தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்
திருநாவுக்கரசரையோ ஆண்டாளின் பாசுரங்களையோ எப்படி இலக்கியமாக அணுகுவது என்பதை நமது கல்வி முறை நமக்குக் கற்றுத்தரத் தவறிவிட்டது. கல்விக் கூடங்களில் வெறும் செய்யுளாகத்தான் இவை படிக்கப்படுகின்றன. இலக்கியமாகப் பயிற்றுவிக்கப்படுவதில்லை. சுதந்திர இந்தியாவில் அல்லது பிரிட்டிஷ் இந்தியாவில் 200, 250 வருடங்களாக ஓர் இலக்கியத்தை அணுகுவதற்கான முறை வளர்ச்சியடையாமலே போய் விட்டது.
பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி, தேசிய நாட்டுப்புற உதவி மைய இயக்குநர்.
*****
நதி நீர் இணைப்பு என்பது சாத்தியமான ஒன்றுதான். அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களின் தேவையையும், நலனையும் கருதி ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் இந்தத் திட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், முன்னாள் குடியரசுத் தலைவர்
*****
அரசின் நல்ல திட்டங்களுக்கு முட்டுக் கட்டைகள் போடும் கூட்டணி நண்பர்கள், அரசியல் கட்சிகள் எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். எங்களால் முடியாவிட்டால், இவ்வளவுதான் முடிந்தது என்று உங்களிடம் விடை பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இதற்கு மேல் வேறு ஏதாவது செய்ய வேண்டு மென்றால் வேறு யாராவது வந்து செய்யட்டும். நான் தாராளமாக அவர்களை வாழ்த்த, பாராட்ட, அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
மு. கருணாநிதி, தமிழக முதல்வர்
*****
மெலடி என்ற வார்த்தை தமிழ்சினிமாவில் மெல்ல மறைந்து வருகிறது. குத்துப்பாட்டு ஷார்ட்கட் முயற்சி. இதற்கு இசையமைப் பாளர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. குத்துப்பாட்டு மாயையிலிருந்து தமிழ் சினிமா மாற வேண்டும். தமிழகத்தின் தேசிய கீதமாக இதை மாற்றாதீர்கள்.
ஏ.ஆர். ரஹ்மான், இசையமைப்பாளர்
*****
இளைஞர்கள் சினிமாத் திரையரங்கு வாயிலில் காலையிலேயே காத்துக் கிடக்கும் சூழல் தமிழகத்தில் உள்ளது. இந்த அவலத்தைத் தடுக்க, மாலை 5 மணிக்குப் பின்னர்தான் திரைப்பட அரங்குகள் செயல்பட வேண்டும்.
டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர்
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன் |