'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி
புதுக்கோட்டையில் 'ஞானாலயா' என்னும் பெயரில் பா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது சொந்தச் செலவில் 50000 நூல்கள், சஞ்சிகைகள், மலர்கள், தொகுப்புகள் என ஓர் அரிய களஞ்சியத்தையே சேகரித்து வைத்திருக்கிறார். இவருக்கு உறுதுணை திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி. இவரது சேவையைப் பாராட்டி மனிதநேய மாண்பாளர், புத்தக வித்தகர், வாழ்நாள் சாதனையாளர் என்று பல்வேறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஞானாலயா நூலக மேம்பாட்டுக் குழுவின் சார்பில் www.gnanalayalibrary.com என்னும் புதிய இணைய தள சேவையை கவிஞர் கனிமொழி, எம்.பி. தொடங்கி வைத்துள்ளார். எதிரொலி விசுவநாதன் எழுதிய 'அறிவுச் சோலை ஞானாலயா ஆய்வு நூலகம்' என்ற நூல் ஆர்.எம். வீரப்பன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

இனி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேட்டியில் இருந்து...

கே: புத்தகங்களைத் தேடித் தேடிச் சேகரித்து ஒரு நூலகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

ப: என்னுடைய தந்தையார் கே.வி. பாலசுப்ரமணியன் நல்ல படிப்பாளி. கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். எனது தாயார் மீனாட்சியும் நல்ல கல்வியறிவு உள்ளவர். தாத்தா கிருஷ்ணசுவாமி சிறந்த கல்வியாளர். இவர்களின் வழி வந்ததாலேயே எனக்கு சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதிலும், சேகரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. என் தந்தையார் ஒருமுறை சில நூறு புத்தகங்களை என்னிடம் கொடுத்து இவற்றை கவனமாகப் பாதுகாத்து வா, இதுபோன்ற பல நூல்களை நீயும் சேகரி என்று அறிவுறுத்தினார். ஒருமுறை யதேச்சையாக அந்தப் புத்தகங்களைப் புரட்டிய போது, அதில் என்னுடைய தாய்வழித் தாத்தாவான பொன்னுசாமி முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1873-ல் படித்த போது தமிழில் முதல் பரிசு பெற்றமைக்காக அளிக்கப்பட்ட பரிசுப் புத்தகத்தைக் கண்டேன். அத்தோடு என் தாத்தா கையெழுத்திட்ட 'தனிப்பாடல் திரட்டு' என்ற புத்தகமும் இருந்தது. அது எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்கள் வெகுநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்பதை அறிந்ததும் எனக்கு வியப்பாக இருந்தது. அதுமுதல் பழைய புத்தகங்களின் மீதான எனது காதலும் தேடுதலும் அதிகரித்தது. அதுதான் இன்று ஞானாலயாவாக வளர்ந்து நிற்கிறது.

கே: இந்த புத்தக சேகரிப்புப் பணியில் உங்களுக்கு உதவியாக இருந்தவர்கள் யார் யார்?

ப: என்னை உற்சாகப்படுத்தி, இவ்வளவு பெரிய நூலகம் உருவாவதற்கு மிக முக்கிய முழுமுதற் காரணமாக இருந்தவர் ஏ.கே. செட்டியார். பல புத்தகங்கள் எனக்குக் கிடைப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அவர்தான். சிறந்த காந்தியவாதி, 'குமரி மலர்' என்ற இதழுக்கு ஆசிரியர். உலகம் சுற்றிய முதல் தமிழர். மகாத்மா காந்தி பற்றிய குறும்படம் எடுத்து அதை அமெரிக்க ஜனாதிபதியையே பார்வையிட வைத்தவர். எனது தந்தையாரும் என்னைப் புத்தகங்கள் படிக்க ஊக்கப்படுத்தினார். அவர் இறக்கும் வரை புத்தகம் படித்துக் கொண்டிருந்தவர். எங்கள் குடும்பத்தில் மொத்தம் பன்னிரண்டு குழந்தைகள். நான் எட்டாவது பிள்ளை. அதனால்தான் கிருஷ்ணரின் நினைவாக எனக்கும் கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்தார்கள்.

