வையைக் கரையில் ஓர் ஓட்டை மனத்தன்! உரமிலி!
யார் யாரை அப்படிக் கடுமையாக வைகிறார்கள்? அதை அறிய மதுரையில் கரைபுரண்டு வையைநதி பாய்ந்த சமயத்திற்குச் செல்வோமா? காலவாகனத்தில்தான் (டைம் மிசின்) செல்ல வேண்டும்; இரண்டாயிரம் ஆண்டுகள் முந்திச் செல்ல வேண்டியிருக்கிறது! அங்கே இரண்டு பெரிய புலவர்கள் தோன்றுகின்றார்கள். அவர்களில் ஒருவர் நந்நாகனார்; மற்றொருவர் நல்வழுதியார். நந்நாகனார் மெட்டை இசைத்துக் கொண்டு இருக்க நல்வழுதியார் அந்த மெட்டுக்குத் (டியூன்) தக்க பாடலைப் பாடுகிறார். அவர்கள் சேர்ந்து இயற்றியது தான் எட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடலின் 12-ஆம் பாடல்; (பரிபாடல் என்பது இசைத்தமிழ் என்னும் கர்நாடக இசைக் கீர்த்தனைகளில் மிகப் பழைய பாடல்வகை). இந்தப் பன்னிரண்டாம் பரிபாடலின் இராகம் பாலையாழ் (இன்றைய பெயர்: அரிகாம்போதி.) பாடல் விவரிக்கும் காட்சிதான் இது.

அப்பொழுது வையைநதி பிறக்கும் சையமலையில் விடாது மழைபொழிந்தது; அதனால் பெருகிய வையை நதி மலைச்சாரலில் உதிர்ந்த மலர்கள் தன் மேல் பரவி அகில், சந்தனம், சுரபுன்னை, ஞாழல் ஆகிய மரங்களைச் சுமந்து இறங்கி வந்து கடலே கிளர்ந்து வந்தாற்போல் மதுரையை நெருங்கியது. அது மதுரை நகர் மதிலைக் கூட மோதும் என்று கேட்டு நகர்வாசிகள் நதிக்கரைக்குப் புறப்பட்டார்கள். வெள்ளத்தில் குளிக்கவும் விளையாடிக் களிக்கவும்.

புறப்பட்ட பெண்களில் சிலர் ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்தனர்; சிலர் பொன் தகட்டாற் செய்த பூக்களைச் சூடினர்; சிலர் அகிற்குழம்பாலான பூச்சை மாற்றிச் சந்தனத்தைப் பூசிக்கொண்டனர்; மற்றும் சிலர் தம் கருங்கூந்தலைக் குழலாக முடித்தனர்; அவருட் சிலர் அந்தக் கூந்தலில் வெட்டிவேரால் தொடுத்த பல மலர்மாலைகளை அணிந்தனர்; சில நீராடுதற்கு தகுந்த புடவைகளை உடுத்தினர்:

''கார்கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்
வேர்பிணி பன்மலர் வேயுமோரும்''
(பரிபாடல் : 12:15-16)


[கார் = கருமை; கதுப்பு = மயிர்க்கற்றை; வேர் = வெட்டிவேர்; வேயுமோர் - வேய்வோர், சூடுவோர்]

சிலர் வாசனை எண்ணெய்களைப் பூசிக் கொண்டு வெள்ளையான துகளால் தம் கண்ணாடிகளை மாறு மறுவறச் சுத்தம் செய்து அதில் தம்முடைய மூன்று வகை அழகுகளையும் பார்த்துக்கொண்டனர்; அந்த மூன்று வகை அழகுகளும் என்ன? : வண்ணம் என்னும் இயற்கையழகு; தேசு என்னும் செயற்கையழகு. அதாவது ஒப்பனையழகு; ஒளி என்னும் மூன்றாவது அழகு; அது கணவனோடு கூடிய புணர்ச்சியால் உடலில் நேரும் மாற்றங்களால் வெளிப்படும் அழகு. கணவனைப் பிரிந்தால் அழகு குன்றிப் பசலை பாயும்; கூடினால் அதற்கு நேரெதிராய் அழகு மிகும்தானே! தமிழர்கள் எவ்வளவு நுணுகி இதைக்கூட வகை வகுத்துள்ளார்கள்!

