மெளலி, தனக்குச் சொந்தமான அமெச்சூர் தியேட்டரில் தானே நாடகங்கள் எழுதி இயக்கி அரங்கேற்றுவதை பொழுதுபோக்காகவும் தீவிர ஈடுபாட்டுடனும் நடத்தி வந்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா திரையுலகில் நடிப்பு, கதையெழுதுதல், இயக்கம் என்று அடிமேல் அடியெடுத்து வைத்து நுழைந்தார். கமலஹாசன் நடித்த 'பம்மல் K சம்பந்தம்' படத்தை இயக்கிய பிறகு, தற்போது நடிகர் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ·பிலிம்ஸ் நிறுவனத்துக்குக்காக ''நள தமயந்தி'' படத்தை இயக்கியிருக்கிறார். மாதவன் - கிதுமோகன்தாஸ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தைக் குறித்தும் இயக்குநர் மெளலி பகிர்ந்து கொள்கிறார்.
இந்தப் படத்திற்கான கதையை, முழுமையான தகவல்களோடு பத்து வருடங்களுக்கு முன்பே நடிகர் கமலஹாசன் எழுதி தயாராக வைத்திருந்தார். ஒருமுறை நாங்கள் சந்தித்துக் கொண்டபோது இந்தக் கதையை எனக்குச் சொன்னார். அவர் கதை சொல்லிய விதத்திலிருந்தே மிகத் தெளிவாக இந்தக் கதை பின்னப்பட்டிருப்பதை நான் புரிந்து கொண்டேன். ஒருநாள் அந்த ஸ்கிரிப்டை எனக்குத் தரும்படி நான் அவரிடம் கேட்டேன். இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் வேறு ஒரு கதாநாயகனை வைத்துப் பண்ணலாம் என்று நினைக்கிறேன் என்று நான் கமலிடம் கூறினேன். அதற்கு அவர் ஒத்துக்கொண்டார். ஆனால் இந்தப்படத்தைத் தானே தயாரிக்க வேண்டுமென்பதில் கமல் உறுதியாக இருந்தார்.
சமீபத்தில் வெளியான 'அன்பே சிவம்' படத்தில் மாதவனும் கமலஹாசனும் இணைந்து நடித்திருந்தார்கள். அந்தப் படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தக் கதைக்குப் பொருத்தமாக வேறு ஒரு கதாநாயகனைத் தேடிக் கொண்டிருக்கும்போது மாதவன்தான் இயல்பாகவே இதற்குப் பொருத்தமானவர் என்ற யோசனை வந்தது. பாலக்காட்டு பிராமின் பாஷையில் பேசுவது அவருக்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும், அந்த பாஷையில் வசனம் பேசுவதற்கு கமல், மாதவனுக்கு ரொம்பவும் உதவி செய்தார். நாங்க ஆஸ்திரேலியாவுல ஷ¥ட்டிங்ல இருந்த போது, ஒவ்வொரு நாள் படப்படிப்புக்குரிய வசனத்தையும் இங்கிருந்தபடியே கமல் பேசி அதை 'ரிக்கார்டு' எண்ணி இன்டர்நெட் மூலமா எங்களுக்கு அங்கே அனுப்பி வைச்சார். தினமும் கமல் அனுப்புகிற வசனப்பதிவை மாதவன் நிதானமா கேட்ட பிறகுதான் படப்பிடிப்புக்கு வருவார்.
இந்தப் படத்தின் கதையை ஒற்றை வரியில் சொல்வதானால், அதிகம் படித்திராத ஒரு இளைஞன் அயல்நாட்டில் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். பாலக்காட்டு பிராமின் சமையல்காரன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார். குடும்பச் சுமையின் காரணமாக பணம் சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்படுகிறது. அயல்நாட்டில் அவனது அனுபவம் - முதல் முறையாக எஸ்கலேட்டர் பார்த்து அதிசயிப்பதில் தொடங்கி நிறைய சின்னச்சின்ன விஷயங்களைக்கூட நகைச்சுவையான முறையில் படம்பிடித்தபடியே படம் நகர்கிறது. மாதவனின் அத்தை பெண்ணாக கிராமத்துக் கெட்-அப்பில் நடித்திருக்கும் ஸ்ருத்திகா ஆரம்பத்தில் மாதவனை சமையல்காரன் என்பதற்காகவே வெறுக்கிறார். ஆனால் அவன் வெளிநாடு செல்லப்போகிறான் என்பது தெரிந்ததும் அவனை விரும்புகிறாள். ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக கிதுமோகன்தாஸ் நடித்திருக்கிறார்.
