''முதியோர் இல்லம்'' தான் கடைசி வழி
அன்புள்ள சிநேகிதியே,

இது என் அம்மாவும், என் கணவரும் சம்பந்தப்பட்ட விரச்சினை. 16வருடங்களுகூகு முன்பு என் அப்பா இறந்த போது என் அம்மாவை என்னுடன் இருக்கு இங்கு அழைத்து வந்துவிட்டேன். ஐந்து வருடங்கள் தொந்தரவு ஏதும் இல்லை. அப்புறம் என் கணவர் 'என் அம்மா இருப்பதால் தனக்குத் தனிமையில்லை - சுதந்தரமில்லை' என்று எதற்கெடுத்தாலும் புகார் செய்ய ஆரம்பித்தார். ஒன்று 'அவர்' இல்லை 'என் அம்மா' என்று நான் முடிவெடுக்க வேண்டிய நிலைமை வந்தது. எப்படியோ மூன்று வருடம் கழித்து, 1995ல் அம்மாவை என் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். இப்போது அவள் பிள்ளைக்குக் கல்யாணம் ஆகப் போகிறது. வரும் மருமகள், மாமியார்-பாட்டி என்று எத்தனை பேரைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆகவே, நீயே வைத்துக் கொள்'', என்று அவள் சொல்லுகிறாள். என் சகோதரியின் மகனோ பாட்டியை உங்கள் மாமாக்கள் யாராவது பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே'' என்கிறான். அவர்களோ, பெற்ற பெண்களான நாங்கள் இருக்கும்போது அவர்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

என் அம்மாவின் பேச்சை எடுத்தாலே என் கணவர் எரிந்து விழுகிறார். என்னுடன் பேசுவதைத் தவிர்க்கிறார். இந்த நிலையில் என் கணவரின் மேல் கோபம் கோபமாக வருகிறது. என் குற்ற உணர்ச்சியும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. நான் என்ன செய்யட்டும்? தயவு செய்து ஒரு வழி சொல்லுங்கள்.

*****


அன்புள்ள.....

இந்தக் கடிதம் என்னை நிரம்பவும் யோசிக்க வைத்தது. காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பது ஒரு தாய். அந்தத் தாயின் ஒரு நிராதரவான நிலைமை. இது உங்களுடைய பிரச்சனை மட்டுமல்ல. உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான மகள்களும், மகன்களும் இதே போன்ற குற்ற உணர்வால் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். 'கொடிது கொடிது முதுமை கொடிது, அதனினும் கொடிது இயந்தர வாழ்க்கையில் நம்மைப் பெற்றவரின் நிலைமை' என்று தான் நினைக்க வைக்கிறது.

நீங்கள் உங்கள் தாயின் வயதையோ, உடல்நிலை, மனநிலை இவற்றைப் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. ஐந்து வருடம பொறுத்துக் கொண்ட உங்கள் கணவர் திடீரென்று எதிர்ப்பைக் காட்டிய காரணமும் (இதற்கு ஏதாவது பின்னணி இருந்தால்) தெரியவில்லை. உங்கள் சகோதரி மற்ற நெருங்கிய உறவினர்கள் எல்லாரும் இங்கேயே இருக்கிறார்களா? இல்லை இந்தியாவில் இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை.

இருந்தாலும் இது போன்ற பிரச்சனைகளைச் சந்தித்த அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன்.

உங்கள் சகோதரி தன்னுடைய பங்குக்கு எட்டு வருடங்கள் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் மாமாக்களில் ஒருவராவது இந்தியாவில் இருந்தால் நீங்கள் உங்கள் தாயைப் பராமரிக்கும் செலவை ஏற்றுக் கொண்டு, (இங்கிருந்தால் எவ்வளவு ஆகுமோ, அதை இந்திய பணத்தில் கொஞ்சம் கணிசமாக) அவர்களை வேண்டிக் கொள்ளலாம்.

