பறவைக் கப்பல்
அதோ, அதோ பறவைக் கப்பல் ஆகா யத்தல் செல்லுது! அதிச யமாய் எல்லோ ரையும் அங்கே பார்க்கச் சொல்லுது.
வெள்ளைப் பறவை போலே அதுவும் மேலே நமக்குத் தோன்றுது. மேகத் திற்குள் புகுந்து புகுந்து வேடிக் கையும் காட்டுது.
மனிதர் தம்மைத் தூக்கிக் கொண்டு வானத் திலே பறக்குது. வயிற்றுக் குள்ளே பத்தி ரமாய் வைத்துக் கொண்டே செல்லுது.
காடு மேடு கடல்க ளெல்லாம் கடந்து கடந்து செல்லுது கண்ணை மூடித் திறப்ப தற்குள் காத தூரம் தாண்டுது!
வாயை மூடிப் போடும் சத்தம் வந்து காதைத் துளைக்குது. வால் இருந்தும் சேஷ்டை இல்லை; வழியைப் பார்த்துப் போகுது!
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. |