அடுத்து எனது வாழ்வில் நான் மிக முக்கியமானவராகக் கருதுவது வி.ஆர்.எம். செட்டியார் அவர்களைத்தான். சிறந்த தமிழறிஞர், செல்வந்தர். தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழி பெயர்த்தவர். அவரை நேரில் சந்தித்த போது, அவரிட மிருந்த புத்தகங்களின் எண்ணிக்கையைக் கண்டு மலைத்துப் போனேன்.

என் துணைவியாரான டோரதியும் எனக்குப் புத்தக சேகரிப்புப் பணியில் உதவி வருகிறார். அடுத்து மிக முக்கியமானவர் முறையூர் சொக்கலிங்கம் செட்டியார். சாமிநாத சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தை உருவாக்கியிருந்தார். ரோஜா முத்தையா செட்டியாருடனான தொடர்பும் எனக்குப் பல விதங்களில் உதவியாக இருந்தது.

கே: 'ஞானாலயா' என்ற பெயருக்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா?

ப: ஆரம்பத்தில் 'மீனாட்சி நூலகம்' என்று எனது தாயாரின் பெயரில் இந்த நூலகத்தை நடத்தி வந்தேன். நெருக்கமான பலரும் இது ஏதோ வாடகை நூல் நிலையத்தின் பெயர் போலவே உள்ளதாகத் தெரிவித்தனர். எனவே வேறு பெயர் சூட்டுவது என்று முடிவு செய்தோம். 'ஞான ஆலயம்' என்றால் அறிவுக் கோவில் எனப் பொருள், எனவே 'ஞானாலயா' என்று பெயர் சூட்டலாம் என என் மனைவி யோசனை கூறினார். 1987-ல் பிறந்த ஞானாலயா இன்று ஓர் ஆய்வுக் கூடமாகப் பரிணமித்து நிற்கிறது.

கே: உங்கள் துணைவியார் குறித்து...

ப: என் துணைவியார் நான் பணியாற்றிய பள்ளியில் உடன் பணியாற்றியவர். இருவருக்குமே ஒருவிதமான புரிதலும், ஒத்த சிந்தனைப் போக்கும், நல்ல நட்பும் இருந்தது. அது அவர் வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போன பின்னரும் தொடர்ந்தது. பின்னர் வி.ஆர்.எம். செட்டியாரின் ஆலோசனைப்படி நாங்கள் மணம் செய்து கொண்டோம். இருவரும் சேர்ந்து பல ஊர்களுக்கு, புத்தகங்களைத் தேடிப் பயணம் செய்திருக்கிறோம். இங்கு ஆராய்ச்சிக்கு வருவோரை அவர்தான் உடன் இருந்து கவனித்துக் கொள்கிறார். நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பராமரிப்பது முதல் அவற்றை ஒழுங்குபடுத்துவது, பைண்டிங் செய்வது, வரிசைப்படுத்துவது என அனைத்துப் பணிகளையும் நேர்த்தியாகச் செய்து வருவது அவர்தான்.

கே: இவ்வளவு புத்தகங்களையும் தனி ஒருவராக நீங்கள் எப்படிச் சேகரித்தீர்கள்? அது பற்றிய அனுபவங்கள் பற்றி..

