தமிழ்நாடு அறக்கட்டளையின் தோற்றம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
நவம்பர் 29, 1974, 'தேங்ஸ்-கிவ்விங்' தினம் (Thanks-giving Day) மேரிலாண்ட் மாநிலம், பால்டிமோரில் டாக்டர் பழனி பெரியசாமியின் இல்லத்தில் பல தமிழ் நண்பர்கள் மற்றும் அவர்களது இல்லத்தினர். ஊரே வான்கோழியைத் தீர்த்துக் கட்டுவதிலும், கால்பந்து விளையாட்டிலும் மூழ்கி இருக்கையில் இவர்கள் சிந்தனையெல்லாம் ..... தங்களை ஈன்றெடுத்து, இன்னமுதூட்டி, இன்பத்தாலாட்டி, வளர்த்து, ஆளாக்கி, ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ, பேராசிரியராகவோ உருவாக்கியதோடு நின்று விடாது, 'சென்று வா, உலகினை சென்று வா' என்று அனுப்பி வைத்திட்ட அன்னைத் தமிழகத்துக்கு எப்படித் தன் நன்றியைக் காட்டுவது என்று தான் எண்ணிக் கொண்டிருந்தது.
என்றோ கால்களில் வாங்கிக் கொண்ட நீருக்காக விழிகளின் மூலம் கோடி கோடியாய் நன்றி சொல்லுகிறதே தென்னையும், வாழையும். அந்தத் தென்னையையும், வாழையையும் ஒத்ததே தமிழ்நாடு அறக்கட்டளையும் அதன் தீர்க்க தரிசனமான திட்டங்களும். தமிழ் மண்ணில் நாமெல்லாம் வேராய் இருந்த நாளில் நீருண்டோம், உரமும் பெற்றோம். இன்று இம்மண்ணில், இதுபோலும் வேற்று மண்ணில் கிளைகளாய், விழுதுகளாய்ப் படர்ந்து கனி தரும் நிலையிலிருக்கும் நாம், நம்மை வளர்த்து ஆளாக்கிய தமிழ் மண்ணுக்கு நம்மால் ஆனது ஏதேனும் செய்திட வேண்டும் என்னும் ஓர் நீண்ட தொலைநோக்கோடு இன்றைக்குக் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சில நன்னெஞ்சங்களிலிருந்து உதித்ததே தமிழ்நாடு அறக்கட்டளை.
தமிழ் மண்ணில் தாலாட்டப்பட்டுப் பின் பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் இயக்கங்களில் தமிழ் நாடடின் நலனுக்காக, ''தாய் மண்ணே வணக்கம், தமிழ் மண்ணே வணக்கம்' என்று நலம் பாடும், பலன் ஏதும் கருதா (non-profit) ஒரே இயக்கம் தமிழ்நாடு அறக்கட்டளையாகத்தான் இருக்க முடியும்.
அறக்கட்டளையின் நோக்கங்களைக் கொஞ்சம் எடுத்துச் சொல்ல முடியுமா?
இதனுடைய ஒப்புயர்வற்ற நோக்கங்களில் முதன்மையானது, ''வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை'' என்பதாகும். தமிழ்நாட்டில் ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்விக்குச் சொல்லும், செயலும், பொருளும் வழங்கி ஊக்குவித்தல்; மனவளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்றோர், மற்றும் கோரிக்கையற்றுக் கிடக்கும் எத்தனையோ விதவைப் பெண்டிருக்கு உதவுதல்; தமிழுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தம் இன்னுயிரை ஈந்துவக்கும் இலட்சியவாதிகளை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுதல்; தேதி ஏதும் சொல்லாமலே தமிழகத்தில் வந்து நிற்கும் புயல், வெள்ளம், வறட்சி, பஞ்சம் இன்ன பிற துயர்களினாலே வரும் வேதனைக் கண்ணீரை ஒரளவேனும் துடைத்தல்; சில துறைகளில் சிறந்து விளங்கும் இளைய தலைமுறைக்கு இன்னும் உயர்ந்து செல்ல வழிகாட்டல்; திக்கெட்டும் சென்று பெற்ற சீர்மிகு அறிவினை, மருத்துவம், பொறியியல் மற்றும் கணிப்பொறி நுட்பங்களைத் தமிழுக்கு இறக்குமதி செய்தல்... என்று இது போலும் எண்ணிறந்த இலட்சிய தாகங்களோடு செயல்பட்டு வருவது தமிழ்நாடு அறக்கட்டளை.
