டொமினிக் ஜீவா
இன்று ஈழத்துத் தமிழ்ச் சூழலில் எண்பது வயதைக் கடந்தும் சுறுசுறுப்புடன் ஓர் இளைஞராக இயங்கி வருபவர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னந்தனி மனிதராக நின்று 'மல்லிகை' என்னும் இலக்கிய இதழையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார். இதனால் டொமினிக் ஜீவா 'மல்லிகை ஜீவா' என்ற செல்லப் பெயருக்கும் சொந்தக்காரர்.

ஜீவா எழுத்துத் துறையில் 1940களில் நுழைந்து 1960களில் தனது முதல் சிறுகதைத் தொகுதியான 'தண்ணீரும் கண்ணீரும்' எனும் தொகுதியை வெளியிட்டார். அந்த ஆண்டு இத்தொகுதிக்கு இலங்கை அரசு சாகித்தியப் பரிசு வழங்கி கௌரவித்தது.

யாழ்ப்பாணத்தில் சாதாரண வறிய குடும்பத்திலே 1927ஆம் ஆண்டு ஜீவா பிறந்தார். சிறுவயதிலேயே முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தார். இந்தப் பார்வையே இவரது இலக்கிய ஆளுமை யையும் படைப்பாக்க உந்துதலையும் ஆற்றுப்படுத்தியது. முற்போக்கு எழுத்தாள மரபின் முன்னோடிகளுள் ஒருவராக வளர்ந்தார். ஈழத்து முற்போக்கு இலக்கியத் தின் இயக்கச் செயற்பாட்டாளர்களுள் முதன்மையானவராகவும் உருப்பெற்றார்.

இவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப் பாணச் சமூகத்தில் அடக்கியொடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் துன்பங்களையும் வாழ்வியலையும் உணர்வுபூர்வமாகச் சித்திரிப்பவையாக இருந்தன. வாசிப்பவர்கள் மத்தியில் பெரும் வீச்சுடன் அனுபவம் விரிவுகொள்ளச் சிறுகதைகள் சாதகமான சூழல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. இந்த ரீதியில் ஜீவாவின் கதைகள் யாழ்ப்பாணச் சமூக மனிதர்களின் வெவ்வேறுபட்ட உணர்திறன்களை, வாழ் வியல் போக்குகளை அடையாளம் காட்டுகின்றன.

ஜீவாவின் படைப்புலகம் சாதியத்தின் பிடிக்குள்ளான மனித வாழ்வின் அழுத்தங்கள், துடிப்புகள் மற்றும் அவர்களது போராட்டங்கள், நம்பிக்கைகள், எதிர் பார்ப்புகள் போன்ற பகைப்புலத்தில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. வாழ்வியல் தரிசனம் முழுவீச்சுடன் உட்கிடக்கையாக மேற்கிளம்பும் பண்புகளின் வேகத்தைவிட இலட்சியங்கள் நம்பிக்கைகளின் வேகம் பன்மடங்காகின்றது. இதனால் கதையாடலின் உள்ளசைவில், கட்டுமானத்தில் சேதாரம் நிகழ்வதையும் மறுப்பதற்கில்லை. முற்போக்கு கலை இலக்கியத்தின் செழுமை, அழகியல் முழுமையாக தமிழில் உள்வாங்கப்பட்டு சமூகமயமாகும் முறைமை உறுதியாகவும் தெளிவாகவும் வளர்த்தெடுக்கப் படவில்லை. இதனால் ஜீவாவின் படைப்புலகமும் இந்தக் குறைபாடுகளுக்கு உட்பட்டதுதான்.

'தண்ணீரும் கண்ணீரும்', 'பாதுகை', 'வாழ்வின் தரிசனம்', 'சாலையின் திருப்பம்' போன்ற சிறுகதைத் தொகுப்புகளின் மூலம் மௌனம் காக்கப்பட்ட சில விடயங்கள் பேசுபொருட்கள் ஆக்கப்படுகின்றன. மௌனம் உடைபட்டு எதார்த்த வாழ்வின் உட்கிடக்கையின் சமூகத்தன்மை அம்பலப்படுத்தப் படுகின்றது. ஜீவா, டானியல் போன்ற தலைமுறை எழுத்தாளர்களின் இயக்கம் சமூக சனநாயகத் தன்மையை வேண்டிநின்றது. வெறும் கலை இலக்கிய அழகியல் சார்ந்த பின்புலத்தில் மட்டுமே வைத்து நோக்கக் கூடியதல்ல. மாறாக அதன்மூலம் வெளிப்படும் அரசியல் கருத்துநிலை போன்ற அம்சங்களும் முக்கியம். ஆக அழகியல், அரசியல் இரண்டையும் ஒருங்கே கொண்ட ஆக்கவியல் அம்சங்கள் பற்றிய மிக நுணுக்கமான பார்வை தெளிவும் விரிவும் பெற வேண்டும். அப்பொழுதுதான் ஜீவா போன்ற தலைமுறை எழுத்தாளரின் இலக்கியத் தகுதியை நாம் தெளிவாக இனங்காண முடியும்.

நாம் எழுதுவன மாத்திரம் முக்கியமாவதில்லை. எழுதப்பட்டது எவ்வாறு அமைந்துள்ளது என்பதும் இங்கு முக்கியம். ஆகவே இலக்கியப் படைப்புப் பற்றிய சிந்தனையின் தேடலும் எம்மிடையே இன்னும் விரிவுபெற வேண்டும். அப்பொழுது ஜீவாவின் படைப்புலகம் பற்றிய புதியதொரு பார்வை நமக்குப் புலனாகும்.

ஜீவா 1996-ல் தனது 70 வருட வாழ்வின் தொடக்கத்தின் சின்னமாக டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் என்னும் தொகுப்பை வெளியிட்டார். சிறுகதை ஆசிரியர் ஒருவரை இத்தொகுப்பு அடையாளப்படுத்தியது. மேலும் ஜீவாவின் படைப்புலகம் சார்ந்து தீவிரமாக வாசக மனம் இயங்குவதற்கான சாத்தியங் களையும் திறந்துவிட்டுள்ளது. ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் செல்நெறி வெளிப்பாடுகள் பற்றிய சிரத்தைக்கும் தேடலுக்கும் கூட இத்தொகுப்பு ஒரு ஆவணமாகவே உள்ளது.

டொமினிக் ஜீவாவின் படைப்புலகம் சார்ந்த எமது பயணிப்பு நிகழும்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த மொழி, பண்பாட்டுச் சூழலுக்குத் தகுந்தபடி சில எழுத்தாளர்கள் வெளிப்பட்டுள்ளார்கள் என்ற சமூக எதார்த்தம் எமக்குப் புலனாகும். ஜீவாவும் அத்தகைய ஒருவரே.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com