் கேட்டார். லக்ஷ்மி தேவியும், விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துகளை அவ்வப்போது உரைத்திருக் கிறார்கள். தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.

அவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணிபுரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப்பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது. அப்படியிருந்தாலும் தலைக்கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாகப் பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.

அருணிடம் பலர் கேட்கும் கேள்விகளுக்கு, அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

போனமுறை, சுந்தர் என்பவர் தான் ஆரம்பிக்கும் நிறுவனத்துக்கு மூலதனம் தேடுகையில் VC-கள் போடும் நிபந்தனைகள் மிகக் கடுமையாக இருப்பதால் இறுதியில் நிறுவனம் ஆரம்பிப்பவர்களுக்கு பலன் மிகச் சிறிதாகிவிடும் போலிருக்கிறது; அதனால் எதற்காக ஆரம்பித்து அல்லல்பட வேண்டும் என்று விரக்தியுடன் கேட்டதற்கு ஆரண் அளித்த பதிலின் முதற் பகுதியைப் பார்த்தோம். அதில் அவர் VC-கள் திரட்டிய பணம் நிறைய டாட் காம் உச்சத்தில் முதலீடு செய்யப்பட்டு விரயமாகி விட்டதால் திரட்டியப் பணத்தைத் திருப்பித் தரவே மீதியிருக்கும் பணத்தை மிகவும் பெருக்கும் நிர்ப்பந்தத்தால் VC-கள் கடுமையான நிபந்தனை விதிக்கிறார்கள்; மேலும், டாட்-காம் உச்சிக்கு சில வருடங்களுக்கு முன்னால் நிதி திரட்டுவது கடினமாகத்தான் இருந்தது என்று விளக்கினார். அதையும் யோசித்துப் பார்ப்பதாக ஒப்புக் கொண்ட சுந்தர், இப்படிப்பட்ட நிலவரத்தில் நிறுவனம் எதற்காக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அருண் மேற்கொண்டு அளித்த விளக்கத்தை இப்போது பார்ப்போம்.

*****


VC-கடுமையான நிபந்தனைகள் விதிப்பதின் காரணத்தை விவரித்து முடித்த அருண், தொடர்ந்து விளக்கினார். ''சுந்தர், உங்களுக்கே தெரியும் - ஒருவர் நிறுவனம் ஆரம்பிக்கறது, அது வளர்ந்து அதன் இறுதிப் பலனை அனுபவிக்கறத்துக்கு மட்டும் இல்லை....''

அவர் மேலும் பேசுவதற்குள் கூட்டத்தில், இருந்த சேகர் என்பவர் இடைமறித்து, '' என்ன, இறுதிப் பலனுக்காக இல்லையா? ரொம்ப ஆச்சர்யமாக இருக்கே?! அது இல்லைன்னா பேசாம ஒரு பெரிய கம்பெனில நிறைய சம்பளம் வாங்கிக் கிட்டு அக்கடான்னு இருக்கலாமே?! எனக்குத் தெரிஞ்சவங்க பல பேர் கம்பனி ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க ஆரம்பிச்சதுக்கு முக்கிய குறிக்கோளே அப்படி இறுதியில் கிடைக்கற பண பலன்'தான்னு எனக்குத் தோணுது!''.

அருண் முறுவலித்தார். ''பல பேர் பல காரணங்களுக்காகக் கம்பெனி ஆரம்பிக்கிறாங்க. எல்லாரையும் ஒரே குட்டையில ஊறின மட்டைன்னு சொல்லிட முடியாது. டாட்-காம் கொப்புளத்தில நிறைய பேர் ஏகப்பட்ட பணமும் பண்ணினதைப் பாத்துட்டு, ''ஆஹா, நாமும் அந்த மாதிரி பணம் புரட்டணுமேன்னு'' கம்பெனி ஆரம்பிக்கர ஜுரத்தில அவசரமா இறங்கிட்டவங்க நிறைய பேர் இருந்தாங்க. இன்னமும் இருக்காங்க. இல்லைன்னு சொல்லிட முடியாது. ஒத்துக்கறேன். ஆனா வேற காரணங்களும் இருக்கு'' என்றார்.

சேகர் சுவராஸ்யத்துட, ''அப்படியா, என்ன காரணங்கள், சொல்லுங்களேன்?'' என்று கேட்டார்.

அருண் தொடர்ந்தார். ''இப்ப இருக்கற சூழ்நிலையில், சில பேர் வேலை நீக்கமாகி வேறு வேலை தேடிக்கிட்டிருக்கறப்போ, நிறுவனம் ஆரமபிக்கறதுக்கும் ஒரு வாய்ப்புக் குடத்துப் பார்க்கலாமென்னு ஆரம்க்கறாங்க''. வேலை தேடறதையும் நிறுவனத்துக்கு நிதி தேடறதையும் ஒரே சமயத்துல செய்யறாங்க. அப்படி செய்யறப்போ ஏற்படுத்தப்படற தொழில் நுட்பத்தை யாராவது கொஞ்ச அளவு பணத்துக்கு வாங்கிக்கிட்டாலும் கிடைச்ச வரைக்கும் லாபந்தானேன்னும் நினைக்கறாங்க. அது ஒரு காரணம்....''