ப: மிகவும் பொறுமை தேவை. அலைச்சல்களுக்கும் ஏமாற்றத்திற்கும் குறைவிருக்காது. குறிப்பாக செட்டிநாட்டுப் பகுதியில் நாள் முழுக்க, காலை முதல் மாலை வரை காத்திருந்து வெறும் கையுடன் திரும்பியிருக்கிறேன். ஆனாலும் உள்ளம் சோர்ந்து போவதில்லை. விளக்கு வைத்தபின் எதுவும் கொடுக்கக் கூடாது என்பது நகரத்தார்கள் பின்பற்றி வரும் பழக்கம் என்பதால் நான் அதற்காக வருத்தம் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வேன். அப்போதெல்லாம் இப்பொழுது உள்ளது போல் பேருந்து வசதி கிடையாது. வாடகை சைக்கிள் தான். நாமக்கல்லில் இருந்து பேருந்தில் புறப்பட்டுத் திருமயம் சென்று அங்கிருந்து சைக்கிளிலேயே ராயவரம் போன்ற பகுதிகளுக்குச் செல்வதுண்டு. விடுமுறை நாட்களை புத்தகம் தேடுவதற்காகவும், சேகரிப்பதற்குமாகவே ஒதுக்கிக் கொள்வேன். எனது 19ஆம் வயதிலிருந்தே இந்தப் பணியில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

கே: இந்த நூலகத்தை எப்படிப் பராமரிக்கிறீர்கள்? அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து...

ப: இதுநாள் வரை எங்கள் கைப்பணத்தைக் கொண்டுதான் இந்த நூலகத்தை உருவாக்கியுள்ளோம். அவ்வப்பொழுது சில நன்கொடையாளர்கள் அளிக்கும் பணமும் அலமாரிகள், நாற்காலிகள் வாங்கவும், நூலகப் பராமரிப்புக்குமே சரியாகப் போய்விடும். எங்கள் ஓய்வூதியம், பி.எ·ப்., கிராச்சுவிட்டி போன்றவற்றைக் கொண்டுதான் புத்தகங்கள் வாங்கினோம். நிலம் வாங்கினோம். கட்டடம் கட்டினோம். எல்லாமே சுய உழைப்புச் சம்பாத்தியமே அன்றி வேறில்லை. ஆனாலும் தற்பொழுது இதனை பராமரிப்பது சற்று கடுமையாகத்தான் உள்ளது. புத்தகங்களை பூச்சிகள் அரிக்காமல் இருக்க நாப்தலின் வாங்குவது, தூசி படியாமல் தினம்தோறும் சுத்தம் செய்வது, மின்சாரக் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் எனச் செலவு கட்டுகடங்காமல் போய்க் கொண்டு இருக்கிறது. மேலும், சமீபத்தில் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பெரிய விபத்தால், லட்சக்கணக்கான ரூபாய் கையிருப்பு மருத்துவ சிகிச்சைக்கே சரியாகப் போய்விட்டது. ஆகவே நூலகத்துக்கான நிதிக்கும், பராமரிப்புக்கும் மிகுந்த பணத்தேவை உள்ளது. ஆகவேதான், தற்பொழுது இங்கு வந்து தங்கி ஆய்வு செய்யும் மாணவர்களுக்காக ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதன்படி ஆய்வு மாணவர் 1000 ரூபாய் மட்டும் செலுத்தினால் அவர் ஞானாலயாவின் ஆயுள் உறுப்பினர் ஆகி விடுவார். அவர் ஞானாலயாவை தனது ஆயுள்காலம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தப் பணமும் நூலகத்தின் பராமரிப்புக்குத் தானே அன்றி வேறு எதற்கும் இல்லை.

கே: யார் வேண்டுமானாலும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா? அல்லது மாணவர்கள், ஆய்வாளர்கள் போன்றோரை மட்டும் தான் இந்த நூலகத்தில் அனுமதிப்பீர்களா?

ப: மாணவர்கள், ஆய்வாளர்கள் மட்டுமல்ல; எல்லோருக்காகவும் தான் ஞானாலயா. யார் வேண்டுமானாலும் வரலாம். இங்குள்ள பள்ளி மாணவர்கள் அடிக்கடி வந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர். பல்வேறு போட்டியில் பங்குபெறுகின்றனர். பரிசு பெறுகின்றனர். கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வந்து பார்வையிட்டு, குறிப்புகள் விவரங்கள் சேகரித்துச் செல்கின்றனர். சிறு கருத்தரங்கங்களும் அவ்வப்போது இங்கு நடப்பதுண்டு. சமீபத்தில் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளி லிருந்து கூட மாணவர்கள் வந்து தங்கி ஆய்வு செய்தனர்.

கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

ப: இது வெறும் நூலகம் மட்டும் அல்ல. நமது சமூகத்தின் பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் பற்றிய ஆவணக் காப்பகமும் கூட. பழைய நூல்கள் பலவற்றை டிஜிடைஸ் செய்ய வேண்டும். அல்லது மைக்ரோ ·பிலிமில் பதிய வேண்டும். பல்வேறு பழைய இதழ்கள், பத்திரிகைகள் முதலியவற்றைத் தேடிப் பாதுக்காக்க வேண்டும். அவற்றை ஆவணப்படுத்த வேண்டும். எனக்கு 65 வயதாகி விட்டது. எனது துணைவியாருக்கும் வயதாகி விட்டது. ஞானாலயா எங்கள் தனிப்பட்ட இருவரின் சொத்தல்ல. இந்த மொத்த தமிழ்ச் சமுதாயத்தினருக்கே உரித்தானது. இது உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இதற்காக, தற்பொழுது இங்குள்ள நூல்கள் பற்றிய விவரங்களை இணையத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். அதற்கான கட்டணம், சேவை, மாதாந்திரத் தொகை போன்றவையும் மிக அதிகமாகும் போல் உள்ளது.

குறிப்பாக, இங்குள்ள புத்தகங்களின் விவரப் பட்டியலை, தலைப்பு வாரியாக, துறை வாரியாகப் பிரித்து தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது. அதற்கான ஆள்பலம் எங்களிடம் இல்லை. சில நண்பர்களின் உதவியுடன் நாங்களே சிரமப்பட்டுச் செய்கிறோம். பட்டியலிடவும், அதைக் கணினியில் ஏற்றவும் உதவினால் மிகவும் நல்லது.

கே: உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை என்ன?

ப: எங்களிடம் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஆங்கிலப் புத்தகங்களும் அடங்கும். துறைவாரியாகவும், நூல் பெயர் வாரியாகவும் அவற்றை வரிசைப்படுத்தியுள்ளோம். ஆகவே தேடி எடுப்பது மிக எளிது. காந்தி, விவேகானந்தர், பாரதியார் என்று எழுத்தாளர் வாரியாகவும் வரிசைப்படுத்தி உள்ளோம். விழா மலர்கள், செய்தித் தொகுப்புகள், கட்டுரைகள், தின இதழ்கள் என்று தனியாகவும் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசனின் 'நாரதர்' தொகுப்பு எங்களிடம் உள்ளது. குமரிமலர், ஏ.கே.செட்டியாரின் உலக நாடுகள் குறித்த பயண நூல்கள், சக்தி வை. கோவிந்தனின் பிரசுரங்கள் என பல்வேறு இதழ்களையும், நூல்களையும் நாங்கள் தொகுத்து வைத்திருக்கிறோம்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தத்துவங்கள் பற்றிய பல பழைய தமிழ் நூல்கள் எங்களிடம் உள்ளன. அந்தக் காலத்திலேயே அவருக்குத் தமிழகத்தில் எவ்வளவு செல்வாக்கு இருந்தது என்பதை இந்த நூல்களைப் படித்தால் உணர முடியும். ஜம்புநாதன் தமிழாக்கிய வேதத் தொகுப்புகளும் உள்ளன. அக்காலத்தில் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்ட பல நூல்களும் எங்களிடம் உள்ளன.

எங்களிடமிருந்து பெற்று மறுபதிப்பு கண்ட நூல்கள் ஐநூறாவது இருக்கும் என்று தாராளாகச் சொல்லலாம்.

முதல் பதிப்புப் புத்தகம் சேகரிப்பதில் நான் தனி ஆர்வம் காட்டி வந்திருக்கிறேன். முதல் பதிப்புகள் அனைத்துமே பொக்கிஷம் போன்றவை. அவை வெறும் புத்தகமாக மட்டுமல்லாமல் பல்வேறு வரலாற்றுப் பின்னணி கொண்டவையாக இருக்கும். குறிப்பாக பாரதியின் சுதேச கீதங்கள், உ.வே.சா.வின் மணிமேகலை போன்றவற்றின் முதல் பதிப்பில் இடம்பெற்ற பல விஷயங்கள் அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் இல்லை.