அடடா.... விண்ணுயர்ந்த நோக்கங்கள். வியத்தகு செயல்களாக இருக்கின்றனவே! கவிஞர் வைரமுத்து சொல்லுவார்..... ''மழை நின்ற பொழுது வான் கருணை தொழுது மரம், செடி, கொடி ஆனந்தக் கண்ணீர் அனுபவித்தது'' போல் ஒரு உணர்வு. சரி... அறக்கட்டளையின் திட்டங்கள் பற்றியும் அவை இயங்கும் முறை பற்றியும் சொல்ல இயலுமா?
நிச்சயமாக.....
இதை ஒரு சின்ன உதாரணத்துடன் சொல்ல விரும்புகிறேன். எண்பதுகளின் இறுதி. தொண்ணூறுகளின் தொடக்கம் என்று எண்ணுகிறேன். கணினி என்பது இங்கு நம்மில் பெரும்பான்மையினருக்குத் தவிர்க்க முடியாத அத்தியாவசியமான நம்மில் ஒரு அங்கமாக, அலுவலகத்தில், வீட்டில், வெளியில்... எங்கெங்கு காணினும் கணினியடா.... என்று மாறிக் கொண்டிருந்த நேரமது. ஆனால் இந்தியாவில் கணினி ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருந்த தருணமது... இந்த வேளையில் அந்நேரம் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரும் அறக்கட்டளையின் தமிழ்நாட்டுக் கிளைக்குத் தலைவருமான டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் பரிந்துரைக்க, இன்று அறக்கட்டளையின் தலைவரும் அதன் ஆணிவேர்களில் ஒருவருமான திரு. துக்காராம் கணிசமான கொடை வழங்கிட ஓர் ''நடமாடும் கணினித் திட்டம்'' துவங்கப் பெற்றது. கிராமப் பள்ளிக் குழந்தைகளுக்காகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களால் தொடங்கப் பெற்ற இவ்வரியத்திட்டம் இந்தியாவிலே முதன் முதல் தோன்றிய ஒரு கணினிப் புரட்சி என்பேன். இன்று சென்னையில் அறக்கட்டளையின் தமிழ்நாட்டுக் கிளை வரலாறு காணாத அளவுக்கு வளர்ந்துள்ளது மட்டுமல்ல. ஆயிரக்கணக்கானோர் கணினிப் பயிற்சி பெற்றிட 'நடமாடும் கணினித் திட்டமே' மூல வித்தாக முளைத்ததெனில் அது முற்றிலும் உண்மை.
இது போலும் முன்னூறுக்கும் மேற்பட்ட திட்டங்கள் அறக்கட்டளையின் மூலம் துவங்கப் பெற்றுள்ளன. சில முதிர்ந்துள்ளன. இன்னும் சில இயங்கி வருவன. கிட்டத்தட்ட மூன்று மில்லியன் டாலர்கள். இன்றைய கணக்கில் 15 கோடி ரூபாய் பெறுமான திட்டங்களைச் சிறப்புற நடத்தி வருவதில் அறக்கட்டளை பெருமையுறுகிறது.
சொற்களே மலிந்து போய், செயல்கள் மலிந்து வருகின்ற இந்நாட்களில், ''வேலை வணங்குவதே வேலை'' என்றில்லாமல் ''வேலை வழங்குவதும் வேலை'' என்று சமயத்தோடு சமுதாயத்தையும் பார்த்திட்ட மகா சந்நிதானம் குன்றக்குடி அடிகளாரின் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருவது மற்றுமொரு அரிய திட்டம்.
