சென்ற மாதம் 'துமாரி அம்ரிதா' நாடகம் பார்க்கச் சென்றது பற்றிச் சொல்லியிருந்தேன். எனது மாணாக்கர்கள் இருவர் மற்றும் அவர்களது கல்லூரி நண்பர் ஒருவர், நான் என நால்வர். நாடக அரங்குக்குப் போகும்போது எங்களுக்குள் ஒரு விவாதம் ஆரம்பித்தது - திரும்ப வந்து அலுவலகத்தில் அதன் எதிரொலி - வலையாடல் சங்கிலி (threads on discussion forum) போல, ஏறத்தாழ ஐம்பது நாட்களாகத் தொடர்கிறது.
விவாதம், ஆரம்பித்த இடத்தில் இருந்து பல இடங்களுக்குச் சென்று சுற்றி வந்தது - பல உபசங்கிலிகளுடன்! வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு குழுக்கள் விவாதித்ததாகத் தெரிய வந்தது. பலமுறை புதிதாக ஒரு குழு திடீரென வந்து காபி குடிக்கும் இடத்தில், புகை விடிக்கும் இடத்தில் என்னுடன் ஒரு 10-15 நிமிட விவாதம் செய்து விட்டுப் போகும்.
நிறுவனத்தில் 600க்கு மேற்பட்டோர் (இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும், தவிர கொழும்பு நகரத்தில் ஒரு கிளை இருப்பதால் அங்கிருந்தும் சிலர்) வேலை செய்கின்றனர். பலருடைய கருத்துகளில் பொதுவாகக் காணப்பட்ட சில எண்ணங்கள்:
தமிழ்நாட்டில் பெரும்பாலோர் இந்தி தெரிந்திருந்தாலும் பிற மாநிலங்களில் இருந்து வருவோரிடம் இந்தியில் பேசமாட்டார்கள்.
எனது கல்லூரி நாட்களில் நானும் எனது சக மாணவர்களுடம் 'ஆய்ந்து அறிந்த முடிவு': வெளி மாநிலங்களில் உள்ளோர் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், தென்மாநிலங்களிலிருந்து வருவோரிடம் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். இதை நான் சொன்ன போது அனைத்து வடமாநிலத்தாரும் 'இல்லவே இல்லை' என்று மறுத்தார்கள். சிலர் நான்று இவ்வாறு நினைப்பது / நினைத்து பற்றி ஆச்சரியமும், வருத்தமும் தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டில் அரசியல் காரணங்களுக்காக (தமிழ்) மொழி முக்கியப்படுத்தப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும், கடுமையான மொழிப் போராட்டம் - உயிர்ச் சேதங்களுடன் - நடந்தது பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் நடுவில் அதிக சந்தடியில்லாமல் இந்திப் பிரசார சபா வருடந்தவறாமல், நிறைய பேரை பல பரீட்சைகளுக்குத் தயார் செய்வது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிலர் அப்படி ஒரு அமைப்பு இருப்பதே தெரியாது என்றார்கள்!
இந்தியாவில் ஒரு மொழி ஆட்சி மொழியாக இருப்பது போதாது. அந்த மொழி (இந்தி) அனைத்து இந்தியர்களையும் இணைக்கும் மொழியாகவும், அனைவரின் பேச்சு மொழியாகவும் இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தின் இணைப்பு மொழி நிலை, மிகக்குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சிமெழி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதி போன்றவை பற்றி ஓரிரண்டு பேர் மட்டுமே அறிந்திருந்தனர்.
இவ்வாறு ஒரு மொழி முதன்மைப்படுத்தப்படுவதால் பிற மொழிகள் பாதிக்கப்பட மாட்டா. ஏனெனில், அனைத்து இந்திய மொழிகளும் ஒன்றிலிருந்து தோன்றியவை.
மொழியியல் ரீதியில் திராவிட மொழிகள் மற்ற இந்திய மொழிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டவை என்பது ஷிஷிர் பாண்டே என்ற ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. (அதற்குக் காரணம் அந்த நண்பர், பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் அவர்களது கொள்ளுப்பேரன் என்பதே.)
