'கலாலயா' வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி
சான்·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பாரம்பரிய இந்தியக் கலைகளைப் பரப்பி வரும் கலாலயா நிறுவனம் ஜூலை 9, 2007 அன்று கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியன், சித்ரா ஆகியோர் இணைந்து வழங்கிய அரிய இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. சபோ கல்லூரியின் பிரம்மாண்ட அரங்கம் அன்று நிரம்பி வழிந்தது. சென்னையில் இருந்து வந்திருந்த ஷ்யாம் இசைக்குழுவினர் அருமையான பின்னணி இசை வழங்கினர்.

நிகழ்ச்சியைத் தன் கணீரென்ற குரலில் 'மஹா கணபதிம்' என்று கணபதி வணக்கத்துடன் ஜேசுதாஸ் ஆரம்பிக்க ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து 'அம்மா என்று அழைக்காத' என்ற அற்புதமான பாடலை ஜேசுதாஸ் பாடினார். ஜேசுதாசின் மூன்று பாடல்களுக்குப் பிறகு எஸ்.பி.பி. தன் மயக்கும் குரலில் 'சங்கீத ஜாதி முல்லை' என்று தொடங்க கரகோஷம் வானைப் பிளந்தது. ஜேசுதாஸ் யாரும் எதிர்பாராத ஆனால் காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடி ரசிகர்களைப் பரவசத்தில் திக்குமுக்காட வைத்தார். 'கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா' போன்ற பாடல்கள் மிகுந்த இன்பமூட்டின. சித்ராவும், சுசித்ராவும் தனியாகவும், எஸ்.பி.பி., ஜேசுதாசுடன் இணைந்தும் பல பாடல்களைப் பாடினார்கள்.

ஜேசுதாஸ் மலையாளத்தில் இருந்து மிகப் பிரபலமான ஹிஸ் ஹைனஸ் படத்தில் இருந்து 'பிரபதவனம் வேண்டும்', செம்மீன் படத்திலிருந்து 'கடலினக்கர போணோரே' போன்ற பாடல்களையும், எஸ்.பி.பி. சங்கராபரணத்தின் 'சங்கரா' பாடலையும் பாடும் பொழுது சபையில் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரமானது. நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர் வராமற் போகவே எஸ்.பி.பி.யும் ஜேசுதாசுமே அந்தப் பணியை ஏற்று, தமது சுவாரசியமான, நகைச்சுவை நிரம்பிய சிந்தனையைத் தூண்டும் உரைகளினாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்டனர். ஐயப்பனிடமும், குருவாயூரப்பனிடமும் ஜேசுதாசுக்கு இருக்கும் பக்தியை எஸ்.பி.பி. மிக நெகிழ்ச்சியுடன் விவரித்தார். ஜேசுதாசும் இந்திய தேசியத்தின் பண்பாடு, கலாச்சாரம், ஒருமைப்பாடு குறித்து பல சம்பவங்களைச் சொல்லி இசை எவ்வாறு இந்தியர் அனைவரையும் இணைக்கிறது என்பதை அழுத்தமாகப் பல சம்பவங்களின் மூலம் சொல்லி வந்தார்.

சித்ரா அவர்களும் 'மரி மரி நின்னே' போன்ற பல பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்களைப் பரவசத்துக்குள்ளாக்கினார்.

இறுதியாக ஜேசுதாசும், எஸ்.பி.பி.யும் இணைந்து பாடிய 'தளபதி' படப் பாடலைப் பாடி மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கினார்கள். மொத்தத்தில் ஒரு மறக்க முடியாத இசை மாலையை கலாலயாவின் கலா ஐயர் ஒழுங்கு செய்திருந்தார் என்றால் அது மிகையல்ல.

ச. திருமலைராஜன்

© TamilOnline.com