''மனவளம் குன்றிய குழந்தைகளைச் செல்லம் கொடுத்துக் கெடுக்காதீர்கள்'' - அம்பிகா காமேஸ்வர்
டாக்டர் அம்பிகா காமேஸ்வரன் கர்நாடக இசைப் பாடகி மட்டுமல்ல பரதநாட்டிய கலைஞரும்கூட. இவருக்கு இன்னொரு முகமும் உண்டு. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக 'ரசா' என்றோர் அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார் என்பதே அது. நடனத்தின் மூலம் இந்தக் குழந்தைகளின் சிந்தனை, செயல் ஒத்திசை வை மேம்படுத்தித் தன்னம்பிக்கையை வளர்க்கலாம் என்று கண்டறிந்திருக்கிறார். 'ஸ்த்ரீரத்ன', 'பரத கலாரத்னா', 'சக்தி சேவா', 'கலாவதி' போன்ற விருதுகளை பெற்றவர்.

ஒரு காலைப்பொழுதில் அவரது 'ரசா' பள்ளிக்கூடத்தில் தென்றல் வாசகர்களுக்காக சந்தித்தபோது, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ரசா அளிக்கும் பயிற்சி பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். வாருங்கள் அவர் சொல்வதைக் கேட்போம்...

கே: ரசாவைப் பற்றிச் சொல்லுங்கள்...

ப: 'ரசா' தொடங்கி 16 வருடங்கள் ஆகிவிட்டன. இது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம். இத்தகைய குழந்தைகளுக்கு நாட்டியத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகளை அளித்து அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களின் அன்றாடப் பணிகளை யாரையும் எதிர்பார்க்காமல் செய்துகொள்ள உறுதுணை செய்கிறோம்.

கே: மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நாட்டியத்தின் மூலம் பயிற்சி எப்படி சாத்தியம்?

ப: நான் நாட்டிய அபிநயத்தில் முனைவர் பட்டம் பெற்றவள். நம் மனதில் உள்ள ஒரு கருத்தை அபிநயம் செய்து வெளிப்படுத்துவது 'நாட்டிய அபிநயம்' ஆகும். உதாரணமாக நான் மனசில் ஒன்றை நினைக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சாதாரண மாக வாயால், வார்த்தைகளால் சொல்ல வேண்டும். இப்படி வெளிப்படுத்துவதை வாசீக அபிநயம் என்று சொல்வார்கள். அங்க அசைவுகள் மூலமும் நம் கருத்தை மற்றவர் களுக்கு புரிய வைக்க முடியும். அல்லது உடை, அலங்காரங்கள் மூலமும் நம் கருத்தை சொல்லலாம். இதற்கு 'ஆகாதி அபிநயம்' என்று பெயர். அதுபோல் நம் கருத்தை மறைவாகவும் சொல்லலாம். இதற்கு 'சாத்வீக அபிநயம்' என்று பெயர். ஆக நாம் அன்றாட வாழ்வில் நான்கு முறைகளின் மூலம் மற்றவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறோம். மற்றவர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளாமல் நம்மால் இருக்க முடியாது. ஆக நாட்டிய அபிநயம் புத்தகத்தில் இருந்து செய்கைக்கு வந்து, செய்கையில் இருந்து நம் வாழ்க்கைக்கே வந்துவிட்டது. மேலும் நாட்டிய அபிநயத்தில் ஓர் ரசனை இருக்கிறது. எதையும் ஒரு நடனம், இசை வடிவில் கொடுக்கின்ற போது சின்னக் குழந்தைகளுக்கும்கூட ஆர்வம் வந்துவிடும். இந்தச் சிந்தனைதான் எங்கள் பயிற்சிகளின் அடிப்படை.

கே: இந்த வழியில் சென்று நீங்கள் வெற்றி கண்டுள்ளீர்களா?

