ஆகஸ்ட் 4, 2007 அன்று கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம் நடத்திய முத்தமிழ் விழா அட்லாண்டா இந்துக் கோயில் வளாகத்தில் கவிஞர் முல்லை நடவரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பால பஞ்சாபகேசன் வரவேற்புரை வழங்கியதோடு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்து பூங்கோதை ராம்மோகன் குழுவினரால் பாடப்பட்டது. ரம்யா ராமகிருஷ்ணன் அவர்கள் 'ஸ்ரீமகா கணபதிம்' என்ற தீட்சிதர் கிருதியும் 'சாமகான' என்ற ஜி.என்.பி.யின் பாடலும் பாடினார்.
தொடர்ந்து ராஜன் நாராயணன் (பாஸ்டன்) அவர்கள் சில தேவாரப் பாடல்களை அருமையாகப் பாடினார். அவருக்கு திலீப் வயலின் வாசித்தார். அடுத்து பாவினி ராஜன் குழுவினரான சுகன்யா சேதுராமலிங்கம் மற்றும் ஐஸ்வர்யா ஸ்ரீதரன் இருவரும் 'ஆடிக்கொண்டாடி', 'நடனம் செய்யும்' ஆகிய பாடல்களுக்கு ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
அடுத்து வந்தது 'அவ்வை 2007' நாடகம். அதன் முன்னுரையில் திருமதி செல்வகுமார் ஆத்திச்சூடி, நன்னெறி போன்ற எளிய பாடல்களில் அரிய கருத்துகளைத் தரும் ஒளவையாரின் வாழ்நாள் நீண்டமைக்குக் காரணம் அதியமான் கொடுத்த நெல்லிக்கனி என்பது வரை கூறி விளக்கினார். நாடகம் பல சரித்திரக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தியது. திருமதி ராஜஸ்ரீ பாடிய 'இசையில் குழலூதி' பாபநாசன் சிவனின் 'நீ இரங்காய் எனில்' பாடல்கள் மிக இனிமை.
அடுத்துப் பேசிய கவிஞர் முல்லை நடவரசு தனது சொற்பொழிவில் பட்டுக்கோட்டை முதல் கவியரசு வரையிலும், எம்கேடி முதல் பரவை முனியம்மா வரையிலும் அனைவரது குரல் வளத்திலும் பாடிக் காட்டினார். இடையிடையே அவையோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கேள்விகளையும் கேட்டு, விடையளித்தவர்களைப் பாராட்டினார். தேவாரம், திருவாசகம் போன்றவை இறைவனையே இறங்கிவரச் செய்யக் கூடியவை. இசைக்கு மயங்காதோர் இல்லை என்றார்.
திருமதி அர்ச்சனா ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற, விழா இனிது நிறைவெய்தியது.
சுந்தரவல்லி சந்தானம், அட்லாண்டா |