''உம்... சரிதான். நான் அந்த மாதிரி ஒண்ணிரண்டு பேர் பாத்திருக்கேன். அப்புறம்?''

''.....இன்னொரு விதம் பெரிய அளவுக்கு வளராவிட்டாலும் பரவாயில்லை. ஆனா லாபத்தோடு தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கக் கூடிய தன் சொந்த நிறுவனமா இருக்கட்டுமேன்னு நடத்தும் சிறிய சேவைத் தொழில் நிறுவனங்கள். வழக்கமா, தங்கள் தனித்திறமையை வைத்து project-களைப் பெற்று நடத்தக் கூடியவர்கள் அந்த மாதிரி நிறுவனங்களை ஆரம்பித்து நடத்துகிறார்கள். மற்றவர்கள் கீழ் வேலை பார்க்காமல் தானே தனக்கு முதலாளி என்பதிலேயே மிகுந்த பெருமையும் ஆனந்தமும் அடைகிறார்கள். மேலும் வேறு நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட இந்த மாதிரி தொழிலில் அதிக தொகை கிட்டக் கூடும். அதுவும் ஒரு காரணம்....''.

சேகர் ஆமோதித்தார், ''ஆமாம். நீங்க சொல்றது சரிதான். எனக்கு சேவைத் தொழில் செய்யற பல நிறுவனங்களோட அதிபர்களைத் தெரியும். நல்லாவே செஞ்சுகிட்டிருக்காங்க, பணமும் நிறையப் புழலுது. அது நல்ல யோசனையாத்தான் தெரியுது. அப்படியே செய்யலாமே? இன்னும் வேற காரணம் இருக்கா, என்ன?!''

அருண் சுந்தரைப் பார்த்து சைகை காட்டி புன்னகை செய்தார். ''இருக்கே! இதோ அல்லல்பட்டு விரக்தியையும் மீறி உழன்றுக் கிட்டிருக்காரே சுந்தர், அவரையே கேட்கலாமே! என்ன சுந்தர், நீங்க எதுக்காக நிறுவினீங்க ? இறுதிப் பலன் மட்டுமில்லாம ஏதோ உந்தும் காரணம் இருந்துச்சுன்னு எனக்குத் தோணுது. என்ன சொல்றீங்க''.

சுந்தரின் முகத்தில் ஒரு உற்சாக உளி பிறந்தது. ''நிச்சயமாக இருக்கு' நான் வேலை செஞ்சுகிட்டிருந்த நிறுவனத்துல எனக்கு வந்த ஒரு பிரமாதமான யோசனையை மையமா வச்சு ஒரு ப்ராஜக்ட் செஞ்சுகிட்டிருந்தேன். பணநெருக்கடி வந்தவுடனே அதை மூட்டை கட்டி பரண் மேல வச்சுட்டு வேற எதையோ செய்யச் சொல்லிட்டாங்க. நான் போய் என் நிறுவன மேலதிகாரிங்க கிட்ட எவ்வளவோ வாதாடினேன். இந்த ப்ராஜக்ட்ல வளர்க்கற தொழில்நுட்பம் நிறுவனத்துக்கு நிறைய பலன் தரக்கூடிய மிக மதிப்புள்ளதாக இருக்கும்னு. ஆனா அவங்க கேட்கலை. நிறுவனம் தன் மையக் குரவான விஷயங்களில் மட்டும் குறுநோக்கம் செலுத்த வேண்டியிருக்கு. இந்த தொழில் நுட்பம் அதுக்கு அப்பாற் பட்டதுன்னு விலக்கித் தள்ளிட்டாங்க....''

அருண் மேலும் தூண்டினார். '' ஆனா உங்களுக்கு அந்த முடிவுக்கு உடன்பாடில்லை. அதனால நீங்க தொடரணும்னு துடிச்சீங்க?''

சுந்தரின் குரலில் அவருடைய உத்வேகம் வெளிப்பட்டது. ''அப்படியே தான். உங்க நிறுவனத்துக்கு வேணா இது தேவையில்லாம இருக்கலாம். ஆனா நிச்சயமாக இது வர்த்தக ரீதியில வெற்றியடைக் கூடியது, நான் செஞ்சு காட்டறேன்னு வேலையைத் தூக்கியெறிஞ்சுட்டு அந்தத் தொழில் நுட்பத்துக்கு லைஸன்ஸ் வாங்கிக்கிட்டு வெளியில வந்துட்டேன். ராப்பகலா உழைச்சு அதுக்கு உயிரும் குடுத்துட்டேன். ரெண்டு வாடிக்கையாளங்க கூட பயன்படுத்திக்கிடிருக்காங்க! அதை இன்னும் உரம் போட்டு வளர்க்கறதுக்குத்தான் பணம் தேடிக்கிட்டிருக்கேன்!''