கணவரிகன் மேல் கோபம் வருவது இயற்கையே. ''அவருடைய அம்மாவாக இருந்தால் இப்படி செய்திருப்பாரா?'' என்ற எண்ணங்கள் கண்டிப்பாகத் தோன்றும். அதனால் ஆத்திரப்பட்டு குடும்பக்கோப்பை சிதறிவிட்டு, உறவுகளை உதறிவிட்டு உங்களால் வர முடியாது. ஆகவே, உங்கள் அம்மாவின் பிரச்சனைக்கு வழியைக் காண உங்கள் கணவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்கள் அம்மாவைத் தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்வதற்கான நியாயங்களை (உங்களுக்கு அநியாயங்களாகத்தான் படும்) ஏற்றுக் கொண்டு, அவர் சொல்லும் வழிகளை அவருடனே ஆராய்ந்து அதனுடைய வி¨வுகளை உணர்ந்து ஒரு முடிவு எடுக்க முயற்சி செய்யுங்கள். அவரிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது என்று தெரிந்தாலும் இந்தப் பிரச்சனையை அவர் முன் நீங்கள் கண்டிப்பாக் கொண்டு வரவேண்டும். (கஷ்டமான காரியம் தான் புரிகிறது.)

ஒரு நேர்முகத் தேர்வுக்குப் (Interview) போவதுபோலவே உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். பக்கத்தில் குடிக்க தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் கோபத்தில் பதிலடி கொடுத்து வேதனையும் வெறுப்பும் அதிகமாகி காரியம் கெட்டு விடும் சாத்தியம் இருக்கிறது. அவருடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதலில் உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கோபம், அழுகை இரண்டும் வேண்டாம். வார்த்தைகள் வெடிக்கும் தருணத்தில் கொஞ்சம் தண்ணீரைக் குடித்து அடக்கிக் கொள்ளுங்கள்.

அவருடைய எந்த ஆலோசனையும் கிடைக்கவில்லையென்றால், ஒரு வருடம் மட்டும் அம்மாவை வைத்துக் கொள்ளலாமா என்று உங்கள் கணவரோடு பேசிப்பாருங்கள். அப்படி இல்லையென்றால், இந்தியாவில் பணம் கொடுத்தால் பாதுகாப்பு கொடுக்கும் வழிகளைச் சொல்லிப்பாருங்கள். அவர், எதற்கும் இசையவில்லையென்றால், முதியோர் இல்லங்கள் தான் கடைசி வழி. NRI பெற்றோர் பலபேர் இதுபோன்ற இல்லங்களில் இருக்கிறார்கள். நீங்களும் உங்கள் சகோதரியும், மற்ற உறவினர்களிடம் கலந்து ஆலோசித்துச் செய்யுங்கள்.

'முதியோர் இல்லம்' என்றாலே அனாதை பாட்டிகள், தாத்தாக்கள் உள்ள இடம் என்று பலர் நினைக்கிறார்கள். பணமும், பாசமும் இருந்தாலும், பக்க பலமாகக் கணவர் துணை கொடுக்கவில்லை என்றால் நீங்கள் தைரியமாக இந்த முடிவை எடுப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு பாசமுள்ள மகள். உங்களுடைய சூழ்நிலை உங்கள் தாயை உங்களுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. குற்ற உணர்வால் குன்றிப் போகாதீர்கள். உங்கள் தாய் எங்கிருந்தாலும் அவர்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அவரைப் பாதுகாக்க எங்கே நல்ல நிழல் கிடைக்கிறதோ அங்கே அவரை இருத்துங்கள்.

குறிப்பு : நான் மனிதத்தன்மையில் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். உங்கள் கணவர் ஒரு வருடமாவது உங்கள் தாயை உங்களுடன் வைத்துக் கொள்ள இணங்குவார் என்றே தோன்றுகிறது. அதற்குள் ஏதேனும் ஒரு வழி பிறக்கும்.

வாழ்த்துகள்.
அன்புடன்,
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com