சிகாகோவில் அரோரா ஆலயத்தின் ஆதரவில் நடைபெற்ற மெல்லிசை நிகழ்ச்சியில் கலைமாமணி பி.சுசீலா அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். பலகுரல்களில் பாடி அமெரிக்காவில் பிரபலமாக விளங்கும் ஐங்கரன், இன்னும் மேடைநிகழ்ச்சிகள் வழங்கி வரும் சுதா வெங்கட், ரஜனி பிரசாத் மற்றும் ஹரிநாத் ராஜீவ் ஆகியோரும் இந்த மெல்லிசை மழையில் தேன் வார்த்தனர்.
என்றும் தெவிட்டாத 'சரவணப் பொய்கையில் நீராடி', 'கங்கைக்கரைத் தோட்டம்', 'கண்ணா, கருமைநிறக் கண்ணா' ஆகியவற்றை சுசீலா பாடியபோது சில விழிகளில் நீர் துளிக்கால் இல்லை. சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் 'தேவன் கோவில் மணி ஓசை'யை ஐங்கரன் ஒலித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தது அரங்கம். 'மதுரா நகரில் தமிழ்ச்சங்கம்' என்று பி. சுசீலாவுடன் சேர்ந்து பாடவும் நெகிழ்ந்தது. ஐங்குரலோன் ஐங்கரன் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற கர்ணன் படப்பாடலைப் பாடவும் எழுந்த கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது.
'முத்தமிழில் பாட வந்தேன்' என்று இசைத்த சுதா வெங்கட்டை எதிர்பாராது தன்னுடன் 'அம்மா என்பது தமிழ் வார்த்தை'யைப் பாட சுசீலா அவர்கள் அழைத்ததும் அரங்கின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ரஜினி பிரசாத் 'சொன்ன சொல்லை மறந்திடலாமோ' என்ற தன் இனிய குரலில் வழங்கினார்.
அமெரிக்காவின் பல இடங்களிலும் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளில் முதலாவது இது. |