உணவு சுவையாக இருக்க வேண்டுமானால் அதற்கு மணம் ரொம்பவும் முக்கியம். அறுசுவை உணவுக்கு மணமூட்டி சிறப்பளிக்கும் முக்கியமானதொன்று கருவேப்பிலை. வெறும் மணத்துக்காக மட்டும் கருவேப்பிலை பயன்படுத்தப்டுகிறது என்ற இதுவரை நினைத்திருந்தவர்கள் இன்றோடு உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு பல வகையிலும் உரமூட்டக் கூடிய மூலிகைத் தன்மை கருவேப்பிலையில் உள்ளது. மணக்கும் கருவேப்பிலையில் மருத்துவ சக்தியா? என்று ஆச்சரியப்படுகிறீர்களா?
கருவேப்பிலை என்ற சொல்லைப் பிரித்துப் பார்த்தால், கரு+வெப்பு+இலை, அதாவது பெண்களின் கருப்பையில் உண்டாகும் வெப்பத்தினை இல்லாமல் செய்துவிடுவது என்று அர்த்தம். உடல் சூட்டை குறிப்பாக கருப்பைச் சூட்டைத் தவிர்ப்பதில் கருவேப்பிலைக்கு இணை கருவேப்பிலை தான்.
கருவேப்பிலையின் தாவரப் பெயர் Murrayakoenigii. குடும்பப் பெயர் Sprengel Rutaceae. இதற்குப் பிறந்தவீடு என்று இந்தியாவைத்தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இமயமலையில் தொடங்கி சகல இடங்களிலும், (வீட்டுத் தோட்டமானாலும் சரி, பெரிய பண்ணையானாலும் சரி) கருவேப்பிலையைப் பார்க்கலாம். பர்மா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் கருவேப்பிலை வளர்கிறது.
தென்னிந்திய சமையலிலும், ஸ்ரீலங்கர்களின் சமையலிலும், கட்டாயம் கருவேப்பிலை இருக்கும். வட இந்தியர்களும் தங்கள் சாப்பாட்டில் கருவேப்பிலைக்கு ஓரளவு இடம் கொடுத்திருக்கிறார்கள். தென்னிந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து போனவர்களிடமிருந்து தான் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் கருவேப்பிலை பயணித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. தென்னிந்திய சமையலில் இந்த கருவேப்பிலை பச்சையாக அப்படியே சில உணவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கருவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நிக்கோடினிக், அமிலச்சத்து, மற்றும் வைட்டமின் 'சி' போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. வயிற்றின் செயல்பாடுகளைச் சீர்படுத்தி அதன் செயல்திறனை அதிகரிப்பதில் கருவேப்பிலைக்கு இன்றியமையாது தேவைப்படும் வைட்டமின் 'ஏ' சத்து கருவேப்பிலையில் ஏராளமாக இருக்கிறது.
கருவேப்பிலைத் துவையல்
தேவையான பொருட்கள்:
பசுமையான புதிய கருவேப்பிலை - ஒரு பிடி (இலையாக உருவியது) நெய் - சிறிதளவு புளி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப மிளகு - சிறிது வெந்தயம - சிறிது சீரகம் - சிறிது
செய்முறை
முதலில் கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு, ஈரம் போகும் வரை பரத்தி உலர விடுங்கள். சிறிது நெய்விட்டு அதில் இந்த உலர்ந்த இலையை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
மிளகு, வெந்தயம், சீரகம் அனைத்தையும் தனித்தனியே வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். உப்பை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக அம்மியில் வைத்து இழுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைக்கும் போது புளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சாப்பிடும்போது முதல் உணவாக கொஞ்சம் சாதத்தில் நெய்விட்டு இந்தத் துவையலைப் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால், ஓயாத குமட்டல், வாந்தி, அஜீரணம் உட்பட வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். |