நடன அரங்கேற்றம்: காம்யா சங்கர், கீர்த்தனா சங்கர்
ஆகஸ்ட் 4, 2007 அன்று 'நாட்டிய தர்மி' நடனப் பள்ளி மாணவிகளான சகோதரிகள் காம்யா மற்றும் கீர்த்தனா சங்கரின் நடன அரங்கேற்றம் மிச்சிகன் 'லாரன்ஸ் டெக்' அரங்கில் நடைபெற்றது. கம்பீர நாட்டையில் புஞ்பாஞ்சலி செய்த வண்ணம் சகோதரிகள் நடனத்தைத் துவக்கினர். ரஞ்சனி ராஜாராமன் கச்சிதமாக ஆங்கிலத்தில் தொகுப்புரை வழங்கினர்.

தோடி ராகத்தில் அமைந்த ஜதிஸ்வரத்துக்கு சகோதரிகள் நடனமாடினர். 'தாயே கருணை ப்ரியா இதுவே தருணம்' என்ற ராகமாலிகைப் பாடல் அதற்கு மிகப் பொருத்தமாக இருந்தது.

முத்தாய்ப்பாக அமைந்தது வர்ணத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 'சுவாமி நானுன்னை அடிமையென்று' என்ற பாபநாசம் சிவன் அவர்களின் பாடல். இதில் சகோதரிகள் அபாரமாக ஒருங்கிணைந்து ஆடினர். பிலஹரி ராக 'பூவயம் காபம்' தசாவதாரத்தை இரண்டு முறை நம் கண் முன்னே நிறுத்தியது. இருவர் நடனமாடியதால் 'நிருபா சுவாமிக்கே' என்ற பேஹாக் ராகப் பாடலில் சுவாமியை நினைத்து உருகும் தருணம் காம்யா சங்கர் எல்லோரையும் உருக்கிவிட்டார். கிளீவ்லாந்த் தியாகராஜ உற்சவத்தில் வீணை இசையில் ஆறு முறை தங்கப் பதக்கம் பெற்றவர் காம்யா. அங்கு வாய்ப்பாட்டிலும் பலமுறை பரிசுகள் பெற்றுள்ளார். குறிப்பாக இந்தியர்கள், அதிலும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்வு பெற்றுள்ளார். சிகாகோ தியாகராஜ விழாவிலும் சங்கீதத்தில் பரிசு பெற்றுள்ளார்.

ரீதி கௌளையில் அமைந்த 'நன்னுவிடச்சி' என்ற பாடலுக்குக் கீர்த்தனா சங்கர் தன் தனித் திறமையைக் காட்டினார். இவரும் கிளீவ்லாந்து மற்றும் சிகாகோ தியாகராஜர் விழாக்களில் காவ்யாவுடன் இணைந்தும் தனியாகவும் வாய்ப்பாட்டில் பல பரிசுகள் பெற்றுள்ளார். வயலின் இசையிலும் பரிசுகள் பெற்று வருகிறார்.

மும்பையில் பிரபலமான 'ராக ராஜேஸ்வரி' நாட்டியப் பள்ளியை நடத்தி வரும் கலைமாமணி கல்யாண சுந்தரம் பிள்ளை இவ்விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்து சகோதரிகளுக்குக் கேடயம் வழங்கினார்.

'நாட்டிய தர்மி' நடனப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வரும் குரு சந்தியாஸ்ரீ ஆத்மகுரி பரதநாட்டியம் மட்டுமின்றி குச்சுபுடி நடனத்திலும் சிறந்து விளங்குகிறார். வழுவூர் பாணியில் பரதம் பயின்றார். கலைமாமணி ராஜரத்தினம் பிள்ளையிடம் பரதநாட்டியமும் வேம்பட்டி சின்ன சத்தியத்திடம் குச்சுபுடியும் பயின்றவர். தமது 10ஆம் வயதிலேயே நடனத்திற்குத் தங்கப் பதக்கம் பெற்றார். கலாபீடம் குரு பாகவதுலு சீதாராம சர்மாவிடம் சென்னையில் நட்டுவாங்கம் பயின்றார். 'நாட்ய விஷாராதா' என்ற விருதைச் செம்மங்கடி சீனிவாச ஐயரிடம் பெற்ற பெருமை சந்தியாவுக்கு உண்டு. ஜூலை மாதம் பஞ்சவக்த்ரம் என்ற நடன நிகழ்ச்சியை மிச்சிகனில் நடத்தி பார்வையிழந்தோருக்கு அதன்மூலம் நிதி திரட்டினார். மேலும் ஆஷா, எய்ம் ·பார் சேவா, ஸ்பர்ஷ் போன்ற சேவை அமைப்புகளுக்கும் நடன நிகழ்ச்சிகளை அமைத்துள்ளார்.

திருமதி பினி பணிக்கர் (வாய்ப்பாட்டு), ஜயசங்கர் பாலன் (வயலின்), ஜயசிங்கம் (மிருதங்கம்), சுனிதா கிரந்தி (புல்லாங்குழல்), ஷஷி லக்ஷ்மி நாராயணன் (வீணை) ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்து நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர். நட்டுவாங்கம் குரு திருமதி சந்தியாஸ்ரீ ஆத்மகுரி அவர்கள்.

காந்தி சுந்தரம்

© TamilOnline.com