பல பிரிவுகளாய் பல நிலைகளில் இருந்து கருத்துகள் வந்தாலும், குறிப்பிடத்தக்க அளவுக்கு, பேசப்பட்ட தலைப்பை ஒட்டி - குழுக்களின் கலவை மாறியது! உதாரணமாக, தமிழ்நட்டில் உள்ளோர் இந்தி தெரிந்திருந்தாலும் பேச மாட்டார்கள் என்று எனக்கெதிராகக் கடும் விவாதம் புரிந்தவர், பீகார் மாநிலத்தவர். மொழிகளில் பாதிக்கப்படுவது பற்றிப் பேச்சு நடந்த போது, அவர் தனது மொழி 'மைதிலி'யின் நிலையை உதாரணங்காட்டி இக்கருத்தை மறுத்துப் பேசினார்.
பாரதியார் என்ற பெயர் வெகு சிலருக்கே தெரியும்!
தமிழரல்லாத முப்பது பேரிடம் சிறிய 'ஆய்வு' ஒன்று நடத்தியதில், ஒருவர் பாரதி பெயரைக் கேள்விப்பட்டிருந்தார்; இருவர், பாரதி விடுதலைப் போராட்ட காலத்து கவிஞர் அறிந்திருந்தார்கள். மாற்றாக இதே முப்பது பேரில், பத்து பேர் ராஜாஜியின் பெயரைக் கேட்டிருந்தார்கள் - 4 பேர் அவர் 'கவர்னர் ஜெனரல்' என்றார்கள்.
இதைப் பற்றி நான் பேசியபோது ஷிஷிர் சொன்னது: ''தமிழ் என்பதால் இவர்களுக்குச் தெரியாமல் இல்லை. ஸ்ரீஸ்ரீ, மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், எழுத்தச்சன் என்றால் கூடத்தான் இவர்களுக்குத் தெரியாது!''.
தனக்கே உரிய நையாண்டியுடன் எழுத்தாளர் பெர்னார்ட் ஷா, இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒரே மொழியால் பிரிக்கப்பட்டிருக்கும் இருநாடுகள் என்றார். இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் இந்தியாவில் (ஆட்சி மற்றும் இணைப்பு) மொழியின் தாக்கம்?
இந்தப் பேச்சுக்களின் நடுவில் தெரிவிக்கப்பட்ட ஒரு மனவோட்டம் இனம் / மொழி சார்ந்தவரிடம் இருக்கும் ஒத்துழைப்பு மற்றும் சமூக மனப்பான்மை (உதாரணமாக பார்சிகள்) சிலரிடம் அதிகம். பொதுநிதி போன்ற அமைப்புகள் மூலம் விபத்து போன்ற இழப்புகளைக் கூட சரிசெய்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த சமூகங்கள் பெரிதும் வாணிகம் சார்ந்தவை. எனவே ஒத்துழைப்பும் கூடி வாழ்தலும் அவர்களுக்கு இரத்தத்துடன் பின்னிப் பிணைந்தவை. தமிழர்கள் பெரும்பாலும் இன்னொருவரிடம் வேலை செய்பவர்கள். எனவே இன்னொரு தமிழர் அவரது போட்டியாளராகவே பார்க்கப்படுகிறார்.!
இவையாவும் கருத்துகள் - சமூகவியல் ஆய்வு முடிவுகள் அல்ல. ஆயினும் நம்மிடையே இருக்கும் இடைவெளிகளையும், தொடர்பின்மையையும் இவை எடுத்துக்காட்டுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. தென்றல் வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.
அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA) மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஏற்பாடு செய்துள்ள மாநாடுகள் நடக்க இருக்கின்றன. இரண்டு மாநாடுகள் நடப்பது வட அமெரிக்கத் தமிழர் சமுதாயத்தின் அளவும், விரிவும் ஒரு திருப்பு முனையை எட்டிவிட்டதற்கான அடையாளமாகத் தோன்றுகிறது.
வாழ்த்துகள்...
மீண்டும் சந்திப்போம், பி. அசோகன் ஜூலை - 2003 |