''வான்துகள்
மாசுஅறக் கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ் நோக்கி''
(பரிபாடல்: 19-21)


[வான் = வெள்ளை; கண்ணாடி = கண்ணாடி; வயக்கி = ஒளிரவைத்து, சுத்தம்செய்து]

அவ்வாறு ஒப்பனை செய்து கொண்டு நடந்தும், யானைமேலும், தேரிலும் விரைந்து அணிதிரண்டு வையைக் கரைக்குச் சேர்ந்தனர் மதுரைவாசிகள். அங்கே குழுமியிருந்த கூட்டத்தைக் கவனிப்போம். அவர்கள் பேசிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் உற்றுக் கேட்க முடியாது!

''நின்றவர் மொழிமொழி
ஒன்ற அல; பலபல உடன் எழுந்தன்று அவை;
எல்லாந் தெரியக் கேட்குநர் யார் அவை?
கில்லா கேள்வி; கேட்டன சிலசில''
(பரிபாடல் : 12:36-39)


[எழுந்தன்று = எழுந்தது; மொழி மொழி = மொழிந்த மொழி; கில்லா = முடியாதது]

ஏனெனில் அந்தக் கூட்டத்தில் புல்லாங்குழலுக்கு ஒத்தவாறு பலவகை மத்தங்களும் ஒலித்தன; அந்த வாக்கியங்களில் தாளத்தைத் தவற விட்டுப் பின்தங்காமல் நாட்டியப் பெண்கள் தம் முன்கையால் அளப்பதைக் காண்கிறோம்.

''ஒத்த குழலின் ஒலிஎழ...
ஒத்தளந்து சீர் .....
முன்கையால் .....
அளத்தல் காண்மின்''
(பரிபாடல் : 12:40-14)


[சீர் - தாளம்]
அப்போதும் சில பெண்கள் பேசுவதைக் கேட்டோம். சிலர் ''தோழி! பார் அவளை! நாணம் குறையாத குலப்பெண்தான்; ஆயினும் தன் கணவன் பரத்தையின் தோள் அழகை உண்டு தன்னைப் பிரிந்தான் என்று ஊடினாள்; ஆனால் இன்றோ அவனுடனேயே யானைமேல் ஏறி நீராட வந்துவிட்டாள்! அவள் நாணமாட்டாளா?'' என்கின்றனர்.


''நாணாள்கொல் தோழி? நயனில் பரத்தை¨யின்
தோள்நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி
.... இரும் பிடி ... சிறந்தானோடு ஏறினாள்!''
(பரிபாடல் : 12:45-49)


[நயன் இல் = பண்பு இல்லாத; இரும் பிடி - பெரிய பெண் யானை]

மற்றோர் இடத்தில் கூடியிருந்த பெண்கள் கூட்டத்தில் நிற்கும் ஒரு பெண்ணின் உடலை ஒருவன் உற்று நோக்கியதைக் கண்டு அவனை நன்றாக வைதார்கள்;

''கோட்டியுள் கொம்பர் குவிமுலை நோக்குவான்
ஓட்டை மனவன்! உரம்இலி!'' என்மரும்
(பரிபாடல் : 12:50-51)

[கோட்டி = மக்கள் திரட்சி; கொம்பர் = கொம்புபோன்றோர், பெண்; குவி = திரண்ட; ஓட்டை மனவன் = கோழைநெஞ்சத்தான்; உரம் = வலிமை, உறுதி, ஒழுக்கம், ஆண்மை; என்மர் = என்பவர்]

''சனங்களுக்கிடையே பெண்ணின் குவிந்த மார்பகத்தை நோக்குபவன் கோழை நெஞ்சத்தான்! நடத்தையில் உறுதி இல்லாதவன்!'' என்று செமையாக வைதார்கள்! பாருங்கள்! பெண்ணொருத்தியை அவள் மனம் நோக நாணிக்குறுக உற்று நோக்குவதே இவ்வளவு தரக்குறைவு என்று காட்டிவிட்டார்கள் சங்ககால மதுரைவாசினிகள்! இன்றோ நகரங்களில் சில ஆணுருவங்கள் அவ்வாறு நோக்குவது மட்டுமன்றிப் பெண்களைக் கிண்டல் செய்தும் உரசியும் வற்புறுத்தித் துன்புறுத்துவது எவ்வளவு கீழானது! அதை ஏச என்ன வார்த்தை வேண்டும்!

இவ்வாறு பெண்களை வற்புறுத்தும் போது இராமன் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறான்? அவன் அழுது கொண்டே பேசிய காட்சியை அடுத்த தவணையில் கிட்கிந்தைக் காட்டில் சந்திபோமோ?

பெரியண்ணன் சந்திரசேகரன், அட்லாண்டா

© TamilOnline.com