அருண் புன்னகை செய்தார். ''சேகர். கேட்டீங்களா? இதைத் தான் சொன்னேன். அவர் நிறுவனத்தை ஆரம்பிக்கறச்சே பண பலனுக்காக ஆரம்பிக்கலை. தன்னுடைய யோசனை ஒரு விற்பொருள் வர்த்தகத்துக்கு வந்து வெற்றியடையணுங்கற வெறியில தான் ஆரம்பிச்சார். அந்த வெற்றியுடைய ஒரு பக்க பலனா பணம் கிடைக்கும், சரிதான். ஆனா ஒரு உண்மையான Entrepreneur அதையே மட்டும் நினைக்கறது கிடையாது. தன் உழைப்பாலேயே ஒவ்வொரு கல்லா வச்சு ஒரு தாஜ்மஹாலைக் கட்டறா மாதிரி நிறுவனத்தைப் படிப்படியா வளர்க்கறப்ப அவங்களுக்குக் கிடைக்கற மனத்திருப்திக்காகதான் செய்வாங்க. அது ஒரு சிற்பி தன் கையாலேயே ஒரு அழகிய சிலையை வடித்து முடிக்கறது, இல்லைன்னா ஒரு ஓவியன் பணத்துக்காக இல்லாம, தன் கற்பனையை வெளிப்படுத்த ஒரு ஓவியத்தை வரைகிற மாதிரியான திருப்தி. ஆனா இதை என்னால வெறும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியலை. அவுங்கவங்களே செஞ்சு தாமே உணர்ந்தாத் தான் தெரியும்!''.

சுந்தர் வேகமாகத் தலையை மேலு கீழும் ஆட்டி ஆமோதித்தார். ''நல்லாவே சொல்லிட்டீங்க அருண். நான் அப்படித்தான் உணரறேன்!''.

சேகர் மேலும் வினாவினார். ''சரி ஒத்துக்கறேன். ஆனா பண பலனுக்காக மட்டும் யாரும் செய்யறதல்லங்கறீங்களா?''

அருண் சோகத்துடன் முறுவலித்தார். ''அப்படின்னு சொல்லிட முடியாது. மற்றவங்க வெற்றி அடைஞ்ச பண பலடனஞ்சதைப் பாத்துட்டு தாங்களும் அந்த மாதிரி குவிக்கலாமேங்கற ஆசைல பண பலனுக்காக மட்டும் சிலபேல் நிறுவனம் ஆரம்பிக்கறத்துக்கு அவசரமா குதிக்கறதுண்டு. ஆனா அது மட்டுந்தான் நோக்கம்னா கொஞ்ச நாளிலேயே அது எப்படிப்பட்ட இமாலய முயற்சின்னு அவங்களுகூகுப் புரியும். நிறுவனத்தை வளர்க்கறதுக்கு பலப் பலத் தடைகளைத் தாண்டணும். பழைய விக்கிரமாதித்தன் கதைகளில் வரும்... கதாநாயகன் ஏழு கடல், ஏழு மலை தாண்டித் தேடினான்னு.. அப்படித்தான்.''.

சுந்தர் சிரித்தார். ''நான் நிறைய நாள் அப்படித்தான் நினைச்சிருக்கேன். ஒரு மலையை ஏறி அப்பாடாங்கறத்துக்குள்ள, ஒரு கடலைத் தாண்ட வேண்டியிருக்கு!''.

அருண் தொடர்ந்தார். ''சுலபமா பணம் குவிச்சடலாம்னு குதிக்கறவங்க கூடிய சீக்கிரமே கஷ்டத்தை உணர்ந்துகிட்டு கபால்னு ஜகா வாங்கிடுவாங்க. உண்மையாவே ஒரு நிறுவனத்தை வளர்த்து உருவாக்கத் துடிக்கறவங்கதான் எவ்வளவு தடை வந்தாலும் தயங்காம உழைச்சு மேல மேல கொண்டு போறாங்க.''

சுந்தர் மேலும் தூண்டினார். ''அது என்னமோ சரிதான் அருண், ஆனா இப்ப நான் என் நிதி திரட்டற தடையை எப்படி சமாளிக்கறதுன்னு முழிச்சு கிட்டிருக்கேன். ஆனா அதுக்காக என் கம்பெனியை எப்படி வெத்திலைப் பாக்கு வச்சுத் தாம்பாளத்துல தூக்கி VC-கள் கிட்ட குடுத்துடறது? என்ன செய்யறது சொல்லுங்க?'' என்றார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com