கே: நீங்கள் தமிழகத்தின் தனியார் நூலகங்களிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறீர்கள். இதை எப்படிச் சாதித்தீர்கள்?

ப: எங்களுக்கு ஆர்வம், பொழுது போக்கு எல்லாமே புத்தகம் சேகரிப்பதுதான். எங்களது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அதில் ஆர்வம் இருந்தது. எங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் வரை திரைப்படம், நாடகம் என எந்தப் பொழுது போக்கு அம்சங்களிலும் ஆர்வம் காட்டாமல் சதா புத்தகப் பணியிலேயே இருந்தோம். ஒருமுகப்பட்ட கடும் உழைப்புதான் நூலகத்தின் உயர்வுக்குக் காரணம்.

மற்ற நூலகங்களில் நூலகர் உங்களுக்குத் தேவையான நூல்களைத் தேடி எடுத்துத் தரலாம். ஆனால் இங்கு உங்களுக்குத் தேவையான நூல் என்ன, அதன் பின்னணி, பதிப்பு பற்றிய வரலாறு, அதோடு தொடர்புடைய பிற சம்பவங்கள், பிற நூல்கள் என எல்லாவற்றையும் ஒருங்கே தெரிந்து கொள்ள முடியும். என்னால் விளக்கவும் முடியும். இங்குள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களில் எந்தப் புத்தகம் எந்த அலமாரியில் எந்த வரிசையில் உள்ளது என்பதை என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். எங்களுக்கு வரும் எந்தப் புத்தகமாக இருந்தாலும், நான் படித்துப் பார்த்த பின்புதான் உள்ளே அலமாரிக்குச் செல்லும். அதுவரை அதைத் தனியாகத்தான் அடுக்கி வைத்திருப்போம்.

கே: இங்கு வந்து தங்கியிருந்து ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கு என்ன உதவிகளைச் செய்து வருகிறீர்கள்? அதற்கான கட்டணம் என்ன?

ப: இதுநாள் வரை இவ்வளவுதான் கட்டணம் என்று எதுவும் வசூலித்ததில்லை. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி ஆய்வு செய்பவர்களுக்குத் தங்கும் இடம், தனியறை போன்ற வசதிகளை நாங்கள் சொந்தச் செலவில்தான் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களிடம் முன்னரே இடவசதி பற்றி அறிந்து கொண்டபின் வருவதே நல்லது. இடம் கிடைக்காமல் போவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு.

கே: தென்றல் வாசகர்கள் உங்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?

ப: வாசகர்கள் தங்களிடமுள்ள பழங்கால இதழ்களை, தொகுப்புகளை, நூல்களை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். நூலகப் பராமரிப்பு, இணைய சேவை போன்றவற்றுக்கு உதவினால் மகிழ்ச்சிதான். நிலம் வாங்க வேண்டும், நூலகத்தை விரிவாக்க வேண்டும் என்று பல திட்டங்கள் உண்டு. சமீபத்தில் நூலகத்துக்கு வந்து பார்வையிட்ட பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு நூலக வளர்ச்சிக்கு ஆவன செய்வதாகக் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் ரகுபதி அவர்களும் உதவி செய்வதாக உறுதி கூறியிருக்கிறார். ஆர்.எம்.வீ. போன்றவர்கள் உதவி புரிந்து வருகிறார்கள். வாசகர்களும் தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு உதவினால் மகிழ்ச்சிதான்.

முகவரி:
ஞானாலயா ஆய்வு நூலகம்
எண்.6, பழனியப்பா நகர்
திருக்கோகர்ணம் அஞ்சல்
புதுக்கோட்டை - 622002
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 04322-221059
செல்பேசி: +91 9965633140

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com