இன்னும் அறக்கட்டளையும் இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கிடும் பயிற்சிகள். ''கெம்கிட்'' எனப்படும் வேதியல் திட்டம்.. சொல்லிக் கொண்டே போகலாம்.
.... இது இப்படியிருக்க...
இங்கு இந்த இடத்தில் என் நெஞ்சினை நெகிழ வைத்த சேதி ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
நிச்சயம் சொல்லுங்கள்!
'90களில் குமுதம் இதழின் பொறுப்பாசிரியரான திரு. மாலன் ''எங்கே இந்தியன்?'' என்ற தலைப்பில் எழுதியிருந்த தலையங்கம் ஒன்று என்னைப் பெரிதும் பாதித்தது. ''கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையெனும் அறிவு மிலாரை'' எண்ணி வருந்தி, பொங்கித் தின்றிட்டாலே போதும் என மகிழ்ந்து போகும் பொது ஜனங்களின் போக்கினுக்காகப் பொருமி, இவர்களெல்லாம் தேர்ந்தெடுத்தனுப்பிய பொறுப்பற்ற பொய்முகத் தலைவர்களின் புரட்டுகளுக்காகப் புழுங்கி மாலன் எழுதியிருந்த ''எங்கே இந்தியன்?'' தலையங்கம் ஒரு கோடி பெறும்.
''என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ?'' என்று பாடிய அந்த எட்டயபுரத்துக் கவிஞன் இன்று இருப்பானாகில், அந்த வரியை அழித்து எழுதி விட்டு, ''என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?'' என்ற வரியோடு தொடங்கியிருப்பாளோ?..
..... என்று நான்....
பேதலித்து, அச்சமும் மிடிமையும் என்னை ஆட்கொள...
''எங்கே இந்தியன்?'' ''எங்கே இந்தியன்?'' என்ற கேள்வியை எனக்குள்ளே ஆயிரம் முறையேனுமூ கேட்டிருப்பேன் என எண்ணுகிறேன்.
''இங்கு இவ்விதமாய் நானும் இடர் மிகுந்து வாடுகை யில்'' மார்ச் 12, 1997ல் பாஸ்டன் குளோப் பத்திரிகையில் வெளிவந்திருந்த செய்தி ஒன்றை என் இனிய நண்பர் சித்தார்த் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மாசச்சுசெட்ஸ் மாநிலத்தில் ஷெர்பன் என்ற சிற்றூரில் மகாத்மா காந்தியின் நினைவாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக மனவளர்ச்சி குன்றியோருக்கான பற்றி ஒன்றினை நடத்தி வரும் லூயி ராண்டா என்னுமோர் அமெரிக்கரின் தியாக உணர்வினை வாழ்த்தி எழுதப்பட்டிருந்த சேதி அது. பள்ளியைக் கட்டுவதற்கும், பின்னர் பராமரிப்பதற்கும் வங்கியொன்றில் வாங்கியிருந்த கடனுக்குத் தன் சம்பளம் அனைத்தையும் கட்டிவிட்டு, கையோடு தன் வயிற்றுப் பசியையும் கட்டிப் போட்டுக் கொண்ட ஓர் வள்ளலின் கதை அது. எதற்கெல்லாம் தான் இந்த குசேலன் படியளப்பது?..... ஒரு முறை இப்படித்தான் வங்கிக்குப் பணம் கட்ட முடியாத நிலையில், பள்ளி ஏலத்தில் போக இருந்தது. ''ஈகைத் திறன்'' என்பதைச் சிந்தையிலும் செய்கையிலும் முற்றும் உணர்ந்திருந்த லூயி ராண்டாவுக்கு ''இரத்தல் இகழ்ச்சி'' என்பதிலும் ஆழமான நம்பிக்கையுண்டு. ''இழைக்கின்ற விதி வழி'' என்று சொல்லி இறைவனிடம் அவர் முறையிட யோக்கோஒனோ என்றொரு ஜப்பானியர்.. நன்றாகக் கவனிக்க வேணும். ஒரு ஜப்பானியர்.... மகாத்மா காந்தியின் மீது மட்டற்ற அபிமானம் கொண்ட ஒரு தருமசீலர் 40 ஆயிரம் டாலர் வழங்கிப் பள்ளியை மீட்டது மற்றுமொரு சத்திய சோதனை. இந்தக் கொள்ளையில் மகாத்மாவுக்குச் சிலை ஒன்றை நிறுவிட ராண்டா விரும்பி மீண்டும் பள்ளியை அடமானம் வைத்ததும்... பண முடை வந்து... மனவளர்ச்சி குன்றியோருக்குப் பள்ளியா, மகாத்மாவுக்குச் சிலையா என்ற கேள்வி எழுந்தபோது.... 'பள்ளித் தலமனைத்தும் கோயிலே' என்ற முடிவு கொண்டதுவும்.. எங்கிருந்தோ (இந்தியாவிலிருந்தல்ல!) பேர் சொல்ல விரும்பிடாத ஓர் புண்ணியவான் .. அள்ளிக் கொடுத்துப் பள்ளியையும், பாபுஜியின் சிலையைக் காத்ததுவும்...
