ரசனை
ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ஒரு விவசாயியும் அவரது நண்பரும் ஏறினார்கள். ஏறின பெட்டியில் கூட்டம். நிற்கத்தான் இடமிருந்தது. மிருதங்கம், கடத்துடன் ஒரு வாத்திய கோஷ்டி அந்தப் பெட்டியில் இருந்தது.

விவசாயி மிருதங்கக்காரர் அருகே போனார். அவர் அருகில் இருந்த மிருதங்கத்தைக் காட்டி 'இதுதான் மோளமாங்க?' என்று கேட்டார்.

அவரது அறியாமையை எண்ணிச் சிரித்துக் கொண்டு, 'இது மோளம் இல்லப்பா. மிருதங்கம்னு பேரு. பக்க வாத்தியம். கை விரலாலே தட்டி வாசிக்கணும்' என்றார் மிருதங்கக்காரர்.

கடத்தைச் சுட்டிக்காட்டி 'இது மண் பானையாங்க?' என்றார் விவசாயி. கடக்காரர் 'பானைதான். சாதாரணப் பானையில்ல. கடம்னு சொல்லறது, தட்டினா சுகமான நாதம் எழும்பும்' என்றார்.

'நான் என்னத்தைங்க கண்டேன். எந்தக் கச்சேரிக்கு போயிருக்கேன்? உங்களப் போல பெரிய மனிசாள் யாராவது வாசிச்சுக் கேட்டிருந்தாதானே எனக்கு எது என்னன்னு தெரியும்' என்றார் விவசாயி.

கடக்காரர் மிருதங்கக்காரரைப் பார்த்தார். மிருதங்கக்காரர் தலையசைத்தார். சங்கீதம் சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் போகவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. மிருதங்க வித்வான் மிருதங்கத்தை உறையிலிருந்து எடுத்து 'டம் டக்கிட டம் டக்கிட டம்' என்று தட்டினார்.

கட வித்வான் சும்மா இருப்பாரா? கடத்தை மடியில் வைத்துக் கொண்டு 'டிங் டிக்கிட டிங் டிக்கிட டிங்' என்று பதிலடி கொடுத்தார். அவ்வளவுதான். அடுத்த ஒரு மணி நேரம் அங்கே இசை மழை பொழிந்தது. அவர்கள் முடிக்கவும் அடுத்த ஸ்டேஷன் வரவும் சரியாக இருந்தது. பெட்டியில் எல்லோரும் கைதட்டினார்கள்.

விவசாயியும் நண்பரும் எழுந்தார்கள்.

விவசாயி வித்வான்களிடம், 'இந்த ஏழையோட வேண்டுகோளை மதிச்சு நீங்க வாசிச்சுக் காட்டினதுக்கு நன்றி. ரொம்ப நல்ல இருந்துது கச்சேரி' என்று சொல்லி விடைபெற்றார். ரயில் கிளம்பியது.

அவர்கள் மேம்பாலம் ஏறும்போது, நண்பர் கேட்டார் 'எப்பத்திலேருந்து சங்கீதத்துல உனக்கு ஆர்வம் வந்துது?'

விவசாயி சொன்னார் 'ஆர்வமாவது மண்ணாங்கட்டியாவது, அதான் பாத்தீல்ல. வண்டியில உட்கார இடமில்ல. உட்கார முடியாம இடத்தை அடச்சிட்டு ஒருத்தன் பக்கத்தில மோளத்தை வெச்சிருக்கான், இன்னொருத்தன் பானைய வெச்சிருக்கான். எடுத்து மடியில வெச்சிக்கடான்னா, கேட்க மாட்டானுக. அதெல்லாம் முடியாது இதுக்கும் டிக்கிட்டு வாங்கியிருக்கோம்னு பக்கத்தில தான் வெச்சிப்போம்னு வல்லடி வழக்கு பண்ணுவான். அதான் தந்திரமா அவனுகளை வாசிக்க வெச்சேன். லொட்டு லொட்டுனு தட்டிக்கிட்டு கிடந்தானுக, தலைவேதனையாதான் இருந்திச்சி, ஆனா நாம ரெண்டு பேரும் வசதியா உட்காந்துகிட்டு வர முடிஞ்சிதுல்ல?'

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com