ப: இங்கு நாட்டியம் என்றால் வெறும் நடனம் மட்டுமல்ல. நாடகம், இசை, ஓவியம், பூத்தையல் (எம்பிராய்டரி) ஆகிய எல்லா வற்றையும் உள்ளடக்கியதுதான் நாட்டிய அபிநயம் என்று சொல்கிறோம். இந்தப் பயிற்சிகளை அங்க அசைவு வராத குழந்தை களுக்கு அளிக்கிற போது, அவர்களுக்கு சுலபமாக அங்க அசைவுகள் வருவதைக் காணமுடிகிறது. அதுபோல் பேச தெரியாத ஒரு குழந்தைக்கு நாடகம் அல்லது நடனம் மூலமாகப் பயிற்சி அளிக்கின்ற போது அவர்கள் எளிதாக அதை கிரகித்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. பயிற்சிக்கு முன்பு இருந்த கிரகிக்கும் நிலையையும், பயிற்சிக்குப் பிறகு இருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆய்ந்து பார்த்தோம். பயிற்சிகள் வெற்றிகரமாகச் செயல்படுவதை அறிய முடிந்தது.

கே: குழந்தைகளின் திறமையை எப்படி அளவிடுகிறீர்கள்?

ப: எந்தக் குழந்தையையும் முதல் வகுப்பிலேயே நாங்கள் எடை போடுவதில்லை. முதலில் இங்கு வரும் குழந்தைகளுக்கு நாங்கள் எல்லாவிதமான பயிற்சிகளும் கொடுத்துவிடுவோம். அப்போது ஒவ்வொரு குழந்தைக்கும் எதில் அதிக ஈர்ப்பு இருக்கிறது என்பது தெரிந்துவிடும். குழந்தைகளுடன் பழகும் போதே அதன் விருப்பு, வெறுப்பு களைத் தெரிந்து கொள்ள முடியும்.

இரண்டு விதமான குழந்தைகள் இருக்கிறார்கள். சில குழந்தைகள் முதலில் படுசுட்டியாக இருக்கும். சில குழந்தைகள் தயக்கம் அதிகம் காட்டும். ஆகையால் ஒரு குழந்தையைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளக் குறைந்தது இரண்டு மாதம் ஆகும். குழந்தைகள் இந்த இடத்தில் இருக்கப் பழகிய பிறகே அக்குழந்தையைப் பற்றி நாம் கணிக்க முடியும். இதன் மூலம் குழந்தையின் ஈடுபாடுகள் தெரிய வரும். அதற்கேற்பப் பயிற்சி அளிக்கிறோம். ஒரு விஷயம் இங்கு சொல்ல வேண்டும். நிறையப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்பதை தாமதமாகத்தான் அறிந்து கொள்கிறார்கள். தாமதமாகவே எங்களை அணுகுகிறார்கள்.

கே: மனவளர்ச்சி குன்றிய குழந்தை களின் பெற்றோர்களுக்கு நீங்கள் கூறுவது என்ன?

ப: மனவளர்ச்சிகுன்றிய குழந்தைகளை வீட்டிலேயே எத்தனை நாளைக்குத்தான் பெற்றோர்கள் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ள முடியும்? இந்தக் குழந்தைகள் வெளியில் வந்து நான்கு பேருடன் பழகுவதற்கான சூழலைப் பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சாதாரணக் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்ப தற்கு நிறைய முயற்சி எடுக்கும் பெற்றோர் கள்கூட, மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க முயற்சிகள் எடுப்பதில்லை. காரணம் பயம். இத்தகைய பயம் அவசியம் இல்லை. இந்த அச்சத்தை நீக்கத்தான் நாங்கள் முயற்சி செய்கிறோம். இத்தகைய குழந்தைகளுக்காக 'ரசா' போன்ற சிறப்பு பள்ளிக்கூடங்கள் நிறைய இருக்கின்றன. இங்கு அளிக்கப்படும் பயிற்சிகளைப் பற்றிக் குழந்தைகளின் பெற்றோர்களுடன் கலந்துரையாடுவோம். அதுபோல் நாங்கள் அளிக்கும் பயிற்சிகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தங்கள் வீடுகளில் அளிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் எங்கள் பயிற்சியாளர் ஒருவரை வீட்டுக்கே அனுப்பி, குழந்தைகள் தங்கள் அன்றாட வேலைகளைத் தாங்களே செய்வதற்கான பயிற்சிகளை அளிக்கிறோம். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோர் களின் முக்கியப் பொறுப்பாகும். செல்லம் கொடுக்கிறோம் என்கிற பெயரில் இவர் களைக் கெடுக்கக் கூடாது. அவர்களின் அன்றாடப் பயிற்சிகளைத் தவிர்க்கக் கூடாது. இத்தகைய பயிற்சிகள்தான் குழந்தைகளுக்குக் கடைசி வரை துணை நிற்பது. இத்தகைய குழந்தைகளுக்குள் இருக்கும் பிடிவாதம் நாம் கொடுத்ததுதான். அதனால் இந்த பிடிவாதத்தை நாம்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். மாற்றத்துக்கு ரொம்ப நாள் ஆகும். ஆனால் மாற்ற வேண்டும். இதற்குப் பெற்றோர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை அத்தனையும் வேண்டும்.

