"புத்தம் வீடு" - ஓர் அறிமுகம்-ஹெப்சிபா ஜேசுதாசன்
இப்படியும் ஒரு புத்தகம் வந்ததா? - இதுதான் பெயரைக் கேட்டவுடன் மனதில் தெறிக்கும் கேள்வி. விட்டால் இவர் நம்மை ஆழ்ந்த இலக்கியத்திற்குக் கூட்டிச் சென்றுவிடுவார் என்று எண்ண வேண்டாம். அப்படித் தோன்றக்கூடிய பெயர்தான் இது என்று ஒத்துக்கொள்கிறேன். இரண்டாம் பதிப்பிற்கும் மூன்றாம் பதிப்பிற்கும் இடையில் 15 வருடங்கள். முதலக்கும் இரண்டாவதுக்கும் இடையில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் இப்படிப் பெரும் இடைவெளியில் வெளிவந்த புத்தகம் இது. எழுதியவர் திருமதி. ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்கள். இலக்கியப் பேராசியை. இவர் எழுதியது மிகவும் குறைவு. இதனுடன் சேர்த்து மொத்தம் நான்கு நாவல்கள்தான் இவரின் புனைவு படைப்புகள். மற்ற எழுத்தெல்லாம் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் தான். இந்த நாவல் வெளிவந்தபொழுது இலக்கிய வட்டாரத்தில் பெரும் மதிப்பைப் பெற்றது. பிறகு எல்லோருக்கும் மறந்துவிட்டது. அதைக் கொஞ்சம் தூசு தட்டலாம் என்றுதான் இந்த முயற்சி. இந்த நாவலை மட்டும் ஏன்? - என்பதற்கும் கூடுமான வரையில் பதிலளிக்க முயல்கிறேன்.

மிகவும் எளிமையான எழுத்து. ஆசிரியர் கையில் ஒரு ஒளி/ளலிப்பதிவு கருவியை எடுத்துக் கொள்கிறார். கூடவே மனதைப் படிக்கும் விசேஷக் கருவியும். இவர் கூட்டிச் செல்லும் இடம் பனைவிளைக் கிராமம். பெயரிலிருந்தே தெரிந்துவிடுகிறது பனை விளைந்த, விளைகின்ற, விளையப் போகும் கிராமம் என்று. எங்கு பார்த்தாலும் வெறும் பனைமரக்காடுகள் தான். அங்கு வாழும் சில குடும்பங்களுக்கே சொந்தமான காடுகள், சிலருக்கு இவை பரம்பரையாய வழிவந்த சொத்து. இன்னும் சிலருக்குப் பலகாலம் பனையேறிகளாய் இருந்து பின் சொந்தமான காடுகள். பனங்காட்டு எஜமான் குடும்பங்கள் தவிர இன்னும் பனையேறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் சில. முதலாளி - தொழிலாளி என்ற பிரிவினை தானாக சொத்துகளின் கையிருப்புப் படி உயர்ந்த தாழ்ந்த குலம் என்ற மாறுவேஷத்திற்குள் இங்கே ஒளிந்து கொண்டுவிடுகிறது. உடனே ஆசிரியர் பெரிய புரட்சியைப் பற்றிப் பேசப்போகிறார் என்றால் இல்லை. ஆசிரியர் பேசுவது புத்தம் வீட்டைப் பற்றி.

புத்தம் வீடு ஊரிலேயே பெரிய பழமையான வீடு. அதில் வாழும் கண்ணப்பச்சி குடும்பத்தின் சொத்து சில பனைமரக்காடுகளும் புத்தம் வீடும். கண்ணப்பச்சியின் குலப்பெருமை... அவரின் பேத்தி லிஸி என்ன செய்கிறாள்.... என்ன சோதனைக்குள்ளாகிறாள்.... என்பது தான் கதை. இப்படி அமெரிக்கப் படங்களின் கதைச்சுருக்கம் போல் சொல்லி ஒரு போலி ஆர்வத்தைத் தூண்டப்போவதில்லை.

லிஸி என்ற மனுஷி நம் கண்முன் சிறிய குழந்தையாய்த் தோன்றுகிறாள். கண்ணப்பச்சிக் கிழவனின் கைபிடித்து கிறிஸ்துவக் கோவிலுக்கு நடத்திச் செல்கிறாள். புத்தம் வீட்டின் 'அட்ச்சக்கூட்டில்' சுதந்திரமாக நடமாடுகிறாள். குடிகார அப்பன் இரவில் வரவில்லையென்றதும் பதைபதைக்கிறாள். துள்ளிக்கொண்டு பள்ளிக்கூடம் போவதிலும், 'சிவப்பான' தங்கை லில்லி என்று தன்னுடன் சேர்ந்து கொள்வாள் என்று எதிர்பார்ப்பதிலும், மிஷன் வீட்டு மேரியக்கா தந்த மைனாவிற்கு 'லிஸி-லில்லி' என்று கற்றுத் தருவதிலும், படிப்பு நன்றாக வராத அந்த பனையேறியின் மகனுக்குப் பரிதாபப்பட்டு தனக்கு படிப்பை வரவழைத்த அந்த மாயப் பொருளை தானம் செய்யும் வெகுளித்தனத்திலும் அவளது குழந்தைப் பருவம் நம் உதட்டில் ஒரு புன்னகையை வரவழைக்கிறது.

