தமிழ் சாஹித்ய கர்த்தா பாபநாசம் சிவன் அவர்களின் பெயரால் ஓர் இசைவிழா டொராண்டோ சிவன் பைன் ஆர்ட்சின் ஆதரவில் ஆகஸ்ட் 4, 5ஆம் நாள்களில் கொண்டாடப்பட்டது. விழாவைப் பாபநாசம் சிவன் அவர்களின் பேரன் பாபநாசம் அஷோக் ரமணி அவர்கள் எடுத்து நடத்தினார்கள். ஆகஸ்ட் 4 அன்று இளம் சிறாருக்கான இசைப் போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவிலிருந்து வந்திருந்த அக்கரை சுப்பலஷ்மியும் பிரேமா ஹரிஹரனும் இதற்கு நடுவர்களாக இருந்தனர்.
ஆகஸ்ட் 5ஆம் நாள் இளம் கலைஞர்கள் பாபநாசம் சிவன் கிருதிகளைப் பாடி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களுடன் ஆனந்தும் சுபத்திராவும் வயலின் வாசித்தனர். மதிய நிகழ்ச்சியில் அஷோக் ரமணி அவர்கள் தான் வாய்ப்பாட்டுடன் மிருதங்க வாசிப்பிலும் விற்பன்னர் என்பதை நிரூபித்தார். பாலமுரளியுடன் சேர்ந்து முதலில் பாடினார். பின்னர் அபிராமி, சுகலியா, வாராஹி, அஸ்வின் ரோஹின் சகோதரர்கள் போன்றவர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்தார்.
சங்கீதப் பயிற்சி தரும் திருமதிகள் சுலோசனா கிருஷ்ணமூர்த்தி, சாருமதி மனோகரன், விஜயலஷ்மி, ஹம்சத்வனி சிங்கராஜா, திரு. கெளரி சங்கர் ஆகியோர் இந்த சந்தர்ப்பத்தில் கவுரவிக்கப்பட்டனர். டொரண்டோவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து பல இசைக்கலைஞர்களை உருவாக்கியுள்ள திருச்சி சங்கரன் அவர்களுக்கு 'ஆயுட்கால சாதனை விருது' வழங்கிப் பெருமை செய்தனர். வாரம் 10,000த்துக்கு மேல் பிரசுரமாகும் 'உதயன்' பத்திரிகையை நடத்தி சேவை செய்துவரும் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு 'சேவை ரத்னா' விருது வழங்கப்பட்டது.
அலமேலு மணி |