கே: கைத்தொழில்களை 'ரசா' குழந்தைகளுக்குப் பயிற்றி வருவதைப் பற்றி...

ப: இதற்காகப் பயிற்சி யூனிட் ஒன்றை நாங்கள் 2001ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். இங்கு பயிலவரும் குழந்தைகளின் திறமைக்கேற்ப அவர்களுக்கு எம்பிராய்டரிங், தச்சுவேலை, ஓவியம், பெயிண்டிங் என்று கற்றுக் கொடுக்கிறோம். தற்போது சுமார் 20 பேருக்கு மேல் இங்கு பயிற்சி எடுக்கிறார்கள். இதன் மூலம் இவர்களுக்குத் தன்னம்பிக் கையும், வேலை வாய்ப்பும் கிடைக்க வழிவகை செய்கிறோம்.

கே: 'ரசா'வில் மொத்தம் எத்தனை குழந்தைகள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?

ப: மொத்தம் 100 குழந்தைகள் இருக் கிறார்கள். 25 பயிற்சி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். 5 வயதுக் குழந்தையிலிருந்து 50 வயது உள்ளவர்கள் வரை இங்கு இருக்கிறார்கள். 'ரசா'வை மிகுந்த சிரமத்துக்கிடையே தான் நடத்தி வருகிறோம். மாதாமாதம் பள்ளிக்கூடம் நடக்குமா என்ற நிலையில்தான் இன்றைய பொருளாதார நிலை இருக்கிறது. ஐந்து ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அரசு கொடுக்கிறது. மற்ற ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் பிற செலவினங்களுக்கான நிதியை நல்லமனம் படைத்தவர்கள் எங்களுக்குக் கொடுக்கிறார்கள். இந்நிறுவனத்தை நடத்த மாதம் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் எங்களுக்குத் தேவைப்படுகிறது. அதை நாங்கள் நன் கொடை மூலம்தான் பெறுகிறோம். குழந்தைகளின் பெற்றோர்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிப்பதில்லை.

கே: உங்கள் வெளிநாட்டு பயணங்கள்...

ப: சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளை எப்படி நடத்துகிறார்கள், இத்தகைய குழந்தைகளை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் போன்றவைகளை நேரில் சென்று பார்த்து அறிந்து கொண்டேன்.

உதவி செய்யவும் தொடர்புகொள்ளவும்:

Dr. Ambika Kameshwar
RASA - Ramana Sunritya Aalaya Trust
47, 1st sMain Road, R K Nagar
Chennai 600028
Tamil Nadu, India.

தொலைபேசி: (044) - 24939916
மின்னஞ்சல்: rasa_india@yahoo.com

******


டாக்டர் அம்பிகா காமேஸ்வரனின் பரதநாட்டிய சிஷ்யை ரேவதி!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தியாகராஜன், மகாலட்சுமி தம்பதியரின் மகள் ரேவதி. பிறக்கும்போதே குரோமஸோம் குறைபாடுகளுடன் பிறந்தவர். சென்னையில் உள்ள மாத்ரு மந்திர் பள்ளிக்கூடத்தில் படித்த ரேவதிக்கு நாட்டியத்தின் மேல் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இவரது பெற்றோர் டாக்டர் அம்பிகா காமேஸ்வரனை அணுகினார். தொடர்ந்து 14 ஆண்டுகள் இடைவிடாத பயிற்சி மேற்கொண்டு, 2003 ஆண்டு சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் அரங்கேற்றம் நடத்தி, பார்வையாளர்களை தன் நாட்டியத்தால் பரவசப்படுத்தினார் ரேவதி.

சந்திப்பு : கேடிஸ்ரீ

© TamilOnline.com