இன்றைய சூழ்நிலையோடு இந்தக் கதை கச்சிதமாக பொருந்தி வருகிறது என்பதை படப்பிடிப்புக்கான லொக்கேஷன் தேர்ந்தெடுப்பதற்காக நான் முதன்முறை ஆஸ்திரேலியா சென்ற போது தெரிந்துகொண்டேன். மெல்போர்னில் நான் சந்தித்த சில மக்கள் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவம் போல் அங்கே நிஜமாகவே நடந்திருப்பதாகச் சொன்னார்கள். இங்கே கூட நாம் தினமும் செய்தித்தாள்களில் வாசிக்கிறோம்.
வேலையில்லா இளைஞர்கள் அயல்நாட்டு வேலைமோகத்தில் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி வெளிநாடு சென்று அங்கே துன்பப்படுகிறார்கள் என்பதை இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதனால்தான் சொல்கிறேன் இந்தப்படம் இப்போதைய காலகட்டத்துக்கு மிகவும் பொருத்தமான ஒன்று.
கதாநாயகன் வெளிநாட்டுக்கு வேலை தேடிப் போகிறார் என்ற கதைவரிப்படி, எந்த வெளிநாட்டுக்குக் கதாநாயகனை அனுப்பலாம் என்று யோசித்தோம். முதலில் அமெரிக்காவா? கனடாவா? என்ற கேள்வி தான் எங்களுக்கு இருந்தது. ஆனால் கடைசியாக நாங்கள் ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுத்தோம். காரணம் அங்கே நிறைய தமிழர்கள் வசிக்கிறார்கள். கூடவே பச்சைப் பசேலென்ற காட்சிச் சூழல் ஆஸ்திரேலியாவில் தாராளமாகக் கிடைக்கும். அருமையான காலநிலை வேறு சேர்ந்து கொள்வதால் படப்பிடிப்பு சுலபமாக இருக்கும் என்று நினைத்தோம். படப்பிடிப்புக்கு ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுத்தற்காக நாங்கள் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. ஏன்னா, அங்கே இருந்த எல்லோருமே எங்களுக்கு பல விஷயங்களில் ரொம்ப உதவியா இருந்தாங்க.
முக்கிய நடிகர்களையும், கேமரா மேன் போன்ற ஒரு சில டெக்னீஷியன்களையும் மட்டும்தான் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றோம். மற்ற தேவையான ஒரு சில கதாபாத்திரங்களில் அங்கிருந்தவர்களையே நடிக்க வைத்தோம். அவர்களது யூனியனும் சரி, அங்குள்ள அரசும் சரி, பாதுகாப்பு விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருக்கிறார்கள். ஒரு காட்சி எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நடுரோட்டில் வைத்து ஒரு காட்சியை எடுத்தோம். அந்தக் கேமிராவை அவர்கள் கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை. அதற்கு மாறாக அந்த ரோட்டிலிருந்து கேமராவை அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்கள். மெல்போர்னில் குடியிருக்கும் நிறைய தமிழர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களில் யாருமே நடிப்பைத் தொழிலாகக் கொண்டவர்கள் இல்லை. அங்கே தங்கியிருக்கும் தமிழர்கள் அவ்வளவுதான். ஆனால் எல்லோருமே ரொம்பவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். படமாக்கப்பட்டிருக்கும் விதத்தை வைத்துச் சொல்வதென்றால் நிஜமாகவே கமலஹாசனின் கதைக்கு சரியான முறையில் உயிரூட்டப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதை வெற்றிப்படமாக்குவதென்பது பார்வையாளர்களின் - ரசிகர்களின் கையில் தான் இருக்கிறது.
ஏற்கனவே கமலஹாசன் நடித்த படத்தை இயக்கிய அருமையான அனுபவம் எனக்கு இருக்கிறது. திரைப்படத்தில் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டுவர முயற்சிக்கும் ஒரு சில நடிகர்களில் கமலஹாசனும் ஒருவர். அப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சியில் 'நள தமயந்தியும்' ஒரு நல்ல படம் என்றுதான் நான் சொல்வேன்.
சந்திப்பு :மாலினி எழுத்து :காந்திமதி |