தென்றல் பேசுகிறது
அமெரிக்காவில் வீட்டு விலைகள் சரிந்துகொண்டிருக்கின்றன. சென்ற பத்தாண்டுகளில் மிகப் பெரிய விலையேற்றம் கண்ட கலி·போர்னியா மாநிலத்தில் மட்டுமல்ல, அவ்வளவாக உயராத சிகாகோ மின்னியாபொலீஸ், ஹூஸ்டன் ஆகிய இடங்களிலும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. 'விலை ஆங்காங்கே குறையலாம், ஆனால் தேசம் முழுவதிலுமாகச் சரியாது' என்று கூறிய பண்டிதர்கள் இதை விளக்கத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கூப்பிட்டுக் கூப்பிட்டு வீடு வாங்கக் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளன. Lehman Brothers, Citigroup, Bear Stearns ஆகிய பங்குகளைத் தற்போது வாங்குவது உசித மில்லை என்பதாக மெரில் லிஞ்ச் கூறிவிட்டது. இவை வால்ஸ்ட்ரீட்டின் சூடான பங்குகள். இவற்றுக்கே இந்த கதி என்றால்? Dow குறியீட்டெண் ஆகஸ்ட் மாதம் 9 அன்று 387 புள்ளிகளும், 28 அன்று 280 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தது. பரவலாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்த வீட்டு விலைச் சரிவின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கப் பங்குச் சந்தைக் குறியீடு விழுந்தால் ஆசிய, ஐரோப்பியப் பங்குகளும் உடன் சேர்ந்து சரிவது தற்போதைய உலகமயத்தின் புதிய அடையாளம். உள்நாட்டுப் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, நிறுவனங்களின் ஆரோக்கியம் போன்றவை சிறப்பாக இருந்தாலும் பங்குச் சந்தை சரிவது நோக்கர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. 'பனைமரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெறி கட்டுவது' என்பது இதுதானோ!

*****


சேலத்தில் ஒரு ரயில்வே நிர்வாகப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிப் போராட்டம் ஒன்றை தி.மு.க. ஏற்பாடு செய்தது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் மிக சிரத்தையோடு சேலம் ரயில் நிலையத்தின் சிக்னல் விளக்குகளை உடைத்தனர்; இருப்புப் பாதையின் குறுக்கே லாரி லாரியாக மலை மண்ணைக் கொட்டி வழி மறித்தனர். இருப்புப் பாதையையும் அதன் பொறிகளையும் சேதப்படுத்தினர். கேரளத்திலிருந்து வந்த ரயில்களை நிறுத்தி அதிலிருந்த பயணிகளைக் கீழே இறங்கச் செய்தனர். ரயில் பெட்டிகளை உடைத்தனர். முற்றிலும் அரசியல் பிராணியாக மாறிவிடாத, தேசப்பற்றுள்ள எந்தக் குடிமகனுக்கும் இந்தக் காட்சிகள் ரத்தத்தைக் கொதிக்க வைத்திருக்கும்.

போராட்டம் என்பது ஆளும் அரசை எதிர்ப்பது. இந்த விஷயத்தில் பார்த்தால், ரயில் துறை மத்திய அரசிடம் இருக்கிறது. மத்திய அரசில் தி.மு.க.வும் ஓர் அங்கம்தான். மத்திய அமைச்சரவையில் பல தி.மு.க.வினர் முக்கியப் பதவிகளை வகிக்கின்றனர். தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு ரயில் அமைச்சர் நெருங்கிய நண்பர்; காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளது. இப்படி இருக்கும் போது பொதுச் சொத்தைச் சேதப்படுத்தி, பயணிகளை மிகுந்த சங்கடங்களுக்கு உள்ளாக்கிய இப்படிப்பட்ட போராட்டத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

*****


இதை எழுதும் சமயத்தில், யூ.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்குச் சானியா முன்னேறியிருக்கிறார். அவரது ஏ.டி.பி. தரவரிசை 27 ஆகியிருக்கிறது. யூ.எஸ். ஓபனில் அவரது இடம் 26. இவரையும், புதிதாகத் தோன்றியுள்ள, சர்ச்சைக்குரிய ICL-ஐயும் கூர்ந்து பார்க்கிறது தென்றல். இந்த முறை நேர்காணலில் இடம் பெற்றிருக்கும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, அம்பிகா காமேஷ்வர் ஆகியோர் குறிப்பிடத்தக்க சமுதாயப் பணிகளுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

ஹாலிவுட்டில் பலரது கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் அருண் வைத்யநாதன் இளம் இயக்குநர். பெரும் சாதனைகளின் வாயிலில் நிற்பவர். 'தென்றல்' அவரைப் படம் பிடித்திருக்கிறது இந்த இதழில்.

*****


பல இடங்களிலும் தென்றல் இதழ்கள் சென்றவுடனே தீர்ந்துபோய் விடுகின்றன. இன்னும் தேவை என்ற குரல் கேட்கிறது. தவிர ·ப்ளோரிடா, ஹ¥ஸ்டன் போன்ற புதிய இடங்களிலும் தென்றல் உலவத் தொடங்கியுள்ளது.

தென்றல் சிறுகதை மலருக்குப் பல பகுதிகளிலிருந்தும் மிக உற்சாகமாகப் பலர் சிறுகதைகள் எழுதி அனுப்பி உள்ளனர். கதைகள் பரிசீலனையில் உள்ளன. இந்தப் பங்களிப்பு தென்றலுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

*****


விநாயக சதுர்த்தியும் கிருஷ்ண ஜெயந்தியும் வருகின்றன. வாசகர்களுக்குப் பண்டிகைக் கால வாழ்த்துகள்.


செப்டம்பர் 2007

© TamilOnline.com