ஓ.. தமிழில் கூட அதைச் சொல்லிட வார்த்தைகள் இல்லையெனத் திண்ணமாய்ச் சொல்லுவேன்!
இந்த நிலையில் ''எங்கே இந்தியன்?'' என்ற கேள்விக்கு நானே எனக்குள் சொல்லிக் கொண்ட பதில் இது தான். இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து முடிவதால் மட்டும் ஒருவன் இந்தியனாகி விடுவதில்லை. மாறாக.. அமெரிக்க மண்ணில் பிறந்த, வளர்ந்த எத்தனையோ லூயி ராண்டாக்களில் இந்தியன் இருக்கிறான். ஜப்பானியனாய் இருந்தாலும், மகாத்மாவின் மண்ணில் பிறவாத, அந்த மகானின் மண்ணடியை மதித்திடும் எத்தனையோ யோக்கோஒனோவில் இந்தியன் இருக்கிறான்! இத்தனைக்கும் மேலாய் வலது கை கொடுப்பதை இடது கை அறியா வண்ணம் வாரிக்கொடுத்து, பாரதத் தந்தையின் சிலையையும், ஷெர்பன் நகர்ப் பள்ளியையும் தாங்கிப் பிடித்த ஊர் பேர் தெரியாத அந்தப் பாரியினுள், இந்தியன் மட்டுமல்ல இன்னுமோர் காந்தியும் இருக்கிறான்.....
..... என்று நான்....
என்னுள் சொல்லிக் கொண்டிருந்த போது..........
''அமெரிக்க மண்ணில் பிறந்து, வளர்ந்த எத்தனையோ லூயி ராண்டாக்களிலும் இந்தியன் இருக்கிறான்'' என்னும் என் எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் மற்றுமோர் நிகழ்ச்சி...
''வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி நின்றேன்'' என்ற வள்ளலாரின் வரிகள் எனக்கு மனப்பாடம். அவ்வளவே; ஆனால் அது ஜெனீவா நகரில் வாழும் திரு ஜேனஸ் ஹசின் என்பவரின் காதில் ஆலயமணி ஓசையென விழுமென யாரறிவார்! வேலூரில், கூத்தம்பாக்கத்தில், கோவளத்தில் திரு. ஹசினின் கால் படாத இடமில்லையெனலாம். அவர் தொட்டுப் பார்க்காத ஏழை நெஞ்சம் இல்லையெனலாம்.
அறக்கட்டளை குறித்த தகவல்களை எங்கு பெறலாம்?
www.tnfusa.org என்ற தளத்தில் அல்லது www.tnftnc.org என்ற தளத்தில் வலை விரித்திடுக. என்னை நீங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வதாயின் kasgomes@comcast.net க்கு எழுதுங்கள்.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனி சிறந்தனவே!
கோம்ஸ் கணபதி, டென்னசி |