அதே லிஸி வயதிற்கு வந்தவுடன் 'இல்செறிப்பு' - (வீட்டுக்குள்ளேயே பெண்ணை முடக்கி வைத்தல்) என்பதற்கு ஆளாகி புத்தம் வீட்டையே உலகமாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். புத்தம் வீட்டிற்கு சம்பந்தமுடையவர்கள், பனையேற்றுக் காலத்தில் 'அக்கானி' எடுக்க வந்து போகும் பனையேறிக் குடும்பங்கள், விருந்தினர்கள் என்று அவளும் அந்த உலகத்தில் தன்னைப் பொருத்திக்கொண்டு தனக்கான ஆசைகளையும், ரசனைகளையும், சுருக்கிக் கொள்கிறாள். அதற்குளூ இருக்க தன்னைத் தயாரித்துக் கொள்கிறாள். அப்பன், சித்தப்பன் மற்றும் கண்ணப்பச்சி தவிர வேறு ஆண்கள் முன் வரக்கூடாது தான். கோவிலுக்குச் செல்வது கூட இனி 'ரண்டு பேரா'-ன பின் தான். செல்லமான கண்ணப்பச்சியே சொல்லிவிட்டார். அந்த இரண்டு பேராவது பற்றி குடிகார அப்பனுக்குக் கவலையில்லை. அப்படியே ஓர் ஏற்பாடு நடந்தாலும் அதில் லிஸியிடம் - ஒரு வார்த்தை - கேட்கவேண்டாம் .... சொல்வதற்குக் கூட யாருக்கும் சிந்தனை இல்லை.

புதிய பனையேறி அன்பையனின் மகன் தங்கராஜூ சட்டென்று அவள் வாழ்க்கைக்குள் புகுந்துவிடுகிறான் அவளையும் அறியாமல். சிறு வயதில் படிப்பு வராத அதே பனையேறி மகன். அவள் மனம் படும் பாடு, தங்கராஜூ யதார்த்தமாய் நடந்து கொள்ளும் விதம், விளையும் விபரீதங்கள், பிரச்சினைகள் என்று கதை பழக்கப்பட்ட பாதையில் இயல்பாய் பயணிக்கும் ஓடையாய்ப் பாய்கிறது. இதில் தளிராய் விழுந்து எதிர்படும் சிற்றலைகளில் எல்லாம் தாண்டி....... தன் வாழ்க்கையின் நோக்கை தான் நிர்ணயிக்க இயலாத பொழுதும் ஏதோ தன்னளவில் நம்பிக்கையுடனும் உண்மையுடனும் அவள் இருக்கப் பழகிக் கொள்கிறாள்.

இனி படிக்கப்போகும் உங்களுக்கு இந்த முன்னுரை போதும என்று தோன்றுகிறது. இந்த முன்னுரைக்கான தேவை கூட இல்லாத கதை என்பதை, அது தெளிவாய்ப் பாயும் விதத்திலிருந்து புரிந்து கொள்வீர்கள்.

நாகர்கோவில் வட்டார வழக்கில் எழுதப்பட்ட கதையிது. அதுவே கதைக்கு ஒரு யதார்த்தத்தைக் கொடுக்கிறது. செயற்கைத்தனம் துளியும் இல்லாத கதை. மனிதர்கள் அவரவர் இயல்பிலிருந்து சற்றும் பிசகாமல் வந்து போகிறார்கள். முன்பே சொன்னதுபோல் கதாசிரியர் ஒரு மெளனமான ஒலி/ஒளிப்பதிவுக்காரராய் மட்டும் நிறுத்திக் கொள்கிறார். காட்சிகளை வருணிக்கும்பொழுது, ஒரு மென்மையான மனதுடன் சொல்ல முயல்கிறார். இந்த மக்கள் மீதும் மிகுந்த ரசனையுள்ள ஓர் ஆசிரியர் என்றும் தோன்றுகிறது. இவர் மலையாளமும் அறிந்தவர். திருவனந்தரப்புரத்துக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்தவர். நடை மலையாள எழுத்துலகத்தின் தகழியை நினைவுப்படுத்துகிறது. இருந்தும் தமிழ் எழுத்துலகத்திற்கு மிகவும் வித்தியாசமான ஒரு நடைதான். தமிழகத்தில் இருந்து இயங்கி வரும் 'விளக்கு' அமைப்பு சமீபத்தில் இந்த நாவலுக்காக ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது வழங்கி கெளரவித்ததில் ஆச்சரியமில்லை.

கதையில் நினைவில் நிற்கும் சில விஷயங்கள் - லிஸி தற்கொலை வரை போய்த் திருமபும் மனநிலை.... அவளது சிறு வயது நாட்கள், குடும்பத்திற்குள் அப்பன் - மகன் உறவிலேயே ஒரு திறந்த பேச்சுவார்த்தை இல்லாமல் 'ஓதேசியார்' (உபதேசியார் - பாதிரியார்), வைத்தியர் என்று வேற்றாளைக் கூப்பிட வேண்டிய நெருக்கடிகள். என்னதான் தாழ்ந்திருந்தாலும், விரும்பும் பெண்ணை அடைவதற்கு தங்கராஜ் ஓதேசியார் வரை சென்று மன்றாடுவது... இவை எல்லாவற்றையும் விட கதையின் எளிமை - நாமே அதிசயிக்கும் வகையில் நிச்சயம் என்றைக்கும் தங்கும்.

புத்தம் வீடு
ஆசிரியர் : ஹெப்சிபா ஜேசுதாசன்
மருதா பதிப்பகம்
போன் : 91-44-2858 5426
மின்னஞ்சல் : marutha1999@rediffmail.com

மனுபாரதி

© TamilOnline.com